‘ரஷ்ய சர்வாதிகார அரசு இயந்திரம் நேர்மையை மன்னிக்காது’ - கொல்லப்பட்ட பத்திரிகையாளரும்,பின்னணியும்

ரஷ்ய பத்திரிகையாளர் அர்கடி பாப்சென்கோ கொலை செய்யப்பட்ட பின்னணியில் ரஷ்யா இருப்பதாக உக்ரைன் பிரதமர் வளோடிமிர் ஹரோய்ஸ்மேன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption ரஷ்ய பத்திரிகையாளர் அர்கடி பாப்சென்கோ

"ரஷ்ய சர்வாதிகார அரசு இயந்திரம் பத்திரிகையாளர் அர்கடி பாப்சென்கோவின் கொள்கை நிலைப்பாட்டையும், நேர்மையையும் மன்னிக்காது என்று உறுதியாக நான் நம்புகிறேன்" என்று உக்ரைன் பிரதமர் வளோடிமிர் ஹரோய்ஸ்மேன் ஃபேஸ்புக்கில் கருத்து பதிந்துள்ளார்.

கிரிம்லின்னை சேர்ந்த விமர்சகர் பாப்சென்கோ உக்ரைன் தலைநகர் கியாவில், அவர் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் வாசலில் கடந்த செவ்வாய்க்கிழமை சுடப்பட்டார்.

இது குறித்து ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது ரஷ்யா. ஆனால், அதே நேரம்,குருதி தோய்ந்த குற்றங்கள் கியாவ் அரசில் தினசரி நிகழ்வாக ஆகிவிட்டது என்றும் கூறியுள்ளது.

கிரிமீயாவை 2014 ஆம் ஆண்டு ரஷ்யா தன் பகுதியுடன் இணைத்தது. அப்போதிலிருந்து ரஷ்யா, உக்ரைன் இடையேயான உறவு சுமூகமாக இல்லை.

யார் இந்த அர்கடி பாப்சென்கோ?

அர்கடி பாப்சென்கோ ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றியவர்.

மாஸ்கோவில் அவர் சட்டம் பயின்றுகொண்டிருந்த போது, தனது 18 வயதில் கட்டாய ராணுவ சேவையில் சேர்க்கப்பட்டு, 1994 -2000 காலக்கட்டத்தில் நடந்த செட்சன் போரில் பங்கேற்றவர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ரஷ்ய பத்திரிகையாளர் அர்கடி பாப்சென்கோ

அதன்பின், அவர் பத்திரிகையாளராக ஆனார். பல்வேறு ஊடகங்களில் பணியாற்றினார். இவரது அரசியல் விமர்சனத்திற்காக இவர் நன்கு அறியப்பட்டார்.

சிரியா மற்றும் கிழக்கு உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்ட நடவடிக்கைகளை இவர் கடுமையாக கண்டித்தார்.

2016 ஆம் ஆண்டு, ரஷ்ய ராணுவ வீரர்களை சுமந்து கொண்டு, சிரியா நோக்கி சென்றுக் கொண்டிருந்த விமானம் ஒன்று கருங்கடலில் விழுந்து நொறுங்கியது. இதுதொடர்பாக, பாப்சென்கோ எழுதிய ஃபேஸ்புக் பதிவில், ரஷ்ய அரசை ஆக்கிரமிப்பாளர் என்று வர்ணித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து, அவருக்கு ஏராளமான மிரட்டல்கள் ரஷ்ய அரசிடமிருந்து வந்தன.

கார்டியனில் ரஷ்யாவை கடுமையாக விமர்சித்து அவர் எழுதிய கட்டுரை ஒன்று, அவர் அந்த நாட்டை விட்டு வெளியேற காரணமாக அமைந்தது. அப்போது அவர், 'இந்த தேசத்தில் நான் பாதுகாப்பாக உணரவில்லை' என்று கூறி இருந்தார்.

ஃபேஸ்புக் பதிவு

கடைசியாக அவர் பதிந்திருந்த ஃபேஸ்புக் பதிவில், நான்கு ஆண்டுகளுக்கு முன் அதிர்ஷ்டவசமாக அவர் தப்பிய ஒரு நிகழ்வை நினைவு கூர்ந்து உள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters

தான் உக்ரேனிய ராணுவ வீரர்களுடன் ஹெலிகாப்டர் ஒன்றில் கிழக்கு உக்ரைன் போர் களத்திற்கு செல்ல இருந்ததாகவும், ஹெலிகாப்டரில் போதுமான இடம் இல்லாததால் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் அந்த ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 14 பேர் மரணித்ததாகவும் அந்த பேஸ்புக் பதிவில் விவரித்து இருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்