''தூத்துக்குடி நிகழ்வு வருத்தம் அளிக்கிறது'' - ஸ்டெர்லைட்

''தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் துயர்மிகு நிகழ்வுகளை கண்டிருப்பது மிகவும் வருத்தத்தையும், துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என வேதாந்தா நிறுவனம் பிபிசியிடம் தெரி்வித்துள்ளது.

படத்தின் காப்புரிமை MANJUNATH KIRAN

"எங்களின் நிறுவன பணியாளர்களின் பாதுகாப்பு, சுற்றியுள்ள சமூக மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் எங்கள் நிறுவனம் பணி புரிந்து வருகிறது'' என லண்டனிலிருந்து இயங்கும் வேதாந்தா நிறுவனம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக பெருந்திரள் தொடர் போராட்டம் நடத்தியது. இதில் மே 22 மற்றும் மே 23 தேதிகளில் போராட்டக்காரர்கள் மற்றும் போலீஸ் இடையே நடந்த மோதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தூத்துக்குடி, திருநெல்வேலி கன்னியாகுமரி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் இணைய வசதியை அரசு நிறுத்தியுள்ளது.

வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தூத்துக்குடி காவல்துறை தெரிவித்திருந்தது. ''துப்பாக்கிச் சூடு திட்டமிட்டு நடக்கவில்லை என்றும் சமூக விரோதிகள் ஊடுருவி போராட்டத்தை தவறாக வழிநடத்தியதால் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்தன'' என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR

பிபிசியிடம் பேசிய ஸ்டெர்லைட் நிறுவனம், '' ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையானது தற்போது செயல்படவில்லை என்றும் தொழிற்சாலை இயங்குவதற்கான அனுமதி உத்தரவு பெறுவதற்காக காத்திருக்கும் வேளையில் தங்களுடைய அனைத்து பங்குதாரர்களுடன் திறந்த உரையாடலை ஸ்டெர்லைட் தொடரும்'' என்றும் தெரிவித்துள்ளது.

''திட்டமிட்ட பராமரிப்பு பணிக்காக தூத்துக்குடி தொழிற்சாலையில் உருக்கு பணிகள் மார்ச் 25, 2018 முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. மீண்டும் உருக்கு பணிகளை துவக்குவதற்காக ஒப்புதல் வேண்டி புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்தை உரிய நேரத்தில் வழங்கினோம். எங்களது விண்ணப்பமானது மேற்கொண்டு விளக்கங்கள் வேண்டி நிராகரிக்கப்பட்டதால் ஆலை மூடப்பட்டுள்ளது."

"தூத்துக்குடியில் இராண்டாவது காப்பர் உருக்காலை திறப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி புதிப்பித்தலுக்காக நாங்கள் விண்ணப்பித்திருந்தோம். இது பொது விசாரணைக்கு பிறகு செயலாக்கப்படும் என நிறுவனத்துக்கு நேற்றைய தினம் தெரிவிக்கப்பட்டது. செப்டம்பர் 23, 2018 அன்று அல்லது அதற்கு முன்பாக இந்த விண்ணப்பம் மீது முடிவெடுக்கப்படும்."

"உரிய அனுமதியின்றி ஆலையில் உருக்கு பணிகள் மற்றும் விரிவாக்க பணிகளும் மேற்கொள்ளப்படாது'' என ஸ்டெர்லைட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR

முன்னதாக வியாழக்கிழமையன்று தூத்துக்குடியில் உள்ள சர்ச்சைக்குரிய ஸ்டெர்லைட் காப்பர் உருக்கலையை மூடுவதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இன்று அதிகாலையில் அந்த ஆலைக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் நடந்த மோதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதை கண்டித்து பல்வேறு கட்சிகளும் பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ''துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காரணமான முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும், டிஜிபி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்'' என்றும் திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்