உலக வரலாற்றின் சிறப்புமிக்க 10 கை குலுக்கல்கள்

உலக வரலாற்றின் சிறப்புமிக்க 10 கைகுலுக்கல்கள் படத்தின் காப்புரிமை Getty Images

நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த வரலாற்று சிறப்புமிக்க சிங்கப்பூர் உச்சிமாநாட்டின் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆகியோர் முதல் முறையாக பரஸ்பரம் சந்திக்கும் இந்த இரு நாடுகளின் தலைவர்கள் என்ற பெயரைப் பெற்றுள்ளனர்.

குறிப்பாக இருநாட்டு தலைவர்களும் கைகுலுக்கும் விதத்தை பல்வேறு தரப்பினரும் ஆவலுடன் கவனித்தனர்.

இதே போன்று கடந்த காலங்களில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க கைகுலுக்கல்களை காண்போம்.

1. சாம்பர்லைன் - ஹிட்லர்

படத்தின் காப்புரிமை Getty Images

செப்டம்பர் 22, 1938 - ஜெர்மானிய சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் மற்றும் பிரிட்டன் பிரதமர் நெவில்லே சாம்பர்லைன் ஆகியோர் ஜெர்மனில் நடைபெற்ற சந்திப்பின்போது கைகுலுக்கிய படம்.

செக்கோஸ்லோவாக்கியாவின் பகுதியாக இருந்த சூடெட்லேண்டின் மீதான ஜெர்மனின் ஆக்கிரமிப்பை பற்றி அவர்கள் விவாதித்தனர்.

2. சர்ச்சில், ட்ரூமன் மற்றும் ஸ்டாலின்

படத்தின் காப்புரிமை Getty Images

ஜூலை 23, 1945 - அமெரிக்க அதிபர் ட்ரூமன் (நடுவில்) பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுடன் (இடது) மற்றும் சோவியத் ரஷ்யாவின் தலைவர் ஜோசப் ஸ்டாலினுடன் (வலது) கைகுலுக்கிய காட்சி.

இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஐரோப்பாவுக்கு, குறிப்பாக ஜெர்மனிக்கு என்ன நிலை ஏற்படும் என்பது குறித்து விவாதிப்பதற்காக மூன்று நாடுகளின் தலைவர்களும் சந்தித்தனர்.

3. ஜான்சன் - லூதர் கிங் ஜூனியர்

படத்தின் காப்புரிமை Getty Images

ஜூலை 2, 1964 - வெள்ளைமாளிகையில் நடந்த சிவில் உரிமைகள் சட்டத்தை அங்கீகரிக்கும் நிகழ்வின்போது அமெரிக்க அதிபர் ஜான்சன் மற்றும் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கைகுலுக்கியபோது எடுத்த படம்.

இனம், நிறம், மதம், பாலினம் மற்றும் நாடு ஆகியவற்றின் காரணமாக அமெரிக்காவில் வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதை இந்த சட்டம் தடுத்தது.

4. மாவோ - நிக்சன்

படத்தின் காப்புரிமை Getty Images

பிப்ரவரி 21, 1972 - கம்யூனிச சீனாவின் தலைவர் மாவோ மற்றும் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் பெய்ஜிங்கில் நடந்த சந்திப்பின்போது கைகுலுக்கிய காட்சி.

23 ஆண்டுகளாக முறிந்திருந்த அமெரிக்க - சீனா உறவை புதுப்பிப்பதற்காக நிக்சன் சீனாவிற்கு இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

5. கோர்பசேவ் - ரீகன்

படத்தின் காப்புரிமை Getty Images

நவம்பர் 1985 - பனிப்போரின் நிறைவுக்கு பின்னர் முதல் முறையாக ஜெனீவாவில் நடந்த மாநாட்டின்போது சோவியத் ரஷ்யாவின் பிரதமர் கோர்பச்சேவ் மற்றும் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் கைகுலுக்கிய காட்சி.

6. தாட்சர் மற்றும் மண்டேலா

படத்தின் காப்புரிமை Getty Images

ஜூலை 4, 1990 - லண்டனில் நடந்த சந்திப்பின்போது பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர் மற்றும் தென்னாபிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா கைகுலுக்கிய காட்சி.

இந்த சந்திப்புக்கு முன்னர் மண்டேலாவின் ஏ.என்.சி. கட்சியை "தீவிரவாத இயக்கத்தை போன்றது" என்று தாட்சர் விமர்சித்திருந்தார்.

7. ராபின் மற்றும் அராபத்

படத்தின் காப்புரிமை Getty Images

செப்டெம்பர் 13, 1993 - வாஷிங்டனில் நடந்த சந்திப்பின்போது பாலஸ்தீனிய தலைவர் யாசிர் அராபத் மற்றும் இஸ்ரேல் பிரதமர் ராபின் ஆகியோர் கைகுலுக்கும் காட்சி.

இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்திற்கு இடையேயான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக இந்த சந்திப்பு நடந்தது.

8. மெக்கின்னஸ் மற்றும் இரண்டாம் எலிசபெத்

படத்தின் காப்புரிமை Getty Images

ஜூன் 27, 2012 - வடக்கு அயர்லாந்தின் பிராந்திய துணை பிரதமரான மார்ட்டின் மெக்கின்னஸ் மற்றும் இரண்டாம் எலிசபெத் கைகுலுக்கும் காட்சி.

பிரிட்டின் மற்றும் அயர்லாந்தின் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேசுவதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது.

9. ஒபாமா மற்றும் காஸ்ட்ரோ

படத்தின் காப்புரிமை Getty Images

மார்ச் 21, 2016 - அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் கியூபாவின் அதிபர் ரவுல் காஸ்ட்ரோ ஆகியோர் கியூபாவின் தலைநகர் ஹவானாவில் நடைபெற்ற சந்திப்பின்போது கைகுலுக்கும் காட்சி.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டிற்கு பிறகு கியூபாவிற்கு செல்லும் முதல் அமெரிக்க அதிபர் என்ற பெயரை இதன் மூலம் ஒபாமா பெற்றார்.

10. சாண்டோஸ் மற்றும் டிமோசென்கோ

படத்தின் காப்புரிமை Getty Images

ஜூன் 23, 2016 - ஹவானாவில் நடைபெற்ற அமைதி உடன்பாட்டில் கையெழுத்திடும் நிகழ்வின்போது கொலம்பியாவின் அதிபர் சாண்டோஸ் மற்றும் கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப்படைகளின் தலைவர் டிமோசென்கோ ஆகியோர் கைகுலுக்கும் காட்சி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :