உலகை அச்சுறுத்தும் 10 கொடிய நோய்கள் - அறிகுறிகள் என்ன?

மருத்துவ ஆராய்ச்சிகளை துரிதப்படுத்தி, உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டிய 10 நோய்களின் பட்டியலை உலக சுகாதார நிறுவனம் 2015ஆம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது.

இந்த நோய்களின் பரவல் உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கியுள்ளன. இவற்றுக்கான மருந்துகளோ, தடுப்பூசியோ இன்னும் தேவைக்கேற்ப கண்டுபிடிக்கப்படவில்லை.

சமீபத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் இபோலா, இந்தியாவை தாக்கத் தொடங்கியிருக்கும் நிபா உள்ளிட்ட வைரஸ் கிருமியால் உண்டாகும் நோய்களும் இந்தப் பட்டியலில் உள்ளன.

எவை அந்த 10 நோய்கள்?

1. நிபா வைரஸ்

படத்தின் காப்புரிமை AFP
Image caption பழம் திண்ணி வெளவால்கள்

பழம் திண்ணி வெளவால்களிடம் இருந்து கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கு இந்த நோய்க்கிருமி பரவுகிறது.

காய்ச்சல், வாந்தி, தலைவலி ஆகியவற்றுக்குப் பிறகு மூளையில் வீக்கம் உண்டாவதே இதற்கான அறிகுறி . மனிதர்களையும் விலங்குகளையும் இந்நோயிடம் இருந்து காக்கும் மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

தற்போது நிபா தாக்கியவர்களில் 70% பேர் இறந்துள்ளனர்.

இந்த வைரஸ் கிருமி 1998இல் முதல் முறையாக 'நிபா' எனும் மலேசிய நகரில் பன்றிகளில் கண்டறியப்பட்டதால், இப்பெயர் பெற்றது.

அப்போது, பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து சுமார் 300 பேருக்கு இந்த நோய் பரவியது. அவர்களில் 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

2. 'ஹெனிபாவைரல்' நோய்கள்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஹென்ரா வைரஸ் குதிரைகளையும் மனிதர்களையும் தாக்கும்

பழம் திண்ணி வெளவால்களிடம் இருந்து பரவும் 'ஹெனிபா வைரல்' நோய்கள் குழுவைச் சேர்ந்ததே நிபா வைரஸ்.

ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக அடையாளம் காணப்பட்ட 'ஹென்ரா' வைரஸ் இதே வகையைச் சேர்ந்தது.

இந்த வைரஸ் பழம் திண்ணி வெளவால்களிடம் இருந்து குதிரைகள் மற்றும் மனிதர்களுக்கு பரவுகிறது. பிரிஸ்பேன் நகரில் 1994இல் இது முதலில் கண்டறியப்பட்டது. அப்போது முதல் 70 குதிரைகள் மரணத்துக்கு இது காரணமாக இருந்துள்ளது.

இக்கிருமியின் தாக்குதலுக்கு உள்ளான ஏழு பேரில் நால்வர் மரணித்துவிட்டனர்.

3. கிரிமியன்-காங்கோ ஹெமோரெஜிக் காய்ச்சல்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கால்நடைத் தொழுவங்களை சுகாதாரமாக பராமரிப்பது கிரிமியன்-காங்கோ ஹெமோரெஜிக் காய்ச்சல் பரவலைத் தடுக்கும்

கிரிமியன்-காங்கோ ஹெமோரெஜிக் (குருதிப்போக்கு) காய்ச்சல் உண்ணிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது.

இதில் பாதிக்கப்பட்ட 40% பேர் மரணத்தை சந்திக்கின்றனர்.

1944இல் கிரிமியாவில் கண்டறியயப்பட்ட இந்த கிருமி, பின்பு காங்கோவிலும் கண்டறியப்பட்டது. ஆப்பிரிக்கா, பால்கன் தீவுகள், மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் இந்த நோய் நிலவுகிறது.

அதிக அளவிலான காய்ச்சல், முதுகு வலி, மூட்டு வலி, வயிற்று வலி மற்றும் வாந்தி ஆகியன இதற்கான அறிகுறி.

உண்ணிகள் கடிப்பதால் மனிதர்களுக்கு பரவும் இந்தக் கிருமி முதலில் கால்நடைகளை தாக்குகின்றன.

நோய்தாக்குதலுக்கு உள்ளானவரின் ரத்தம் மற்றும் உடல் திரவங்கள் மூலம் இது பிறருக்கு பரவுகிறது.

இதிலிருந்து மனிதர்களையோ விலங்குகளையோ காக்க இதுவரை மருந்துகள் எதுவும் இல்லை.

4. இபோலா வைரஸ்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இபோலா பாதிப்புக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்

காங்கோ ஜனநாயக குடியரசில் உள்ள இபோலா நதிக்கரையில் 1976இல் இந்த வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டதால் இந்தக் கிருமி 'இபோலா' என்று பெயர்பெற்றது.

இதுவும் பழம் திண்ணி வெளவால்களிடம் இருந்து உண்டாகும் நோய். விலங்குகளை தாக்கும் இந்த நோய் விலங்குகள் மூலம் மனிதர்களுக்கும் பரவுகிறது.

பாதிக்கப்பட்டவர்களின் தோலில் உள்ள காயம், வாய், மூக்கு, ரத்தம், வாந்தி, மலம், உடல் திரவங்கள் ஆகியவை மூலம் இது பிற மனிதர்களுக்கு பரவுகிறது.

சிறுநீர் மற்றும் விந்து ஆகியவற்றிலும் இந்த வைரஸ் இருக்கலாம்.

இது தாக்குபவர்களில் 50% பேர் இறக்கின்றனர். 2014 முதல் 2016 வரை, மேற்கு ஆப்பிரிக்காவில் இந்த நோயின் பரவல் 11,000 பேர் இறப்புக்கு காரணமானது.

காய்ச்சல் மற்றும் உடல் சோர்வுக்கு பிறகு, வயிற்றுப்போக்கு, சிறுநீரக மற்றும் கல்லீரல் பாதிப்பு, கண்கள், மூக்கு அல்லது வாயில் இருந்து ரத்தக்கசிவு உண்டாக இது வழிவகுக்கும்.

5. மார்பக் வைரஸ்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அங்கோலாவில் மார்பக் வைரஸ் தொற்றால் 200இல் 200க்கும் மேலானவர்கள் இறந்தனர்

இபோலாவுடன் தொடர்புடைய வைரஸ் கிருமி மார்பக் வைரஸ்.

பாதிக்கப்பட்டவரின் உடல் திரவம் மூலம் இது பிறரைத் தொற்றிக்கொள்ளும்.

பழந்திண்ணி வெளவால்கள் மூலமே இந்தக் கிருமியும் பரவுகிறது.

இதில் பாதிக்கப்பட்டவர்களில் 24% முதல் 88% வரை இறக்கின்றனர்.

அதீத குருதிப்போக்கில் நோய் தாக்கிய எட்டு - ஒன்பது நாட்களில் மரணம் ஏற்படும்.

ஜெர்மனியில் உள்ள மார்பக் நகரில் 1967இல் முதன் முதலில் இது கண்டறியப்பட்டது.

6. சார்ஸ் (SARS)

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஏப்ரல் 2003இன் தொடக்கத்தில் சார்ஸ் அச்சுறுத்தலுக்கு ஹாங்காங் உள்ளது

’சிவியர் அக்யூட் ரெஸ்பிரேடரி சிண்ட்ரம்’ என்பது ஒரு வைரஸால் உண்டாகும் மூச்சுக்கோளாறு.

சீனாவில் மரநாய்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

2002 முதல் 2004 வரை சார்ஸ் பரவல் இருமுறை நிகழ்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட 8,098 பேரில் 774 பேர் இறந்தனர்.

காற்று, எச்சில் போன்றவை மூலம் இது பரவுகிறது.

7. மெர்ஸ் (MERS)

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மெர்ஸ் நோய் 'ஒட்டகக் காய்ச்சல்' என்றும் அழைக்கப்படுகிறது

’மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேடரி சிண்ட்ரம்’ ஒரு சார்ஸ் வகை நோய்.

சௌதி அரேபியாவில் 2012இல் இது கண்டறியப்பட்டது.

மெர்ஸ் தாக்கியவர்களில் சுமார் 35% பேர் மரணித்துள்ளனர்.

சார்ஸ் கிருமியைவிட அதிக ஆபத்து மிகுந்த இந்த நோய் அதன் அளவுக்கு பரவுவதில்லை.

மெர்ஸ் வைரஸ் கிருமி ஒட்டகங்களி்லிருந்து பரவலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதுவரை இந்த கிருமி தாக்கியவர்களில் 80% பேர் சௌதி அரேபியர்கள்.

8. ரிஃப்ட் பள்ளத்தாக்கு காய்ச்சல் (Rift Valley Fever)

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரிஃப்ட் பள்ளத்தாக்கு காய்ச்சல் கால்நடைகளை முதலில் தாக்கி அதன்மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது

ரத்தம் குடிக்கும் ஈக்கள் மற்றும் கொசுக்கள் மூலம் இந்த காய்ச்சல் கால்நடைகளுக்கு பரவுகிறது.

மனிதர்களையும் தொற்றிக்கொள்ளும் இந்த நோய் தாக்கினால் ரத்த நாளங்கள் பாதிப்பு அல்லது உறுப்பு செயலிழப்பால் மரணம் உண்டாகும்.

பாதிக்கப்பட்ட கால்நடைகளின் பாலை காய்ச்சாமல் குடித்தால் மனிதர்களுக்கும் இது பரவும்.

கென்யாவின் ரிஃப்ட் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு வேளாண் பண்ணையில் இந்தக் காய்ச்சல் 1931இல் கண்டறியப்பட்டது.

9. ஜிகா வைரஸ்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜிகா பரவல் உள்ள பகுதிகளுக்கு கர்ப்பிணிப் பெண்கள் பயணிக்க கூடாது.

கொசுக்கள் மூலம் மனிதர்களைத் தொற்றிக்கொள்ளும் ஜிகா வைரஸ், உடலுறவு மூலம் மனிதர்களிடையே பரவுகிறது

காய்ச்சல், தலைவலி, தோலில் சொறி உண்டதால், தசை வலி ஆகியன இதன் அறிகுறிகள்.

சிசுக்கள் சிறிய தலையுடன் பிறக்கும் மைக்ரோசிபபேலி (microcephaly) எனும் நிலைக்கு இது காரணமாக உள்ளது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பெரியவர்களை இந்தக் கிருமி தாக்கினால் கை - கால் செயலிழப்பு ஏற்பட வழிவகுக்கும்.

உகாண்டாவில் உள்ள ஜிகா காடுகளில் 1947இல் செம்முகக் குரான்களிடம் கண்டறியப்பட்டது இந்தக் கிருமி.

10. லாசா காய்ச்சல்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption லாசா வரைஸ் கிருமியின் மூலமாக இருப்பது எலிகள்.

லாசா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான எலிகளின் சிறுநீர் அல்லது மலத்துடன் தொடர்புகொள்ளும் மனிதர்களுக்கு இந்தக் காய்ச்சல் உண்டாகிறது.

பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம் , சிறுநீர், மலம், பிற உடல் திரவங்கள் ஆகியவற்றின் மூலம் இது மனிதர்களிடையே பரவுகிறது.

மோசமான சமயங்களில் ரத்த நாளங்கள் பாதிப்பு அல்லது உறுப்பு செயலிழப்பால் 14 நாட்களுக்குள் மரணம் உண்டாகும்.

லாசா காய்ச்சல் ஏற்பட்டவர்களில் 1%க்கும் அதிகமானோர் இறக்கின்றனர்.

காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு ஆகியவையே இதன் அறிகுறிகள்.

நைஜீரியாவின் லாசா நகரில் 1969இல் இந்த கிருமி இருப்பது கண்டறியப்பட்டது.

11. X - நோய் (எக்ஸ் நோய்)

படத்தின் காப்புரிமை Getty Images

உலக சுகாதார நிறுவனம் X - நோயை ஒரு புதிரான வகையில் 10 மோசமான நோய்கள் பட்டியலில் சேர்த்துள்ளது.

இன்னும் கண்டறியப்படாத நுண்ணுயிரியால் உண்டாகும் இன்னும் கண்டறியப்படாத நோய் என்பதால் இதற்கு 'X' என்று பெயரிடப்பட்டுள்ளது.

எப்போது வேண்டுமானாலும், முன்னர் அறியப்படாத நோய்கள் மனிதர்களைத் தாக்குவதைத் தவிர்க்க முடியாது என்பதற்கான எச்சரிக்கையாகவே ஆய்வாளர்கள் இதை இந்தப் பட்டியலில் சேர்த்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: