டிரம்ப்-கிம் சந்திப்பு: கடைசி நேரத்தில் ஜப்பான் பிரதமர் டிரம்பை சந்திப்பது ஏன்?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னும் சந்திக்கவுள்ள சில நாட்களுக்கு முன், அதிபர் டிரம்ப் - ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டிரம்ப் மற்றும் ஷின்சோ அபே

பட மூலாதாரம், AFP

சிங்கப்பூரில் ஜூன் 12ம் தேதி நடைபெறவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாட்டுக்கு முன்னர் நடைபெறுகின்ற ராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக பிரதமர் அபேயின் இந்த சந்திப்பு பார்க்கப்படுகிறது.

டிரம்ப்-கிம் உச்சி மாநாட்டுக்கான நிகழ்ச்சிநிரலின் சில விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

செவ்வாய்கிழமை வாஷிங்டனில் அதிபர் டிரம்பை ஷின்சோ அபே சந்திக்கும்போது, ஜப்பானின் உள்நாட்டுப் பாதுகாப்பு பற்றிய கவலைகளை எடுத்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வியாழக்கிழமை வட கொரிய வெளியுறவு அமைச்சர் ரி யோங்-ஹோவை சந்திக்க சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் பியோங்யாங் சென்றுள்ளார்.

ஜப்பானின் கவலைகள்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

அமெரிக்கா - வடகொரியா உச்சிமாநாட்டை அதிபர் டிரம்ப் ரத்து செய்ததையடுத்து, அதனை நடத்தக்கோரி வட கொரிய தலைவர் கிம் கெஞ்சியதாக டிரம்பின் வழக்கறிஞர் ரூடி ஜூலியானி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனல்டு டிரம்ப் பதவியேற்றது தொடங்கி அபே அவ்வப்போது டிரம்பை சந்தித்து வந்துள்ளார்.

பல தசாப்த கால அமெரிக்க கொள்கையை முறியடிக்கும் விதமாக, வட கொரிய தலைவரை அதிபர் டிரம்ப் சந்திக்கப்போவதாக அறிவித்தது முதல், ஜப்பானின் கவலைகளை எடுத்துரைக்க பிரதமர் அபே ஆர்வமாக இருந்து வருகிறார்.

ஜப்பானின் நலன்களை புறந்தள்ளுகின்ற வகையிலான ஒப்பந்தம் ஒன்றை வட கொரியாவோடு அதிபர் டிரம்ப் உருவாக்கலாம் என்ற கவலைகள் ஜப்பானில் நிலவுகின்றன.

அமெரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன்னதாக பேசிய ஷின்சோ அபே, அணு ஆயுதப் பிரச்சனை, ஏவுகணை சோதனைகள், மிக முக்கியமாக கடத்தப்பட்டோர் பிரச்சனைகளில் முன்னேற்றம் ஏற்படுவதை ஒருங்கிணைக்க அதிபர் டிரம்பை சந்திக்கப்போவதாக கூறியுள்ளார்.

1970களிலும், 1980களிலும் வட கொரிய உளவாளிகளுக்கு ஜப்பானிய மொழி மற்றும் பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுப்பதற்காக பல ஜப்பானியரை வட கொரியா கடத்தியது.

பட மூலாதாரம், REUTERS/CAPELLA SINGAPORE

படக்குறிப்பு,

சிங்கப்பூரில் டிரம்ப்-கிம் சந்திப்பு நடைபெறும் சிங்கப்பூரின் சென்டோசா தீவிலுள்ள கேபெல்லா ஐந்து நட்சத்திர ஹோட்டல்

13 பேரை கடத்தியதாக வட கொரியா ஒப்புக்கொண்டிருந்தாலும், சரியான எண்ணிக்கை அதிகமாக இருக்குமென நம்பப்படுகிறது.

இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கும் வட கொரியாவின் அரசு செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ, அணு ஆயுத குறைப்பு செயல்முறையில் பாதிப்பை ஏற்படுத்த ஜப்பான் இந்தப் பிரச்சனையை மிகைப்படுத்துவதாக தெரிவித்திருக்கிறது.

ஜப்பானை கடந்து செல்லும் வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளையும் கடந்த ஆண்டு ஜப்பான் கண்டுள்ளது.

ஜப்பானின் நலன்களை மேலோட்டமாக மட்டுமே பார்க்க கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில், சிங்கப்பூர் மாநாட்டுக்கு முன்னர் நடைபெறும் ராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக டிரம்ப்-அபே சந்திப்பு பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :