கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ரஷ்ய பத்திரிகையாளர் டி.வி. நேரலையில் தோன்றினார்: ஏன் இந்த நாடகம்?

உக்ரைன் தலைநகர் கீயபில் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பத்திரிகையாளர்,தொலைக்காட்சி நேரலை ஒன்றில் உயிருடன் தோன்றியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters

அசாதாரண நிகழ்வாக, ரஷ்ய அரசின் கடுமையான விமர்சகராக கருதப்பட்ட பத்திரிகையாளர் தொலைக்காட்சி நேரலையில் தோன்றினார்.

அந்த பத்திரிகையாளரை கொலை செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரைனுக்கு தெரிய வந்ததும் இந்த ’கொலை’ நாடகம் நடத்தப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு சேவையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய பாதுகாப்புப் பிரிவின் சார்பில் அவரைக் கொலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக உக்ரைன் பாதுகாப்பு சேவைகள் பிரிவின் தலைவர் வசிஸ் ரிஸ்ஸக் தெரிவித்தார்.

பத்திரிகையாளரைக் கொலை செய்ய உக்ரைன் குடிமகன் ஒருவரை ரஷ்யர்கள் பணியமர்த்தி செயல்பட்டதாகவும், அந்த நபர் முன்னாள் படை வீரர்கள் உள்பட பலரை அணுகியதாவும், கொலை செய்ய 30 ஆயிரம் டாலர் வரை தருவதாக அவர் கூறியதாகவும் ரிஸ்ஸக் தெரிவித்தார். அவ்வாறு அணுகப்பட்டவர்களில் ஒருவர் தெரிவித்த தகவலின் அடிப்படையிலேயே ரகசியம் வெளிப்பட்டதாக அவர் கூறினார்.

பாப்சென்கோ உயிருடன் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "பிரசார ரீதியான விளைவுகளுக்காக" இந்த நாடகம் அரங்கேறியதாக ரஷ்ய பேச்சாளர் மரியா ஷகோரோவா தெரி்வித்துள்ளார்.

பின்புறம் சுடப்பட்டு தனது வீட்டு வாசலில் ரத்த வெள்ளத்தில் அந்த பத்திரிகையாளர் கிடந்தததை அவரின் மனைவி பார்த்ததாகவும், பின் அவர் அவசர ஊர்தியில் உயிரிழந்தார் என்றும் கூறப்படுகிறது.

இந்த கொலை ஒரு நாடகம் என தனது மனைவிக்கே தெரியாது என்றும் தனது மனைவியிடம் மன்னிப்பு கோருவதாகவும் பாப்சென்கோ தெரிவித்தார்.

தன்னை கொலை செய்ய திட்டமிடப்பட்டிருப்பது ஒரு மாதத்துக்கு முன்பே தனக்குத் தெரியும் என அவர் கூறினார்.

தொலைக்காட்சி நேரலையில், பத்திரிகையாளர் சந்திப்பில் அர்கடி பாப்சென்கோ தோன்றியதும், பெரும் கரகோஷம் எழுப்பப்பட்டது. தனது உயிரைக் காப்பாற்றியதற்காக உக்ரைன் பாதுகாப்புப் பிரிவினருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இந்த அசாதாரண நடவடிக்கை தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

2012ஆம் ஆண்டில் எதிர்க்கட்சிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற தேர்தலில் போட்டியிட்டார் பாப்சென்கோ. பின்பு சிரியா மற்றும் கிழக்கு உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் அவர் எழுதிய பதிவு ஒன்றின் காரணமாக அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்ததால் 2017ஆம் ஆண்டு ரஷ்யாவைவிட்டு தப்பிச் சென்றார் பாப்சென்கோ.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்