டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ரத்தானது ஏன்? காரணம் யார்?

டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ரத்தானது ஏன்?

பட மூலாதாரம், AFP

காரசாரமான வாதப் பிரதிவாதங்களைத் தொடர்ந்து, வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுடனான உச்சிமாநாட்டை ரத்து செய்வதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் அதிபர் டிரம்ப். இது குறித்து விவரிக்கிறார் ஆய்வாளர் அன்கித் பான்டா.

ஜூன் மாதம் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை நடைபெறாது என்று வியாழனன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். ''பெருங்கோபம் மற்றும் வெளிப்படையான விரோதத்தை'' வடகொரியா வெளிப்படுத்தியிருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸை "அரசியல் போலி" என வட கொரிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சோ சன் ஹுய் கூறியிருந்தார்.

எனினும், இந்த பேச்சுவார்த்தை சீர்குலைவதன் தொடக்கமாக இருந்தது அதிபர் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன். வட கொரியா என்னவெல்லாம் செய்யவேண்டும் என்ற அமெரிக்க எதிர்பார்ப்பை விண்ணளவுக்கு உயர்த்தியவர் அவரே.

பட மூலாதாரம், AFP

சிங்கப்பூரில் நடைபெறவிருந்த மாநாட்டில், வட கொரியா அணுசக்தி ஆயுதங்கள் மட்டுமல்லாது ரசாயன ஆயுதங்களையும் மற்றும் பிற ஆயுதங்களை கைவிட வேண்டும் என்ற ஒப்பந்தத்தை எட்டுவதையே பிரதான நோக்கமாக வைத்திருந்தார் போல்டன்.

ஆனால், வட கொரியாவுடனான ராஜதந்திர நடவடிக்கைகள் வெற்றி பெற வேண்டும் என்று உண்மையிலே போல்டனுக்கு ஆர்வம் இல்லாமல் இருந்திருக்கலாம்.

டிரம்பின் தேசிய பாதுகப்பு ஆலோசகராக நியமிக்கப்படும் முன் பேசிய ஜான் போல்டன், பேச்சுவாத்தைக்கான கிம்மின் அழைப்பை ஏற்ற டிரம்ப், இந்த பேச்சுவார்த்தையால் நேரத்தை வீணடிக்கப் போவதாகவும், நமக்கு தேவையான எந்த முன்னேற்றமும் ஏற்பட போவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், வட கொரியாவில் "லிபியா மாதிரியை" பின்பற்ற வேண்டும் என்று ஜான் போல்டன் பரிந்துரை செய்திருந்தார்.

பட மூலாதாரம், Getty Images

கடந்த 2003ஆம் ஆண்டு லிபியா தலைவர் கடாஃபி, தொடக்க நிலையில் இருந்த அணு ஆயுதத் திட்டத்தை கைவிடுவதாக ஒப்புக் கொண்டார். அதனையடுத்து அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டன. ஆனால், 2011ஆம் ஆண்டு மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களால் கடாஃபி கொல்லப்பட்டார்.

இதனால் அஞ்சிய வட கொரியா, தன் சமீபத்திய அறிக்கைகளில் இதனை வெளிப்படுத்தியது.

வட கொரியா லிபியாவை போல முடிந்துவிடக்கூடும் என்று கூறப்பட்டதையடுத்து, வட கொரிய முழுமையான அணு ஆயுத சக்தி கொண்டிருப்பதாகவும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, மற்றும் தெர்மோ நியூக்ளியர் ஆயுதங்களை தன்னிடம் வைத்துள்ளதாகவும் வட கொரியாவின் சோ சன் ஹுய் கூறியிருந்தார்.

அமெரிக்காவின் உத்தரவுப்படி அணு ஆயுதங்களை கைவிட்டால் தன் முடிவை சந்திக்க நேரிடும் என்று கிம் நினைத்திருக்கலாம்.

பட மூலாதாரம், Reuters

இதுகுறித்து டிரம்ப் கூறிய கருத்துகளை அச்சுறுத்தலாக பார்த்தது வட கொரியா.

இது மட்டுமில்லாமல், வட கொரியா தனது பேச்சுவார்த்தை நிலைகள் பற்றி தீவிரமாக பேசியதை, கணக்கில் எடுத்துக் கொள்ள அமெரிக்கா தவறிவிட்டது.

டிரம்பின் கடிதத்தின்படி, வட கொரிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சோவின் கருத்துகள்தான், இந்த உச்சிமாநாடு ரத்தானதிற்கு காரணம் என்று அவர் தெரிவித்திருந்தார்.

அந்த நிலையில், ஜான் போல்டனின் கருத்துகளுக்கு வட கொரியா அதிருப்தி தெரிவித்திருந்தது.

மேலும், வட கொரியா தனது அணு ஆயுத தளங்களை அகற்ற முடிவெடுத்த சில மணி நேரங்களில் டிரம்பின் இந்த ரத்து அறிவிப்பு வெளியானது சாதகமற்ற சர்வதேச சூழலை உருவாக்குகிறது.

சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் தென் கொரிய அதிபர் ஆகிய இருவர் சந்திப்புகளுக்கு பிறகும், வட கொரியாவின் பேச்சுவார்த்தை நிலை மாறவில்லை.

அதிபர் டிரம்ப் எழுதிய கடிதம், கிம் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு நடவடிக்கை எடுக்கலாம் என்ற திறந்த நிலையில்தான் உள்ளதாக தெரிகிறது. அவர் தன் கடிதத்தில், "என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவோ அல்லது கடிதம் எழுதவோ தயங்க வேண்டாம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், இந்த வாய்ப்பை எடுத்துக் கொள்ள கிம் ஆவலுடன் இருக்க மாட்டார். இந்த உச்சிமாநாட்டில் வட கொரியா பெறுவதற்கு அதிகம் இருந்தாலும், டிரம்பை சந்திக்க வேண்டுமா என்ற யோசனை இருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: