வன்முறை, பழமைவாதப் பிடியில் பலூசிஸ்தான்: ஒரு பாகிஸ்தான் மாநிலத்தின் கதை

  • 17 ஜூன் 2018
என்ன நடக்கிறது பாகிஸ்தானின் வறிய மாகாணமான பலூசிஸ்தானில்?

பாகிஸ்தானின் வறிய மாகாணமான பலூசிஸ்தான், தவறான காரணங்களுக்காக அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறது. தலைநகர் குவெட்டாவில் இயல்பான வாழ்க்கையை வாழ முயற்சிக்கும் மக்களை பிபிசியின் ஷுமைலா ஜாஃப்ரி சந்தித்தார்.

ஒரு வங்கி மேலாளரின் ரகசிய வாழ்க்கை

ரகசியமாக செயல்படும் ராக் இசைக்குழு 'மல்ஹார்'இன் பிரதான பாடகரான யாசிர், பகல் நேரத்தில் வங்கி மேலாளராகவும், இரவு நேரத்தில் பாடகராகவும் அவதாரம் எடுக்கிறார். அவர் வாழ்ந்துவரும் பழமைவாத முஸ்லிம் சமுதாயத்தில், பாடுவதும், நடனமாடுவதும் தடை செய்யப்பட்டிருப்பதால், ராக் இசை மீதான தனது பேரார்வத்தை அவர் மறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

கட்டடத்தின் அடித்தளத்தில் உள்ள ஓர் அறையில் மாலை வேளைகளில் அவரும் நண்பர்களுடன் கூடுவார்கள். ராக் இசையை சற்று நேரம் பாடிய பிறகு, பாலிவுட் பாடல்களை பாடத் தொடங்குவார்கள். அந்தக் குழுவில் இருக்கும் மாணவர்கள் தங்களிடம் இருக்கும் உபரி பணத்தைக் கொண்டு இசைக்கருவிகள் மற்றும் உபகரணங்கள் வாங்குகின்றனர்.

"வங்கியில் எனது வாடிக்கையாளர்களுக்கு இது பிடிக்காது" என்று பேச்சுக்கு இடையில் சொல்லும் யாசிர், "நான் வணிகத்தை இழந்துவிடுவேன் என்று பயப்படுகிறேன், அதனால், எனது சொந்த சமூக ஊடக பதிவுகளில் எனது இசையை பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவே முயற்சிக்கிறேன்" என்கிறார்.

பாகிஸ்தானி பாடகர் அதிஃப் அஸ்லமின் பாடல்களை தனது கிட்டாரில் இசைக்கும் யாசிர், இசை மீதான தனது காதலைப் பற்றி பேசுகிறார்.

"வன்முறையால் எங்கள் சமூகம் மிகவும் ஆழமாக காயமுற்றிருக்கிறது" என்கிறார் அவர். "நாங்கள் பாடல்களை இசைப்பதற்கான உண்மையான நோக்கம் மக்களை மகிழ்விப்பதுதான்."

மல்ஹார் இசைக்குழுக்கு பொது இடங்களில் பாட வழியில்லை. கடந்த காலங்களில் பல்கலைக்கழகங்களில் பாட வாய்ப்புகள் வழங்கப்பட்டாலும், பிறகு அதுபற்றி வலதுசாரிக் குழுக்களுக்கு தெரிய வந்ததால், அவை வன்முறையில் முடிந்தன.

"இங்கு நிலவும் சூழ்நிலை பதற்றமாக இருக்கிறது. அதிலும் இளைஞர்களுக்கு பதற்றம் அதிகமாகவே உள்ளது. அதிலும் அவர்கள் எப்படி ஆடை உடுத்துவது என்பதில் அதிக கவனமாக இருக்க வேண்டும்" என்கிறார் யாசிர். "மேற்கத்திய" பாணி உடைகளை அணிவதும், நீண்ட தாடி வைக்காமல் இருப்பதும் சிக்கலை ஏற்படுத்தும்.

இங்கே இசைக்கலைஞர்களுக்கு வாய்ப்புகளே இல்லை என்று தெரிந்தாலும், தனது உள்ளார்ந்த விருப்பத்தை கட்டடத்தின் அடித்தளத்தில் உள்ள ஒத்திகை அறையில் பூர்த்தி செய்து கொள்கிறார்.

"மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்." என்கிறார் அவர்.

வாழ்வும் சாவும் தன் கையிலேயே...

2016, டிசம்பர் மாதத்தில் குவெட்டா பொதுமருத்துவமனைக்கு வெளியே தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றபோது அங்கு விரைந்த முதல் மருத்துவர் டாக்டர் ஷெஹ்லா ஷமி கக்கர். அதில் உயிரிழந்த எழுபது பேரில் பெரும்பாலனவர்கள் வழக்கறிஞர்கள்.

"அங்கு குளம்போல ரத்தம் தேங்கியிருந்தது" என்கிறார் அவர். "கருப்பு கோட் மற்றும் வெள்ளை சட்டை அணிந்த டஜன் கணக்கான ஆண்கள் தரையில் கிடந்தனர்."

மகளிர் மருத்துவ சிறப்பு நிபுணரான அவருக்கு, அந்த சூழ்நிலையில் என்ன செய்வது என்றே புரியவில்லையாம். தற்போது குவெட்டாவின் போலன் மருத்துவமனையில் பணிபுரியும் அவர், அந்தத் தாக்குதலுக்குப் பின்னர் மனஉளைச்சலால் (post-traumatic stress disorder) பாதிக்கப்பட்டார்.

அந்த சூழ்நிலையில் இருந்து தன்னை வெளிக்கொணர உதவியது தனது மத நம்பிக்கைதான் என்கிறார் டாக்டர் ஷெஹ்லா ஷமி கக்கர்.

"நாங்கள் இந்த சமுதாயத்தில்தான் வாழ வேண்டும்," என்று கூறும் அவர், "அன்றைய நாள் இயல்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கையிலேயே வாழ்கிறோம்."

பாகிஸ்தானில் குவெட்டா மட்டுமல்ல, அங்குள்ள அனைத்து பெரிய நகரங்களும் வன்முறை அனுபவங்களை எதிர்கொள்வதாக அவர் கூறுகிறார்.

"வெளியில் இருந்து பார்த்தால், நாங்கள் மிகவும் கடினமான வாழ்க்கையை வாழ்வதாக தோன்றும்," என்று கூறும் அவர், "ஆனால் நான் அதை ஏற்றுக் கொள்ளமாட்டேன். பழமைவாத மனோநிலை மற்றும் நகரத்தில் நிலவும் ஒழுக்கமின்மையுமே என்னை அதிகமாக பாதிக்கிறது."

பலூசிஸ்தானில் பெண்களுக்கு கல்வியும் சுதந்திரமும் இல்லை என்று அவர் கூறுகிறார்.

"குடும்பத்தின் ஆண் உறுப்பினர்கள் பெண்கள் மீது விதிக்கும் கட்டுப்பாடுகளைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளுக்கு கூட கட்டுப்பாடு உண்டு, பெண்கள் எதையுமே முழுமையாக பேசிவிட முடியாது" என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

எனினும், இத்தனை கட்டுப்பாடுகள் மற்றும் சிக்கல்களுக்கு மத்தியிலும், பன்முக இனவாத அரிதாரம் தான் மாபெரும் சவால் என்று அவர் கருதுகிறார்.

"ஹஜாரா, பலூச், பாஷ்துன், பஞ்சாபி, உருது மற்றும் பெர்சிய மொழி பேசும் சமூகங்கள் குவெட்டாவில் உள்ளன" என்கிறார் டாக்டர் ஷெஹ்லா.

"வித்தியாசமான விழுமியங்களையும் பாரம்பரியங்களையும் கொண்டிருக்கும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது, அவர்களது கலாசார உணவுகளை கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது."

உயிர் ஆபத்தை எதிர்கொள்ளும் பத்திரிகையாளர்

பலூசிஸ்தான் செய்தியாளர்களின் யூனியனின் தலைவர் கலீல் அகமது. குவெட்டா பிரெஸ் கிளப்பில் உள்ள அவரது அலுவலகம் மின்சார வேலிகளாலும், ஆயுதமேந்திய பாதுகாவலர்களாலும் பாதுகாக்கப்படுகிறது. அங்குள்ள அபாயங்களைப் பற்றி அவர் நன்கு அறிவார்.

"இங்கு கடத்தல் ஒரு பாரம்பரியம் அல்ல," என்று கூறும் அவர், "நீங்கள் இலக்கு வைக்கப்பட்டால், சுடப்படுவீர்கள், எப்போதைக்குமாக மௌனமாகிவிடுவீர்கள்."

கடந்த தசாப்தத்தில் பலூசிஸ்தானில் 38 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அலுவலக வளாகத்தில் கலீல் நிற்கிறார், வெளியே மாணவர்களின் போராட்டம் நடக்கிறது.

"ஒரு சில வரையறுக்கப்பட்ட சொற்களை மட்டுமே பயன்படுத்த முடியும், எண்ணங்களை சுதந்திரமாக பகிர்ந்து கொள்ள முடியாது," என்று அவர் கூறுகிறார்.

பாகிஸ்தான் அரசை எதிர்க்கும் பலோச் பிரிவினைவாதிகளின் கண்ணோட்டத்தை பிரதிபலித்தாலும் அதுவும் பிரச்சனையை ஏற்படுத்தும். இத்தகைய கருத்துக்களை வெளியிட்ட பலோச் மாகாணத்தை சேர்ந்த 18 பத்திரிகையாளர்கள் பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அரசு தொடர்ந்து வாக்குறுதிகளை வழங்கினாலும், இந்த வழக்குகள் இன்னுமும் திரும்பப் பெறப்படவில்லை.

"எங்கள் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தை பற்றிய தகவல்களைப் வைத்துள்ளதாக கூறும் பிரிவினைவாதிகளும், தீவிரவாதிகளும் எந்த நேரத்திலும் அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்த முடியும்" என்று கூறுகிறார் கலீல்.

18 ஆண்டுகளாக பத்திரிகையாளராக பணிபுரியும் கலீல், அதிலிருந்து விலக மறுக்கிறார்.

"இதுதான் எங்கள் வேலை," என்று கூறும் கலீல். "நாங்கள் கல்லறைக்குள் எப்போது போக வேண்டுமென்ற நாளை மாற்ற முடியாது, எனவே அதைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?" என்று கேள்வி எழுப்புகிறார்.

மரணத்தின் நிழலில்

கெட்டோவில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ள நசிம் ஜாவேத், 'ஹசாரா மற்றும் ஷியா' என சிறுபான்மையினத்தை சேர்ந்தவர். அவரது இனத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கடந்த தசாப்தத்தில் இலக்குவைக்கப்பட்டும், தற்கொலை தாக்குதல்களிலும் உயிரிழந்துள்ளனர்.

இவரது சமூகத்தினர் புகலிடம் பெற்றுள்ள மாரியாபாத் குடியேற்ற இடத்தில் உள்ள ஒரு நுழைவாயிலில் எப்போதும் பாதுகாப்பு தொடர்கிறது. இருந்தபோதிலும், ஹசாரா மக்கள் காவு வாங்கப்படுவது நிறுத்தப்படவில்லை.

சொந்த நகரில் கூண்டில் அடைக்கப்பட்ட சமூகம்

"சினிமா அரங்குகள் அழிக்கப்படுகின்றன, சந்தைகள் மூடப்பட்டுள்ளன, கலைக்கூடங்கள் இடிபாடுகளாகிவிட்டன" என்கிறார் நசீம். "இந்த சூழலில் இயல்பாக சுவாசிப்பதும் கடினம்."

மாலையில் ஒரு சிறிய குன்றின் உச்சியில் இருக்கும் "தியாகிகள் '' கல்லறைக்கு அருகில் ஆண்கள் கூடுகின்றனர். அவர்கள் கல்லை தூக்கி வீசும் பாரம்பரிய விளையாட்டை விளையாடுகிறார்கள்.

ஆண்கள் விளையாடும் போது, மற்றவர்கள் அந்தி சாயும் சூரிய வெளிச்சத்தில் பாரசீக மொழியில் எழுதப்பட்ட மத கவிதைகளை கேட்டு ரசிக்கின்றனர்.

இங்கு வருபவர்களிலேயே குறைந்த வயதினராக இருந்தாலும், நசீம் ஜாவேத் இங்கு வருகிறார்.

"நாங்கள் மரணத்தின் நிழலில் வாழ்கிறோம்," என்கிறார் அவர்.

"நாட்டை விட்டு வெளியேற முடிந்தவர்கள் ஏற்கனவே குடிபெயர்ந்துவிட்டார்கள். இங்கு எதிர்காலம் இருண்டதாக இருப்பதாக கருதும் இளைஞர்களுக்கு இங்கிருந்து வெளியேறுவது ஒன்று மட்டுமே கனவாக இருக்கிறது.

வன்முறை குறைவாக இருக்கும்போது உயிர்த்தெழும் அவர்களின் நம்பிக்கைகள், அவை திரும்பவும் அதிகமாகும்போது நொறுங்குகிறது என்கிறார் அவர்.

"ஒரு தாக்குதலில் பிழைத்திருக்கும் மக்கள், சரி இனிமேலாவது இயல்பு வாழ்க்கையை வாழலாம் என்று நினைத்து மனதை தேற்றிக் கொள்கின்றனர். ஆனால் மீண்டும் இலக்கு வைத்து தாக்கப்படும்போது, நம்பிக்கை விரக்தியாகிவிடுகிறது" என்கிறார் நசீம்.

நம்பிக்கை கொண்ட மாணவர்…

23 வயதான இதழியல் துறை மாணவி ஷெனீலா மன்ஸூர், வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருக்கிறார். அவரிடம் வீணடிக்க நேரமில்லை.

"நிலைமைகள் மேம்படுகின்றன," என்று அவர் கூறுகிறார். "நான் இங்கே இருக்கிறேன், என் நண்பர்களும், உடன் படித்தவர்கள்ளில் பலரும் உயர் கல்வி கற்கவும், வேலைகளுக்கும் செல்கின்றனர். இது மாற்றம் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது."

பலூசிஸ்தான் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஷெனீலா, இதில் இருக்கும் ஆபத்துக்களை அறிந்திருக்கிறார். "தொடர்ந்து ஒரு விஷயத்தை எதிர்கொள்ளும்போது, மக்கள் அதனுடன் வாழ கற்றுக்கொள்கிறார்கள்" என்கிறார் அவர்.

ஆனால் தனது வேலை இயல்பான வாழ்க்கை வாழ அனுகூலமானதல்ல என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்.

"பிற மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுடன் ஒப்பிடுகையில், வேலை வாய்ப்புக்களுக்காக அவர்களுடன் போட்டியிடுவது எங்களுக்கு சவாலானதுதான்."

பழமைவாத எண்ணங்களுடன் கூடிய பழங்குடி மனநிலையே பெண்களின் முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய தடையாக இருப்பதாக ஷெனீலா நம்புகிறார். ஆனால் தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று சொல்லும் அவர், தங்களது திறமை இங்கே இங்கே வீணாகிவிடும் என நினைப்பதால் இளைஞர்கள் பலூசிஸ்தானில் இருந்து வெளியேறுவதாக அவர் சொல்கிறார்.

"சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் இங்கே கட்டமைக்கப்படுகிறது, புதிய தொழில்கள் உருவாக்கப்படுகின்றன, பல கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, ஒரு புதிய கல்வி முறை அறிமுகப்படுத்தப்படுகிறது."

இவை நன்மைகளை ஏற்படுத்தும் என்றும் கூறும் ஷெனீலா, எனவே இங்கிருந்து வெளியேறுவதை விட்டு, இங்கேயே தங்கி பிராந்தியத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்று அவர் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறார்.

வெளியேறும் காலணி கடைக்காரர்

குவெட்டாவின் பழைய நகரத்தில் காலணி கடை நடத்தி வரும் அஸ்மத்துல்லா கான், வந்த1982 ஆம் ஆண்டில் தனது தந்தையின் மறைவுக்கு பிறகு இந்தத் தொழிலுக்கு வந்தார்.

"வாடிக்கையாளர்கள் வருவதே அரிதாக இருக்கிறது, தொழிலும் மோசமாகவே இருக்கிறது" என்கிறார் அஸ்மத்துல்லா,

பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் இருந்து சுற்றுலா வரும் பயணிகளுக்கும், குவெட்டாவில் பணிபுரியும் ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினருக்கும் விருப்பமான ஷாப்பிங் இடமாக இருந்தது ஹஷ்மி சந்தை.

ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் அங்கு அதிகரித்திருக்கும் வன்முறை, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை குறைத்து விட்டது. ராணுவக் குடும்பங்களோ முகாம்களுக்குள் முடங்கிவிட்டன.

"ஒருகாலத்தில் நாளொன்றுக்கு பாகிஸ்தானிய மதிப்பில் 90,000 ரூபாய்கள் வரை லாபம் ஈட்டிய எங்களுக்கு இப்போது தினசரி 10,000 ரூபாய் தான் சம்பாதிக்க முடிகிறது."

இப்போது தாக்குதல்கள் குறைந்துவிட்டாலும், மக்களின் நம்பிக்கையும் குறைந்துவிட்டது என்று கூறி வருந்துகிறார் அஸ்மத்துல்லா.

"தினமும் நான் வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது அம்மா குரானில் இருந்து வசனங்களை ஒதுவார், அதனால் நான் பாதுகாப்பாக திரும்பிவருவேன், எந்த ஆபத்தும் ஏற்படாது என்று தாய் நம்புவதாக கூறும் அவர், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது, அது இருள் சூழ்ந்திருக்கிறது என்கிறார்.

"என் குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளைக் கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை" என்கிறார் அஸ்மத்துல்லா. "வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்துவிட்டது, நிலைமை மேம்படாவிட்டால், என்ன செய்வது? வேறு வழியில்லை, நான் துபாய்க்குப் போய்விடுவேன்."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: