பாகிஸ்தான்: வறுமையுடன் போராடினாலும் சாதிக்க துடிக்கும் குத்துச்சண்டை வீராங்கனைகள்

  • ஷுமைலா ஜாஃப்ரீ
  • பிபிசி உருது

பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரான கராச்சியில் மிகவும் நெரிசலான குடியிருப்பு பகுதிகளில் ஒன்று லியாரி. பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக வாழும் இந்தப் பகுதியில் வாழும் அனைத்துக் குடும்பங்களுக்கும் பொதுவான அம்சம் வறுமைதான் .

தீவிரவாத நடவடிக்கைகளாலும் சட்டவிரோதக் குழுக்களுக்கு இடையே உண்டாகும் மோதல்களாலும் சில காலத்துக்கு முன்பு வரை பாதுகாப்பு படைகளை சேர்ந்தவர்கள்கூட அங்கு செல்வது இதுவரை எளிதானதாக இருக்கவில்லை.

அவை அனைத்தும் தற்போது ஒழிக்கப்பட்டுள்ளதால் இப்போதுதான் வெளியுலகைச் சேர்ந்தவர்கள் அப்பகுதிக்குள் நுழையும் நிலை உண்டாகியுள்ளது.

நான் அங்கு பயணம் மேற்கொண்டபோது நான் முதலில் சென்ற இடம் அங்குள்ள ஒரு குத்துச்சண்டை பயிற்சி மையம்.

தினமும் பள்ளி நேரம் முடிந்ததும் இருபத்தி ஐந்துக்கும் மேலான பள்ளி மாணவிகள் நேராக பாக் ஷாகீன் குத்துச்சண்டை மன்றத்துக்குத்தான் வருகிறார்கள். குத்துச்சண்டை மீது அவர்கள் கொண்டுள்ள கனவு அவர்களை உடலளவிலும் மனதளவிலும் வலிமை மிக்கவர்கள் ஆக்கும் என்று நம்புகிறார்கள்.

லியாரியில் வாழும் இந்த இளம் பெண்களுக்கு குத்துச்சண்டைதான் முதல் காதல்.

அழுக்கடைந்து மோசமான நிலையில் இருந்தாலும் அந்தப் பயிற்சி மையத்தில் ஒரு குத்துச்சண்டை வளையம் உள்ளது.

குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் படம் அங்குள்ள ஒரு சுவரில் தொங்கிக்கொண்டிருந்தது. குத்துச்சண்டைக்கான கையுரைகள் இன்னொரு சுவரில் தொங்கிக்கொண்டிருந்தன.

அங்கு பயிற்சி எடுக்கும் 13 வயது மாணவியான அலியா சோமரோ இதுவரை தோல்வியைச் சந்தித்ததே இல்லை. முகமது அலிதான் அலியாவுக்கு உந்துதல்.

"முகமது அலியின் போட்டிகளைப் பார்த்துள்ளேன். குத்துச்சண்டையில் அவர் தனது வலது கையைப் பயன்படுத்தும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மூன்று முறை பட்டம் வென்றார். நான் ஐந்து முறை வெல்வேன்," என்று சிவந்த முகத்துடன் குத்துச்சண்டை மேடைமீது நின்றுகொண்டு என்னிடம் சொல்கிறார்.

"பல பெண்களை குத்துச்சண்டையில் பங்கேற்க அவர்கள் குடும்பம் அனுமதிப்பதில்லை. எனினும் எனக்கு அப்படி இல்லை. என் தந்தை ஒரு கால்ப்பந்து வீரர். அதனால், அவர் என்னை ஊக்குவிக்கிறார்," என்கிறார் அலியா.

குடும்பத்தின் ஆதரவு இருப்பதால் மட்டுமே அலியாவுக்கு எல்லாம் எளிதானதாக இல்லை.

"நான் முதல் முறையாக குத்துச்சண்டை மேடை ஏறியபோது என்னை மிகவும் இழிவாகப் பேசினார்கள். வீட்டிலேயே இருந்துகொண்டு தொழுகை செய்யுமாறும், குரான் படிக்குமாறும் கூறினார்கள். என்னைக் குத்துச்சண்டை விளையாட அனுமதித்த என் தந்தையையும் கேள்வி எழுப்பினார்கள்," என்று தன் அனுவபவங்களை விவரிக்கிறார் அந்த இளம் வீராங்கனை.

என்றாவது ஒருநாள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தனது நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

பாக் ஷாகீன் குத்துச்சண்டை மன்றத்தின் பயிற்சியாளர் பெண்களுக்கும் பயிற்சி அளிக்கலாம் என்று 2013இல் முடிவெடுத்தபோது லியாரியில் அதை எதிர்க்கும் மற்றும் ஆதரிக்கும் குழுக்களிடையே உண்டான மோதலால் தெருக்கள் வன்முறைக் கோலம் பூண்டன. அந்த வன்முறைகளின் எளிய இலக்கு பெண்கள்தான்.

"அது மிகவும் மோசமான காலகட்டமாக இருந்தது. எங்கள் பயிற்சி மையத்தின் வளாகத்தில் துப்பாக்கி புல்லட்டுகளைகூட நான் கண்டெடுத்துள்ளேன்," என்கிறார் பயிற்சியாளர் யூனிஸ் குவாம்பரானி.

"வறுமை மற்றும் வன்முறையில் தள்ளப்பட்ட இந்த மக்களுக்கு விளையாட்டு நம்பிக்கையைக் கொடுக்கும் என்று நான் நம்பினேன். ஆனால், நான் பெண்களுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கியபோது இங்கிருந்தவர்கள் அதை விரும்பவில்லை. நானும் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை," என்கிறார் யூனிஸ்.

இங்கு பயிற்சி பெரும் மாணவிகள் பல்வேறு வயதினர். இவர்களுக்கு முறையான உபகாரணங்களோ காலணிகளோ இல்லை.

யூனிஸ் பல பெண்களுக்கு இதுவரை பயிற்சி வழங்கியுள்ளார். ஆனால் அவர்கள் யாரும் கடைசிவரை இருப்பதில்லை. சில போட்டிகளில் வென்றபின்பு இங்கு வருவதை நிறுத்திக்கொள்கின்றனர்.

"குத்துச்சண்டை என்பது ஒரு மிகவும் உதவிகரமான திறன். அதைத் தேவைப்படும்போது மட்டுமே பயன்படுத்தவேண்டும்," என்று கூறும் மாணவி அனம் குவாம்பரானி, முன்னர் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவே மிகவும் தயக்கம் கொண்டிருந்த தான் தற்போது தன்னம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறுகிறார்.

இப்போது அந்தப் பயிற்சி மையம் போதிய நிதி இல்லாமல் தத்தளிக்கிறது. அதன் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.

"எங்கள் மாணவிகள் உடை மாற்றக்கூட தனி அறை இல்லை. ஒரு போட்டியை நடத்த 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. நிதி கிடைத்தால் இன்னும் சிறப்பாக எங்களால் செயல்பட முடியும். இன்னும் அதிகமான பெண்களுக்கு பயிற்சியளிக்க முடியும்," என்கிறார் யூனிஸ்.

இந்த அனைத்து தடைகளையும் மீறி சர்வதேச அளவில் சாதனை படைக்க விரும்புகிறார்கள் இந்தச் சிறுமிகள்.

பயிற்சியின்போது அங்கே தொங்கிக்கொண்டிருக்கும் பைகளை ஆவேசத்துடன் குத்துகிறார்கள். அவர்கள் கண்களிலும் உடல் மொழியிலும் நம்பிக்கை தெரிகிறது.

அந்தப் பயிற்சி மையத்தின் சுவரில் 'ஒளரத் - ஹிம்மத் - தாக்கத்' என்று எழுதியிருந்தது. அதன் பொருள் 'பெண்கள் - வலிமை - அதிகாரம்.'

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: