கியூபா: விமானம் விபத்துக்குள்ளானதில் 100க்கும் மேற்பட்டோர் பலி

படத்தின் காப்புரிமை EPA
Image caption கியூபா: விமானம் விபத்துக்குள்ளானதில் 100க்கு மேற்பட்டோர் பலி

கியூபாவின் தலைநகரான ஹவானாவிலுள்ள மார்டி சர்வதேச விமான நிலையம் அருகே போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளானதில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்று கியூபாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

விபத்திலிருந்து தப்பித்த மூன்று பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித்தாளான ’கிரான்மா’ செய்தி வெளியிட்டுள்ளது.

போயிங் 737 விமானம், உள்ளூர் நேரப்படி 12:08 மணியளவில், கியூபாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஹொல்கூன் நகரத்திற்கு கிளம்பியது.

விமானத்தில் 110 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெக்சிகோ நாட்டை சேர்ந்த ஆறு விமான ஊழியர்கள் விமானத்தில் இருந்துள்ளனர். பயணிகள் பெரும்பாலோனோர் கியூபா நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், அதில் ஐந்து பேர் வெளிநாட்டவர்கள் என்றும் அரசு வலைதளமான ’கியூபாடிபேட்’ கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

கியூபாவின் அரசு விமான நிறுவனத்திற்கு, இந்த விமானத்தை கியூபாவின் ஏரோனீனஸ் டாமோஹ் நிறுவனம் குத்தகைக்கு விட்டிருந்தது.

இந்த விமானம் 1979ல் கட்டப்பட்டது என்றும், கடந்த நவம்பரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது என்றும் மெக்சிகன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

''விமானம் மேலே கிளம்பிய போது ஒரு பிரச்சனை ஏற்பட்டது. இதனால் விமானம் கீழே விழுந்தது'' என மெக்சிகன் போக்குவரத்து துறை தனது வலைதளத்தில் கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

''விமானம் மேலே கிளம்பியதை பார்த்தேன். திடீரென விமானம் திரும்பி, கீழ் நோக்கி வந்தது'' என ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார் சூப்பர்மார்க்கெட் பணியாளரான ஜோஸ் லூயிஸ்.

''இது ஒரு துரதிருஷ்டவசமான விமான விபத்து. இறந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பர்கள் என அஞ்சப்படுகிறது'' என கூறியுள்ளார் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட கியூபா அதிபர் மிகுவல் டயஸ்-கேனெல்.

படத்தின் காப்புரிமை Reuters

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்