மியான்மர்: ரோஹிஞ்சா போராளிகள் இந்துக்களை கொன்றதாக அம்னெஸ்டி அறிக்கை

ரோஹிஞ்சா

பட மூலாதாரம், EPA

மியான்மரில் உள்ள ரோஹிஞ்சா முஸ்லிம் போராளிகள், கடந்த ஆகஸ்ட் மாதம் டஜன் கணக்கான இந்துக்களைக் கொன்றதைக் கண்டறிந்திருப்பதாக மனித உரிமைகள் குழுவான அம்னெஸ்டி தெரிவித்துள்ளது.

அர்சா என அறியப்படும் ரோஹிஞ்சா போராளிகள் குழு 99 இந்துக்களைக் கொன்றதாக அம்னெஸ்டி கூறியுள்ளது. ஆனால், அர்சா இதனை மறுத்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் மியான்மர் படைகளுக்கு எதிராக, ரோஹிஞ்சா முஸ்லிம் போராளி குழு சண்டையிட்டபோது இக்கொலைகள் நடந்தன. இப்பகுதியில் அட்டூழியங்களைக் நடத்தியதாக மியான்மர் படை மீதும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஆகஸ்ட் மாதம் முதல் கிட்டதட்ட 7 லட்சம் ரோஹிஞ்சாக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

வங்கதேசத்தில் உள்ள ரோஹிஞ்சா முஸ்லிம்களிடமும், ரக்கைன் மாகாணத்திலும் தாங்கள் நடத்திய விசாரணையில், அர்சா குழுவினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளோம் என அம்னெஸ்டி கூறியுள்ளது.

மற்ற பகுதிகளிலும் பொது மக்களுக்கு எதிராக சிறியளவிலான வன்முறை நிகழ்த்தப்பட்டதற்கு அர்சாவே காரணம் எனவும் இந்த விசாரணை கண்டறிந்துள்ளது.

26 ஆகஸ்ட் அன்று அர்சா உறுப்பினர்கள் இந்து கிராமமான ஆஹ் நாவுக் கா மவுங் சேக் மீது எப்படி தாக்குதல் நடத்தினர் என்பதை அம்னெஸ்டியின் ஆய்வு கூறுகிறது.

ரோஹிஞ்சா

பட மூலாதாரம், YOUTUBE

'' இது ஒரு கொடூரமான செயல். அர்சா குழுவினர் இந்து சமூகத்தை சேர்ந்த ஆண், பெண் மற்றும் குழந்தைகளைப் பிடித்து, அவர்களை கிராமத்திற்கு வெளியே வைத்துக் கொன்றுள்ளனர்'' என அந்த அறிக்கை கூறுகிறது.

தங்களது உறவினர்கள் கொல்லப்பட்டதை தப்பித்துச் சென்ற இந்துக்கள் அம்னெஸ்டியிடம் கூறியுள்ளனர்.

''அவர்கள் ஆண்களை வெட்டிக்கொன்றனர். தங்களைப் பார்க்க வேண்டாம் என எங்களிடம் அவர்கள் கூறினார்கள். அவர்களிடம் கத்தி இருந்தது, அத்துடன் இரும்பு கம்பிகளும் இருந்தன. எனது அப்பா, மாமா, சகோதரர் என பலரை அவர்கள் கொன்றனர்'' என ஒரு பெண் கூறியுள்ளார்.

ஆஹ் நாவுக் கா மவுங் சேக் கிராமத்தில் 20 ஆண்கள், 10 பெண்கள், 23 சிறுவர்கள் என பலரை அர்சா கொன்றுள்ளது. அதே நாள், யே பாக் க்யார் கிராமத்தைச் சேர்ந்த இந்து ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என 46 பேர் கொல்லப்பட்டதாகவும் அம்னெஸ்டி கூறுகிறது.

மேலும் மியான்மர் பாதுபாப்புப் படையையும் விமர்சித்துள்ள அம்னெஸ்டி,'' ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான மியான்மர் ராணுவத்தின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை காரணமாகவே, அர்சா தாக்குதலில் இறங்கியது'' என அது கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: