வெனிசுவேலா தேர்தல்: மீண்டும் அதிபராகிறார் நிக்கோலஸ் மதுரோ

வெனிசுவேலா

பட மூலாதாரம், AFP

வெனிசுவேலாவில் நடந்து முடிந்த தேர்தலில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, மீண்டும் அந்நாட்டின் அதிபராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார். இத்தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

கடுமையான பொருளாதார நெருக்கடியால் நாட்டின் நிலவி வரும் உணவு பற்றாக்குறைகளுக்கு இடையே நடந்த தேர்தலில் வெறும் 46% ஓட்டுகளே பதிவாகியுள்ளது.

வாக்குப்பதிவு முடிந்தவுடன், தேர்தல் முடிவுகளை நிராகரிப்பதாகப் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் ஹென்றி ஃபால்கோன் கூறியுள்ளார்.

''தேர்தல் நடந்த விதம் சரியான முறையில் நடக்கவில்லை. எனவே வெனிசுலாவில் புதிய தேர்தல்களை நடத்த வேண்டும்'' என அவர் கூறியுள்ளார்

90% ஓட்டுக்கள் எண்ணப்பட்ட நிலையில், நிக்கோலஸ் மதுரோ 67.7% ஓட்டுகளைப் பெற்றுள்ளதாகவும், ஃபால்கோன் 21.2% ஓட்டுகள் பெற்றுள்ளதாகவும் தேசிய தேர்தல் கவுன்சில் தலைவர் அறிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Reuters

கராகஸில் உள்ள தனது அதிபர் மாளிகைக்கு வெளியே காத்திருந்த ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய மதுரோ, ''அவர்கள் என்னை குறைத்து மதிப்பிட்டுவிட்டனர்'' என்றார்.

மதுரோவுக்கு ஆதரவாக வாக்குப்பதிவில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சி வேட்பாளர் ஃபால்கோன் கூறுகிறார்.

தேர்தல் "சுதந்திரமான மற்றும் நியாயமான" விதத்தில் நடந்தது என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் வாக்குப்பதிவைப் புறக்கணிப்பு செய்தனர்.

தேர்தல்கள் 2018 டிசம்பரில் நடந்திருக்க வேண்டும். ஆனால், மதுரோ ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்ட தேசிய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம், தேர்தல் முன்பே நடத்தப்பட்டது.

''எதிர்கட்சி கூட்டணிக்குள் இருக்கும் பிளவுகளை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள தேர்தல் முன்பே நடத்தப்பட்டது'' என எதிர்க்கட்சியான ஜனநாயக யூனியன் கூட்டணி கூறுகிறது. இக்கூட்டணியின் இரண்டு முக்கிய வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டனர். வேறு சில வேட்பாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

சில சிறிய வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டாலும், இறந்துபோன வெனிசுவேலா அதிபர் ஹ்யூகோ சாவேஸ் ஆட்சி காலத்தின் போது ஆளுநராக இருந்த ஃபால்கோன் தற்போதைய அதிபர் மதுரோவுக்கான மாற்றாகக் கருதப்பட்டார். மதுரோவின் அதே சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த ஃபால்கோன், 2010-ம் ஆண்டு கட்சியை விட்டு பிரிந்து எதிர்கட்சியில் சேர்ந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: