“அமெரிக்கா- வட கொரியா மாநாடு நடைபெற வேண்டுமென கிம் கெஞ்சினார்”

கிம் படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்கா - வடகொரியா உச்சிமாநாட்டை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்ததையடுத்து, அதனை மீண்டும் நடத்தக்கோரி வட கொரிய தலைவர் கிம் கெஞ்சியதாக டிரம்பின் வழக்கறிஞர் ரூடி ஜூலியானி தெரிவித்தார்.

இஸ்ரேலில் உச்சிமாநாடு ஒன்றில் பேசிய அவர், அதிபர் டிரம்பின் கடுமையான நிலைப்பாடு வட கொரியாவை இந்த நிலைமைக்கு தள்ளியதாக கூறினார்.

ஜூன் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்த சந்திப்பு 2 வாரங்களுக்கு முன்னால் அதிபர் டிரம்பால் ரத்து செய்யப்பட்டது

ஆனால், அப்போது முதல் இருதரப்பாலும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தொடர்புகளாலும், முயற்சிகளாலும் இந்தப் பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

மே 10: சிங்கப்பூரில் ஜூன் 12ஆம் தேதி கிம்மை சந்திப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.

மே 12: அணுஆயுத சோதனை தளத்தை தகர்த்த உள்ளதாக வட கொரியா அறிவித்தது.

மே 16: அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனின் சர்ச்சைக்குரிய கருத்துகளால் உச்சிமாநாடை ரத்து செய்வதாக வட கொரியா எச்சரித்தது.

மே 18: ஜான் போல்டனின் கருத்துகளில் இருந்து தாம் மாறுபடுவதாக டிரம்ப் தெரிவித்தார்.

மே 22: " சில நிபந்தனைகள் ஒப்புக் கொள்ளப்படாத வரையில்", சந்திப்பு நடைபெறாது என டிரம்ப் வற்புறுத்தினார்.

மே 24: "கடும் கோபம் மற்றும் திறந்த விரோத போக்கினை" வட கொரியா கடைபிடிப்பதாகக்கூறி மாநாட்டை ரத்து செய்தார் அதிபர் டிரம்ப்.

ஜூன் 1: வட கொரியா அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு, சிங்கப்பூரில் உச்சிமாநாடு நடைபெறும் என டிரம்ப் அறிவித்தார்.

"கிம் ஜாங்-உன் மண்டியிட்டு கெஞ்சினார். அந்த நிலையில்தான் அவரை வைக்க வேண்டும்" என்று ரூடி ஜூலியானி தெரிவித்ததாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வட கொரியா எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்நிலையில், உச்சிமாநாட்டுக்கான திட்டங்கள் "நல்ல விதமாக நடைபெற்று வருவதாக" டிரம்ப் தெரிவித்தார்.

முன்னதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் இந்த "லிபியா மாதிரியை" பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்தது வட கொரியாவில் எச்சரிக்கையை தூண்டியது.

"லிபியா மாதிரி" என்றால் என்ன? கடந்த 2003ஆம் ஆண்டு லிபியா தலைவர் கடாஃபி, அணுசக்தி ஆயுதங்களை கைவிடுவதாக ஒப்புக் கொண்டார். அதனையடுத்து அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டன. ஆனால், 2011ஆம் ஆண்டு மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களால் கடாஃபி கொல்லப்பட்டார்.

பின்பு, "லிபியா மாதிரி" போன்ற ஒன்று, வட கொரியாவில் நடத்தப்படாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: