ஜிபிஎஸ் டிராக்கர் அணிய ஒப்புக்கொண்ட ஹார்வி வைன்ஸ்டீன்

கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்துள்ள செய்திகளின் தொகுப்பு.

வைன்ஸ்டீன் 1 மில்லியன் டாலர் பிணையில் விடுதலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ஹார்வி வைன்ஸ்டீன்.

பாலியல் தாக்குதல், துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளின் பேரில் போலீசில் சரணடைந்த முன்னாள் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் (66) தம்முடைய பாஸ்போர்ட்டை ஒப்படைப்பதாகவும், ஜிபிஎஸ் டிராக்கர் அணிந்து கொள்வதாகவும் வாக்குறுதி அளித்து ஒரு மில்லியன் டாலர் பிணையில் விடுதலையானார்.

பிரபல ஹாலிவுட் நடிகைகள் உள்ளிட்ட பலர் வைன்ஸ்டீன் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அளித்ததை அடுத்து வெள்ளிக்கிழமை அவர் அமெரிக்காவின் நியூயார்க் போலீசில் சரணடைந்தார். விருப்பத்துக்கு மாறாகத் தாம் யாருடனும் பாலுறவு கொள்ளவில்லை என்று கூறி தம்மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.

ஓமனில் கடும் புயல்- சிறுமி பலி

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு,

ஓமன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான சலாலாவில் கரையைக் கடக்கும் புயல்.

மெகுனு என்று பெயரிடப்பட்டுள்ள புயல் ஓமனில் கடும் வேகத்தில் வீசி வருகிறது. ஓமன் நாட்டின் தென்பகுதி இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. புயலில் ஒரு 12 வயது சிறுமி உயிரிழந்தார். மேலும் நால்வர் காயமடைந்தனர்.

புயலில் தூக்கி வீசப்பட்ட அந்த சிறுமி ஒரு சுவரில் மோதி உயிரிழந்தார். டோஃபர் மற்றும் அல்-உஸ்டா மாகாணங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டதை அரசுத் தொலைக் காட்சி வெளியிட்ட காணொளிகள் காட்டுகின்றன. பல டஜன் வாகனங்களும் அந்த வெள்ளத்தில் மூழ்கிக்கிடந்தன.

பார்படோஸில் முதல் பெண் பிரதமர்

பட மூலாதாரம், Barbados Labour Party

படக்குறிப்பு,

மியா மோட்லீ

கரீபியன் தீவான் பார்படோஸ் 1966ல் விடுதலை அடைந்தது. அதன் பிறகு தற்போது முதல் முறையாக ஒரு பெண்ணை பிரதமராகத் தேர்ந்தெடுத்துள்ளது.

52 வயதான மியா மோட்லீ, ஒரு வழக்குரைஞர். அவருடைய பார்படோஸ் லேபர் பார்ட்டி (பார்படோஸ் தொழிலாளர் கட்சி) என்ற கட்சி தற்போது நடந்து முடிந்த தேர்தலில் பெருவெற்றி பெற்று ஜனநாயகத் தொழிலாளர் கட்சியைத் தோற்கடித்தது.

தாம் பள்ளியில் படிக்கும்போதே "நான் நாட்டின் முதல் பெண் பிரதமராக வருவேன்" என்று அவர் ஆசிரியரிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

651 கிலோ போதைப் பொருளோடு இருவர் கைது

ராஜஸ்தானில் 651 கிலோ போதைப் பொருளோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். டோடா போஸ்ட் எனப்படும் அந்த போதைப் பொருள் ஓபியம் தயாரிக்கும்போது கிடைக்கும் ஓர் உபரிப் பொருள்.

போலீசார் தங்களுக்கு துப்பு கிடைத்ததை வைத்து ஜுன்ஜுனு மாவட்டத்தில் ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது இந்த போதைப் பொருள் சிக்கியது. ஹரியாணாவின் சிர்சா மாவட்டத்தைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங், சுரேந்திர சிங் ஆகியோர் இதில் கைது செய்யப்பட்டனர்.

இன்று சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

சிபிஎஸ்இ பாடத்திட்டதில் பயின்ற 12-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்வு நடந்தது. இந்நிலையில் சிபிஎஸ்இ 12 வகுப்பு தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. தேர்வு முடிவு விபரங்களை, www.cbse.nic.in மற்றும் www.cbseresults.nic.in என்ற, இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: