'ஸ்பைடர் மேன்' போல பாய்ந்து குழந்தையை காப்பாற்றிய நபர்

சில முக்கியச் செய்திகளின் சுருக்கங்களை தொகுத்தளிக்கிறது பிபிசி தமிழ்.

'ஸ்பைடர் மேன்' போல பாய்ந்து குழந்தையை காப்பாற்றிய நபர்

படத்தின் காப்புரிமை FACEBOOK

பாரிஸில் நான்காவது மாடி பால்கானியில் இருந்து தவறி விழுந்து, தொங்கி கொண்டிருந்த சிறுவனை மலியிலிருந்து குடிபெயர்ந்த ஒருவர் ஹீரோ போல காப்பாற்றியுள்ளார்.

மேற்கு ஆஃபிரிக்க நாடான மலியிலிருந்து குடிபெயர்ந்தவர் கசாமா. அவர் குழந்தையை காப்பாற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலவாக பரவியது.

ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில், ஒரு பால்கனியில் இருந்து மற்றொரு பால்கனிக்கு தாவி, 4 வயது குழந்தையை காப்பாற்றினார்.

கசாமாவுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க, ப்ரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் அவரை தன் மாளிகைக்கு அழைத்துள்ளார்.

நிலவில் காலடி எடுத்துவைத்த 4-வது நபர் மரணம்

முன்னாள் அமெரிக்க விண்வெளி வீரரும், நிலவில் காலடி எடுத்துவைத்த நான்காவது நபருமான ஆலன் பீன் டெக்ஸாஸில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 86.

தனது வாழ்வின் பிற்பகுதியில் ஒரு வெற்றிகரமான ஓவியராக திகழ்ந்த அவர், விண்வெளியால் ஈர்க்கப்பட்டு பல ஓவியங்களை படைத்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, நோய்வாய்ப்பட்ட அவர் ஹூஸ்டனில் ஒரு மருத்துவமனையில் இறந்ததாக கூறப்படுகிறது.

இலங்கை: வைரஸ் தொற்றுக்கு 11 சிறார்கள் பலி

படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கையில் தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் மருத்துவர் ஜி.விஜேசூரிய தெரிவத்தார்.

தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் தொற்றுக்குள்ளான பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்க தான் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சம்பவம்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

படத்தின் காப்புரிமை Getty Images

தூத்துக்குடியில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு நீக்கப்பட்டதையடுத்து, தமிழக அமைச்சர்கள் அங்கு சென்று மக்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, கடந்த மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தற்போது, தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்புவதையடுத்து, அங்கு விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். மேலும், அப்பகுதியில் நான்கு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இணைய சேவை மீண்டும் துவங்கியது.

இந்நிலையில், அச்சம்பவம் தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் பதிவான சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. அதில் முகத்தை மூடியவாறு சிலர் கார்களுக்கு தீ வைக்கும் காட்சியும், சில நபர்கள் கல்வீசி தாக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது சிஎஸ்கே

படத்தின் காப்புரிமை CSK/TWITTER

மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த 11-ஆவது ஐபிஎல் கோப்பை இறுதி போட்டியில் ஷேன் வாட்சனின் அபார சதத்தால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் கோப்பையை மூன்றாவது முறையாக கைப்பற்றியது.

இறுதி போட்டியில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் குவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்ல 179 ரன்கள் இலக்கு வைத்தது.

57 பந்துகளில் 117 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த ஷேன் வாட்சன், 11 பௌண்டரிகளையும், எட்டு சிக்ஸர்களையும் விளாசியுள்ளார்.

வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் இன்று சென்னை திரும்பவுள்ளதாக அணியின் தலைவர் தோனி தெரிவித்தார்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்