'எங்கள் நாட்டுக்கு வாருங்கள்' - பரஸ்பரம் அழைப்பை ஏற்ற டிரம்ப், கிம்

படத்தின் காப்புரிமை Reuters

தென் கொரியாவுடனான ராணுவ பயிற்சிகளை அமெரிக்கா நிறுத்திக் கொள்ளும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததையடுத்து, பாதுகாப்பு அம்சங்களில் ''இரும்புக்கவசம்'' போன்ற உறுதி மற்றும் நிலைபாட்டினை தங்கள் கூட்டணி நாடுகளுக்கு அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் மீண்டும் உறுதி செய்துள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாடு நடந்து முடிந்த நிலையில், மாநாட்டின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், தென் கொரியாவுடனான ராணுவ பயிற்சிகளை அமெரிக்கா நிறுத்திக் கொள்ளும் என்று அறிவித்தார்.

டிரம்பின் இந்த அறிவிப்பு வட கொரியாவுக்கு மிகவும் சாதகமா பார்க்கப்படும் அதே வேளையில், கொரிய தீபகற்பத்தின் அருகாமை பகுதிகளில் உள்ள அமெரிக்காவின் கூட்டணி நாடுகளை இந்த அறிவிப்பு வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதனிடையே, வட கொரியாவின் அரசு ஊடகமான கேசிஎன்ஏ வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவுக்கு வருகை தருமாறு டிரம்ப் விடுத்த அழைப்பை வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஏற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் நடந்த இரு தலைவர்கள் இடையிலான உச்சிமாநாட்டின்போது டிரம்ப் இந்த அழைப்பை விடுத்ததாக கூறப்படுகிறது.

அதே வேளையில், டிரம்புக்கு விருப்பமான சமயத்தில் அவர் வட கொரியாவுக்கு வருமாறு, கிம்மும் அழைப்பு விடுத்துள்ளார்.

''இரு தலைவர்களும் ஒருவருக்கொருவரின் அழைப்பை மகிழ்வாக ஏற்றுக் கொண்டனர்'' என்று கேசிஏன்ஏ மேலும் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை GETTY IMAGES

இரு நாடுகள் இடையிலான உறவை வேலும் அதிகரிக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும், நேற்றைய சந்திப்பின் முடிவில் இரு தரப்பும் வெளியிட்ட கூட்டறிக்கையில், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத நீக்கத்தை நோக்கி வடகொரியா உறுதியுடன் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

வடகொரியா மீதான தடைகள் விலக்கு எப்போது?

அணு ஆயுத பயன்பாடு முடியும்போதுதான் வடகொரியா மீதான பொருளாதார தடைகள் விலக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

"நான் தடைகளை நீக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்," என்று கூறிய டிரம்ப் ''அணு ஆயுத நீக்கம் குறித்து வட கொரியா உத்தரவாதம் அளிக்கும்போது தடை நீக்கம் பற்றி முடிவு செய்யப்படும். தற்போதைக்கு இந்த தடைகள் தொடரும்'' என்று குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அணு ஆயுதங்களை கைவிட்டால், வட கொரியா பல விஷயங்களை சாதிக்க முடியும் என்று குறிப்பிட்ட அவர், "மற்ற நாடுகள் வட கொரியாவுடன் தொடர்பில் இருக்க வேண்டும்" என்றார்.

இந்நிலையில், வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவுகளில் ஏற்பட்டுள்ள சாதகமான நிலைக்கு ஆதரவு அளிக்கும் விதமாக வட கொரியாவுக்கு எதிரான தடைகள் விலக்கிக் கொள்ளப்படலாம் என்று சீனா தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :