கைதான ஹார்வி வைன்ஸ்டீன் மீது பதிவான பாலியல் குற்றச்சாட்டுக்கள் என்ன?

முன்னாள் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வைன்ஸ்டீன் போலிஸாரிடம் சரணடைந்தார்.

இரண்டு பெண்கள் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் மீது நியுயார்க்கில், பாலியல் வன்புணர்வு மற்றும் பல்வேறு வகையான பாலியல் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக ஹார்வி வைன்ஸ்டீன் போலிஸாரிடம் சரணடைந்தார். அவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளுக்கான விசாரணையை அவர் எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

விசாரிக்கப்படும் குற்றங்கள் தொடர்பாக அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை; எனினும் நடிகை லூசியா இவான்ஸின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை இருக்கலாம் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.

66 வயதாகும் ஹார்வி வைன்ஸ்டீன் மீது டஜன் கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் தாக்குதல் புகார்களை தெரிவித்திருந்தனர்.

உடன்பாடில்லாத பாலியல் நடவடிக்கைகள் இருந்ததில்லை என்று தன் மீதான குற்றங்களை ஹார்வி வைன்ஸ்டீன் மறுத்துவந்தார். அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

நியுயார்க் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வைன்ஸ்டீன் கைது செய்யப்பட்டு, இரண்டு பெண்கள் தொடர்பான பாலியல் வன்புணர்வு, கிரிமினல் பாலியல் நடவடிக்கை மற்றும் பாலியல் முறைகேடு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளது.

நியுயார்க்கில் ஒரு காவல் நிலையத்துக்குள் சரணடையச் சென்றபோது, அவர் எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

ஹார்வி வைன்ஸ்டீன் மீது எழுந்த குற்றச்சாட்டுகள் #metoo இயக்கத்துக்கு வித்திட்டு பரவலாக நிகழும் பாலியல் துன்புறுத்தல் குறித்து கவனத்தை ஈர்த்தது.

இந்த புகார்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் விசாரணை முடிவுகளை கொண்டு வைன்ஸ்டீன் மீது குற்றங்கள் சுமத்தப்படும்.

நடிகை லூசியா இவான்ஸின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என நியூயார்க் டைம்ஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் நியூயார்க் டைம்ஸின் செய்தி ஒன்றில் லூசியா இவான்ஸ், ஹார்வி மீது விரிவான குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

மேலும் நடிகை பாஸ் டி லா ஹுயர்டாவா, ஹார்வே மீது சுமத்திய பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகளை நியூயார்க் போலிஸார் ஏற்கனவே விசாரித்து வந்தனர்.

இந்த மாதம் நெட்ஃபிலிக்ஸ் தயாரிப்பாளர் அலெக்ஸாண்ட்ரா கனோசா நியூயார்க் நீதிமன்றத்தில், ஐந்து வருட காலமாக ஹார்வி தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகவும், தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.

சில குற்றச்சாட்டுகளில் சம்பவம் நடைபெற்று புகார் தெரிவிக்க வேண்டிய கால அவகாசம் முடிவு பெற்ற போதிலும் லூசியா இவான்ஸின் வழக்கில் அதை அமல்படுத்த முடியாது.

புகார் தெரிவித்திருக்க வேண்டிய கால அவகாசம் முடிந்திருந்தாலும் நீதிபதி சம்பந்தப்பட்ட பெண்ணை சோதனை புரிவதற்கு அழைப்பு விடுக்கலாம்.

மன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றத்தில் வைன்ஸ்டீன் மீது சுமத்தப்பட்ட வழக்கு குறித்த விசாரணை நடைபெறலாம் என ’தி டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.

பிரபலங்களின் கண்டனம்

ஹார்வி மீது புகார் தெரிவித்தவர்களில் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி மற்றும் ரோஸ் மெக்கோவன் உள்ளிட்ட பலர் அடங்குவர்.

ஹார்வி வைன்ஸ்டீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளால் அவரின் தயாரிப்பு நிறுவனமான வைன்ஸ்டீன் நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டார். பின் அந்த நிறுவனம் திவாலானது.

பல பிரபலங்கள் வைன்ஸ்டீனின் செய்கைக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

ஹார்வி வைன்ஸ்டீன் மீது தொடர்ந்து பல பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அவரை ஆஸ்கர் குழுவில் இருந்து வெளியேற்ற, ஆஸ்கருக்கு பின்னணியில் இருந்து செயல்படும் அமைப்பு முடிவு செய்தது.

வைரலாகிய me too ஹாஷ்டாக்

ஹார்வியின் புகார்களை மையமாக வைத்து, ஹாலிவுட் நடிகையான அலிஸ்ஸா மிலானோ, "பாலியல் ரீதியான தொந்தரவுக்கோ அல்லது தாக்குதலுக்கோ உள்ளான அனைத்து பெண்களும் "Me Too" என்று பதிவிட்டால், இப்பிரச்சனையின் அளவை மக்களுக்கு உணர வைக்கலாம்" என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் #MeToo என்ற ஹாஷ்டாகில் தங்களது கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இதனிடையே, வைன்ஸ்டீன் மீது பாலியல் குற்றம் சாட்டியவர்களில் சிலர், அவர் மீதான இன்றைய நடவடிக்கைகளை வரவேற்றுள்ளனர்.

நடிகை ரோஸ் மெகோவன், புகார் தெரிவித்த சிலர் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையை இழந்திருந்ததாகத் தெரிவித்தார்.

"இருபது ஆண்டுகளுக்கு முன்பு, இந்தத் தவறைச் சரி செய்வேன் என்று சபதமெடுத்தேன். இன்று, நீதியின் படியை நெருங்கியிருக்கிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இத்தாலிய நடிகை ஆசியா அர்ஜென்டோ, 1990களில் வைன்ஸ்டீன் மீது பாலியல் புகார் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். இன்றைய நடவடிக்கை குறித்து ட்விட்டரில் `பூம்' என்று ஆங்கிலத்தில் ஒரே வார்த்தையில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

இதனிடையே, வியாழக்கிழமையன்று பிரபல அமெரிக்க நடிகர் மோர்கன் ஃப்ரீமென், தன் மீதான பாலியல் முறைகேடு புகார்கள் தொடர்பாக மன்னிப்புக் கோரியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: