சிறையில் சித்திரவதை- சிஐஏ-வுக்கு உடந்தையாக இருந்த ஐரோப்பிய நாடுகள்

ஐரோப்பிய நாடுகள்

பட மூலாதாரம், AFP

அல்-கய்தா என்று சந்தேகிக்கப்பட்ட இரண்டு நபர்களை துன்புறுத்த, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான சிஐஏ-வுக்கு அனுமதி அளித்து லித்துவேனியா மற்றும் ரோமானியா நாடுகள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக ஐரோப்பிய நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

அமெரிக்காவில் செப்டம்பர் 2001ஆம் ஆண்டு தாக்குதலுக்கு பிறகு, அபு சுபைதா மற்றும் அப்த் அல்-ரஹிம் அல்-நஷிரி ஆகிய இருவரையும் அமெரிக்கா கைது செய்தது. தற்போது அவர்கள் குவான்டனாமோ சிறையில் உள்ளனர்.

லித்துவேனியா மற்றும் ரோமானியா ஆகிய இடங்களில், சிஐஏ ரகசிய சிறைகளை இயக்கி வருகிறது.

ஐரோப்பிய தடைகளை மீறி சித்தரவதை செய்ததாக இரு நாடுகள் மீதும், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் கூறியுள்ளது.

அபு சுபைதா மற்றும் அப்த் அல்-ரஹிம் அல்-நஷிரி ஆகிய இருவருக்கும் தலா 100,000 யூரோக்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், ICRC

படக்குறிப்பு,

அபு சுபைதா

9/11 தாக்குதலுக்கு பிறகு, சிஐஏ-வின் விசாரணைக்கான "கறுப்பு தளங்கள்", "ரகசிய கடத்தல்" கொள்கைபடி ரகசியமாக வைக்கப்பட்டன.

சவுதி அரேபியாவில் பிறந்த பாலத்தீனியரான அபு சுபைதா, 1990களில் அல்-கய்தாவின் தலைமை பணியமர்த்துபவராக செயல்பட்டார் என்றும், பிறகு ஒசாமா பின் லேடனுடன், மற்ற அல்-கய்தா குழுக்களுக்கு தொடர்பு ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்க புலனாய்வுபடி, அப்த் அல்-ரஹிம் அல்-நஷிரி, கல்ஃப் பகுதியில் அல்-கய்தா சார்பாக இயங்கி வந்தார். 2000ஆம் ஆண்டு ஏமனில், யூ எஸ் எஸ் கோல் என்ற அமெரிக்க கடற்படை கப்பல் மீது தாக்குதல் நடத்தியதற்கு இவர்தான் காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர்.

2003-2005 வரை சிஐஏ சிறையை ரோமானியா இயக்கியதாகவும், அங்கு அல்-நஷிரி "கடுமையான தாக்குதல் மற்றும் சித்தரவதைக்கு" ஆளாக்கப்பட்டதாக ஐரோப்பிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிஐஏ-வுடன் சேர்ந்து ரோமானியா, மனிதாபிமானமற்ற முறையில் அவரிடம் நடந்து கொண்டுள்ளதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இதே போன்று அபு சுபைதா விஷயத்தில், லித்துவேனியா நடந்து கொண்டதற்கு இதே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு நாடுகளும் சிஐஏ அமைப்புக்கு உடந்தையாக இருந்து, சிறைவாசிகளின் நிலை குறித்து முறையாக விசாரிக்க தவறிவிட்டதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அதில் பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட நபர்கள் கண்கள் கட்டப்பட்டனர், தனி சிறையில் அடைக்கப்பட்டனர் என்றும், தொடர்ந்து கால்கள் கட்டப்பட்டன, மேலும் அதிகப்படியான சத்தத்திற்கும் வெளிச்சத்திற்கும் உட்படுத்தப்பட்டனர், என்று குறிப்பிடப்பட்டுள்ள சிஐஏவின் ஆவணங்களை நீதிபதிகள் மேற்கோள் காட்டினர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: