அயர்லாந்து கருக்கலைப்பு தடை சட்டத்தில் மாற்றம் கொண்டுவர பெருவாரியான ஆதரவு

அயர்லாந்து குடியரசில் கருக்கலைப்பு தடைச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பான வாக்கெடுப்பில் 66.4 சதவீத வாக்குகள் ஆதரவாகவும், எதிராக 33.6 சதவீத வாக்குகளும் பெறப்பட்டுள்ளன.

கருக்கலைப்பு சட்டத்துக்கு எதிராக அயர்லாந்து மக்கள் வாக்கெடுப்பு

பட மூலாதாரம், Reuters

தற்போதைய சட்டப்படி தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே கருக்கலைப்பு செய்யப்படும்.

முன்னதாக கருக்கலைப்பு தடைச் சட்டதில் மாற்றம் கொண்டுவருவதற்கு ஆதரவாக பெருவாரியான வாக்குகள் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் தனது நாட்டின் "அமைதியான புரட்சி" இது என்று பாராட்டியுள்ளார்.

கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு ஆதரவாக பெருவாரியான வாக்குகள் பெறப்பட்டுள்ளன என்று கருத்தறியும் வாக்கெடுப்புக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிய வந்தவுடன் அவர் இதனை தெரிவித்தார்.

தாராளமயமாக்கலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட அயர்லாந்து பிரதமர், கடந்த 20 வருடங்களாக அயர்லாந்தில் நடைபெற்று வந்த அமைதி புரட்சியின் உச்சக்கட்டத்தைதான் நாம் பார்க்கிறோம் என தெரிவித்தார்.

தங்களது சுகாதாரம் குறித்து பெண்கள் தங்களது முடிவுகளையும், தகுந்த வாய்ப்புகளையும் தேர்ந்தெடுப்பார்கள் என அயர்லாந்து வாக்காளர்கள் நம்புகிறார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

கருவில் உள்ள குழந்தைக்கும், கருவை சுமக்கும் பெண்களுக்கு உள்ளது போன்றே வாழ்வுரிமை உண்டு என்பதை கூறும் எட்டாவது சட்ட வரைவை நீக்க வேண்டுமா அல்லது தக்க வைக்க வேண்டுமா என மக்கள் தங்களது வாக்குகளை அளித்தனர்.

தற்போதைய சட்டப்படி தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும். பாலியல் வன்புணர்வு, ஆபத்தான கருச்சிதைவு ஆகிய சூழல்களில் கருக்கலைப்பு செய்ய இயலாது.

இந்த வருடத்தின் இறுதியில் புதிய கருக்கலைப்பு சட்டம் இயற்றப்படும் என வரத்கர் தெரிவித்தார்.

கருத்தறியும் வாக்கெடுப்பு: என்ன சொல்கிறது சட்டம்?

மே மாதம் 25ஆம் தேதியன்று அயர்லாந்து நாட்டு மக்கள் நாட்டின் கடுமையான கருக்கலைப்பு சட்டங்களில் மாற்றம் கொண்டுவருவது குறித்த வாக்கெடுப்பில் தங்கள் வாக்குகளை அளித்தனர்.

2013ஆம் ஆண்டிலிருந்து, அயர்லாந்தில் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே கருக்கலைப்புகள் அனுமதிக்கப்பட்டன.

சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்யப்பட்டால் அதிகபட்சமாக 14ஆண்டுகள் வரை சிறைதண்டனை வழங்கப்படும்.

2016ஆம் ஆண்டு அயர்லாந்தின் சுகாதாரத்துறை 25 சட்ட விரோத கருக்கலைப்புகள் நடந்துள்ளதாக தெரிவித்தது.

அதே வருடம் சுமார் 3265 பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்வதற்காக அயர்லாந்திலிருந்து பிரிட்டனிற்கு பயணம் செய்துள்ளனர்.

அயர்லாந்து சுதந்திரம் பெற்ற பிறகு பிரிட்டனின் பல சட்டங்களை தக்க வைத்து கொண்டது; அதில் ஒன்று கருக்கலைப்பை குற்றமாக கருதும் சட்டமாகும்.

1983ஆம் ஆண்டில் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றிற்கு பிறகு நாட்டின் அரசியல் அமைப்பில் 8ஆவது சட்ட திருத்தம் சேர்க்கப்பட்டது.

தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைக்கும் உயிர் வாழ சம உரிமை உண்டு என்பது அதில் அங்கீகரிக்கப்பட்டது.

கருக்கலைப்புக்காக மேற்கொள்ளப்படும் பயணம்

1992ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்தறியும் வாக்கெடுப்பில் அரசியல் அமைப்பில் இரண்டு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

13ஆவது சட்ட திருத்தத்தின்படி கருக்கலைப்பு செய்துகொள்ள பிற நாடுகளுக்கு பயணம் செய்யலாம் என்பதே அந்த மாற்றமாகும்.

பிற நாடுகளில் சட்டப்படி இருக்கும் கருக்கலைப்பு சேவைகள் குறித்த தகவல்களை பெறுவதை தடுக்க முடியாது என்று கூறும் 14ஆவது சட்ட திருத்தமும் இயற்றப்பட்டது.

2013ஆம் ஆண்டு அயர்லாந்து நாடாளுமன்றம் சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என்ற சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது.

தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் கருக்கலைப்பு செய்து கொள்வதை கர்ப்பகாலத்தில் வாழ்நாள் பாதுகாப்பு சட்டம் அனுமதிக்கிறது.

கர்பமாக இருக்கும் தாய் தனது உயிரை மாய்த்து கொள்ளும் நிலையில் இருந்தாலும் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்.

புதிய கருக்கலைப்பு சட்டம் இயற்றப்பட்டால் கருத்தரித்து 12 வாரங்களுக்குள்ளாக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். 12 வாரங்களுக்கு பிறகு 24 மாதங்கள் வரை தாயின் உயிருக்கோ மன நலத்துக்கோ ஆபத்து நேரிட்டால் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்.

கருக்கலைப்பு தடைசட்ட மாற்றத்துக்கு வித்திட்ட இந்திய பெண்

இந்தியாவைச் சேர்ந்த பல் மருத்துவர் சவீதா ஹாலப்பனவர் அயர்லாந்தில் கருக்கலைப்பு மறுக்கப்பட்டதால் உயிரிழந்தார்.

31 வயதான சவீதா 17 வார கர்ப்பிணியாக இருந்தபோது அயர்லாந்து மருத்துவமனையில் கருச்சிதைவு ஏற்பட்டதால் கருக்கலைப்பு செய்ய அனுமதி கோரினார் ஆனால் அயர்லாந்தின் சட்டப்படி அவருக்கு கருக்கலைப்பு செய்ய மறுக்கப்பட்டது. பின் அவர் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார்.

பட மூலாதாரம், Getty Images

முன்னதாகவே கருக்கலைப்பு செய்துகொள்ள அவர் பலமுறை கேட்டிருந்தும், அதற்கு அயர்லாந்து சட்டத்தில் இடமில்லை என்ற காரணத்தினால் அது மறுக்கப்பட்டதாக சவீதாவின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

அயர்லாந்து ஒரு கத்தோலிக்க நாடு என்பதால் அவர்கள் கருக்கலைப்புக்கு அனுமதி தரவில்லை என சவிதாவின் கணவர் பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.

சவீதாவின் உயிரிழப்பு, அயர்லாந்தின் கருக்கலைப்புக்கு எதிரான கடுமையான சட்டத்தை எதிர்த்து பெரும் போராட்டங்களுக்கு வித்திட்டது. மேலும் கருத்தறியும் வாக்கெடுப்பில் `ஆம்` என்று வாக்களிக்க வேண்டும் என்ற பிரசாரத்துக்கு சவீதாவின் மரணம் வித்திட்டது.

கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவுக்கு பின் பிபிசியிடம் பேசிய சவீதாவின் தாய் அக்கமாஹாதேவி, "கருக்கலைப்புக்கு ஆதரவாக பொதுமக்கள் வாக்களித்து இருப்பது என் மகளுக்கு கிடைத்த வெற்றி. நாங்கள் இது குறித்து மகிழ்வாக இருக்கிறோம். என் மகளின் மரணத்திற்கு பின் ஆறு ஆண்டுகளாக போராட்டம் நடந்தது. இப்போது இந்த போராட்டத்தில் வெற்றி கிட்டி இருக்கிறது. அவளது ஆன்மா இப்போது சாந்தி அடையும். என் மகளுக்காக இந்த போராட்டத்தை மேற்கொண்டவர்களுக்கு எங்கள் நன்றி"

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: