வடகொரியா நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால் சந்திப்பு இல்லை: டிரம்ப்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

டிரம்ப்- கிம் சந்திப்பு நடக்குமா?

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உனுக்கும் இடையே ஜூன் 12-ம் திட்டமிடப்பட்ட உச்சி மாநாடு நடக்குமா என்பது நிச்சயமற்றதாக உள்ளது. இந்தச் சந்திப்பு தாமதமாவதற்கான கணிசமான வாய்ப்புகள் உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். வட கொரியா முதலில் சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் நிறைவேற்றத் தவறினால் மாநாடு நடக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க தூதர்களை வெளியேற்றிய வெனிசுவேலா

வெனிசுவேலாவில் நடந்து முடிந்த தேர்தலில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, மீண்டும் அந்நாட்டின் அதிபராக தேர்ந்தேடுக்கப்பட்டதை அமெரிக்கா விமர்சித்திருந்த நிலையில், தனது நாட்டில் உள்ள இரண்டு முக்கிய அமெரிக்க தூதர்களை வெனிசுவேலா வெளியேற்றியுள்ளது. தனது அரசுக்கு எதிராக இவர்கள் சதி செய்ததாக அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

செளதி: பெண் செயற்பாட்டாளர்கள் தொடர் கைது

செளதியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு இருந்த தடை இன்னும் ஒரு மாதத்தில் நீக்கப்படவுள்ள நிலையில், செளதி அதிகாரிகள் மேலும் மூன்று பெண் உரிமை செயற்பாட்டாளர்களை கைது செய்துள்ளனர். செளதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி கோரும் இயக்கத்தைச் சேர்ந்த பல பெண் செயற்பாட்டாளர் கடந்த சில நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். ''துரோகிகள்'' என்றும், வெளிநாட்டுச் சக்திகளுடன் இணைந்து பணியாற்றுபவர்கள் என்றும் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.

இந்துக்களை கொன்ற ரோஹிஞ்சா போராளி அமைப்புக்கு கண்டனம்

படக்குறிப்பு,

பாதுகாப்பு பணியில் மியான்மர் பாதுகாப்பு படையினர்

கடந்த ஆகஸ்ட் மாதம் பர்மிய பாதுகாப்பு படைகள் உடனான சண்டையின் போது அர்சா என அறியப்படும் ரோஹிஞ்சா போராளி அமைப்பினால், டஜன் கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டதற்கு மனித உரிமைகள் குழுவான அம்னெஸ்டி கண்டனம் தெரிவித்துள்ளது. 53 பொதுமக்கள் அர்சா அமைப்பினால் கொல்லப்பட்டதை தாங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக அம்னெஸ்டி கூறியுள்ளது.

தென் கொரிய பத்திரிகையாளர்களை அனுமதிக்கும் வட கொரியா

தனது அணுசக்தி சோதனை தளம் அகற்றப்படுவதைப் பார்வையிட, தென் கொரிய பத்திரிகையாளர் குழுவை அனுமதிக்க வட கொரியா ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்பு அவர்களுக்கு விசா வழங்க வட கொரியா மறுத்த நிலையில், தற்போது தனது நிலையை மாற்றிக்கொண்டுள்ளது. தற்போது எட்டு தென் கொரிய பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அணுசக்தி சோதனை தளத்தைப் பார்வையிட ஏற்கனவே அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா மற்றும் சீனாவை சேர்ந்த பத்திரிகையாளர்கள் வட கொரியாவில் உள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: