ஐரோப்பிய ஒன்றியத்தை பிளவுப்படுத்தும் நோக்கமில்லை - புதின்

ஐரோப்பிய ஒன்றியத்தை பிளவுப்படுத்த ரஷ்யா முயலவில்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Reuters

ஏறக்குறைய ஓராண்டுக்கு பின்னர், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மேற்கு பகுதியிலுள்ள ஆஸ்டிரியாவில் புதின் மேற்கொள்ளுகின்ற முதலாவது பயணத்திற்கு முன்பாக புதினின் இந்த கூற்று வந்துள்ளது.

ரஷ்யாவின் மிகவும் முக்கியமான வணிக மற்றும் பொருளாதார கூட்டாளியாக "ஒன்றித்த மற்றும் செழுமையான" ஐரோப்பிய ஒன்றியம் இருக்க விரும்புவதாக ஆஸ்டிரியாவின் ஒஆர்எஃப் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் புதின் தெரிவித்திருக்கிறார்.

புதினுக்கு ஆதரவான ஐக்கிய ரஷ்ய கட்சி, ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிர வலது சாரி கட்சிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருவது பல முற்போக்குவாதிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது.

இத்தாலியை தற்போது ஆளுகின்ற 2 ஜனரஞ்சக கட்சிகள் ரஷ்யாவோடு நெருங்கிய உறவுகள் வைத்துகொள்வதற்கு ஆதரவு அளிக்கின்றன. இவை இரண்டும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான கருத்துக்களை கொண்டுள்ளன.

படத்தின் காப்புரிமை Reuters

இந்த தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஐக்கிய ரஷ்யா கட்சிக்கும், ஆஸ்டிரிய தீவிர வலது சாரி சுதந்திர கட்சிக்கும் இடையிலான தொடர்புகளை புதின் பெரிய அளவில் குறிப்பிடவில்லை.

இந்த கட்சிகள் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தோடு செயல்பட்டு வருகின்ற. ஆனால், ரஷ்யாவிடம் இருந்து பணம் பெற்றதை ஆஸ்டிரிய சுதந்திர கட்சி மறுத்துள்ளது.

ஆஸ்டிரியாவை ஆளுகின்ற கூட்டணி அரசில் சுதந்திர கட்சி சில முக்கிய பதவிகளை கொண்டுள்ளது. உள்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு துறைகளுக்கு பொறுப்பேற்றுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது வித்துள்ள தடைகள் விலக்கப்பட வேண்டும் என்று இந்த கட்சி விரும்புகிறது.

2014ம் ஆண்டு க்ரைமியாவை ரஷ்யா இணைத்து கொண்டதால், அதன் மீது தடைகள் விதிக்கப்பட்டன.

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அதிக பிரச்சனைகள் இருப்பது, எங்களுக்கு அதிக ஆபத்துகளையும், பிரச்சனைகளையும் உருவாக்கும் என்று ரஷ்ய அதிபர் புதின் ஒஆர்எஃப் தொலைக்காட்சி பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தோடு ஒத்துழைப்பை உருவாக்குவது எமக்கு அவசியமாகும். ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள எதையும், யாரையும் பிளவுப்படுத்தும் நோக்கம் எங்களிடம் இல்லை" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption சிரியா அதிபர் அசாத் மற்றும் அவரது மனைவி

"புதிய பனிப்போர்" என்று சிலர் குறிப்பிடுவது சிரியாவின் உள்நாட்டு போரில் ரஷ்யாவின் பங்கு மற்றும் ரஷ்யாவின் முன்னாள் உளவுத்துறை முகவர் செர்கே ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் மீது இங்கிலாந்தின் தென் பகுதியில் நடைபெற்ற நச்சு தாக்குதலால் எழுந்ததாகும்.

இந்த நச்சு தாக்குதலுக்கு பின்னால் ரஷ்யா இருப்பதாக பிரிட்டன் குற்றஞ்சாட்டியது. ஆனால், இந்த தாக்குதலில் தங்களுக்கு பங்கில்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது.

ரஷ்யா பற்றிய மேற்குலக நாடுகளின் நிலைப்பாட்டை குறைத்து மதிப்பிடுவதற்கும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தேசியவாதிகள் அதிகாரம் பெற உதவவும் சமூக வலைதளங்களில் போலிச் செய்திகளை பரப்பி வருவதாக புதினுக்கு ஆதரவான செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டப்படுகின்றனர்.

ஆஸ்டிரியாவும், ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள பல நாடுகளும் தங்களின் எரிவாயு தேவைகளுக்காக அதிகமாகவும், சிலவேளைகளில் முழுமையாகவும் ரஷ்யாவையே நம்பியுள்ளன.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆஸ்டிரிய அதிபர் அலெக்ஸாண்டர் வான் டெர் பெல்லன் மற்றும் சான்சிலர் செபாஸ்டின் குருஸையும், வணிக தலைவர்களையும் செவ்வாய்க்கிழமை சந்திக்கிறார்.

ரஷ்ய அதிபர் புதின் பற்றி உலக மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ரஷ்ய அதிபர் புதினை பற்றி உலக என்ன நினைக்கிறார்கள்?

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :