கியூபா: 16 ஆண்டுகளுக்கு பிறகு அரசமைப்பு சீர்திருத்தம்

அதிபர் பதவிக்கான காலத்தை நிர்ணயம் செய்தல் மற்றும் ஒரே பாலின திருமணத்தை அங்கீகரித்தல் போன்ற பல்வேறு சீர்திருத்தங்களை கியூபாவின் அரசமைப்பு சட்டத்தில் மேற்கொள்வதற்கு அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

"சோசலிசத்தின் மாற்றமுடியாத இயல்பை" தக்க வைத்துக்கொண்டு கியூபாவின் பொருளாதார மற்றும் வெளியுலகத்துடனான தொடர்பை அரசமைப்பு முறையில் செயல்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

அரசமைப்பு சட்டத்தில் சாத்தியமான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான பணியை கியூபாவின் முன்னாள் அதிபரான ரால் காஸ்ட்ரோ முன்னெடுப்பார் என்று அந்நாட்டின் தற்போதைய அதிபரான மிகேல் டியாஸ்-கேனல் அறிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் ரால் காஸ்ட்ரோவுக்கு அடுத்த அதிபராக டியாஸ்-கேனல் பதவியேற்று கொண்டார்.

காஸ்ட்ரோ சகோதரர்களான பிடல் காஸ்ட்ரோ மற்றும் ரால் காஸ்ட்ரோ ஆகியோர் 1959 முதல் 2018 வரை வெவ்வேறு காலக்கட்டங்களில் கியூபாவை ஆட்சி செய்தனர்

சோசலிச கொள்கைகளை கொண்ட டியாஸ்-கேனல், கியூபாவின் அதிபராக பதவியேற்றுக்கொண்டு பேசியபோது, "கியூபாவில் முதலாளித்துவத்தை புகுத்த முயல்வோருக்கு இடம் கிடையாது" என்று தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை AFP

கடைசியாக கடந்த 2002ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தம், கியூபாவில் உள்ள அரசியல் அமைப்பின் சோசலிச தன்மையை "மாற்றமுடியாதது" என்று உறுதிசெய்தது.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்த விடயத்தில் நாடாளுமன்றம் என்ன செய்யப்போகிறது என்பதை எதிர்நோக்கி பெரும்பாலான கியூப மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

கலப்புப் பொருளாதாரத்தை நோக்கிய நகர்வை சிறுகுறு தொழில் நிறுவனங்களும், ஒருபாலின திருமணம் தொடர்பான ஒப்புதல் குறித்து செயற்பாட்டாளர்களும் எதிர்நோக்கி உள்ளதாக பிபிசியின் கியூபா செய்தியாளர் வில் கிராண்ட் தெரிவிக்கிறார்.

அரசமைப்பு சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கென்று குறிப்பிட்ட கால வரையறைகள் எதுவும் இல்லை என்றும், பெரும்பாலும் சீர்திருத்தமானது படிப்படியாக மேற்கொள்ளப்படுமென்றும் அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்