ஏமன் போர்: ஹூடேடா துறைமுகத்தில் அரசு ஆதரவுப் படைகள் தாக்குதல்

ஏமனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிக முக்கிய ஹூடேடா துறைமுகத்தில் சௌதி ஆதரவு பெற்ற அரசுப் படைகள் தாக்குதல் தொடங்கியுள்ளன.

படத்தின் காப்புரிமை EPA

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் வாழும் மக்களுக்கு உதவிகளை கொண்டு சேர்ப்பதற்கு இந்த துறைமுகம் மிக முக்கிய வாயிலாக இருப்பதால், இது தாக்கப்பட்டால் மனிதப் பேரழிவு ஏற்படும் என்று உதவி நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன.

போரால் அவதிப்படும் இந்த நாட்டில் 80 லட்சம் பேர் பட்டினியால் துன்பப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர்.

செவ்வாய்கிழமை இரவு 12 மணிக்குள் ஹூடேடா துறைமுகத்தில் இருந்து பின்வாங்க வேண்டும் என்ற காலக்கெடுவை இரானின் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் புறக்கணித்துவிட்ட பின்னர், குண்டு தாக்குதல் தொடங்கியது.

சௌதி அரேபியா தலைமையிலான பெரிதும் வளைகுடா நாடுகளைக் கொண்ட கூட்டணி, ஏமனிலுள்ள நன்றாக பாதுகாக்கப்பட்ட இந்த முக்கிய நகரை கைப்பற்ற முயலுவது இதுவே முதல்முறை.

ஹூதி கிளர்ச்சியாளர்களும், அதனுடைய கூட்டணி படைப்பிரிவுகளும், தலைநகர் சனா உள்பட நாட்டின் வட மேற்கு பகுதிகளை முற்றுகையிட்ட 2014ம் ஆண்டு பிற்பாதியில் இருந்து இந்த மோதல் தொடங்கியது.

அதன் விளைவாக, ஏமனின் அதிபர் அபடுருபூ மன்சோர் ஹாதி வெளிநாடு தப்பி செல்ல வேண்டியதாயிற்று.

இரான் நாட்டின் பினாமியாக பார்க்கப்பட்ட இந்த குழுவின் வளர்ச்சியால் எச்சரிக்கை அடைந்த சௌதி அரேபியாவும், பிற சுன்னி அரேபிய எட்டு நாடுகளும் 2015ம் ஆண்டு மார்ச் மாதம் ஹாதியின் அரசை மீட்டெடுக்க ராணுவ நடவடிக்கையை தொடங்கின.

ஹூடேடா துறைமுகத்தின் கேந்திர முக்கியத்துவம்

இரானில் இருந்து ஆயுதங்களை கடத்துவதற்கு ஹூடேடா துறைமுகத்தை கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்துவதாக சௌதி தலைமையிலான கூட்டணி நாடுகள் குற்றஞ்சாட்டுகின்றன.

இரானும், கிளர்ச்சியாளர்களும் இதனை மறுத்து வருகின்றனர்.

ஏமன் மோதல்: யார், யாரோடு, ஏன் மோதுகிறார்கள்? (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஏமன் மோதல்: யார், யாரோடு, ஏன் மோதுகிறார்கள்?

இந்த தாக்குதலின் வெற்றி இந்த போரில் இருந்துவரும் முட்டுக்கட்டைகளை அகற்றி ஹூதி கிளர்ச்சியாளர்களை பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு கட்டாயப்படுத்தும் என்று இந்த கூட்டணி நாடுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், ஏமன் மக்கள்தொகையில் பெரும்பாலானோருக்கு இந்த துறைமுகம்தான் உயிர்ப்பாதையாக விளங்குகிறது.

எனவே, தாக்குதலை தடுக்கின்ற ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு போரிடும் தரப்புக்களை ஒன்றாக கொண்டு வருவதற்கு ஐக்கிய நாடுகள் அவை முயற்சித்து வருகிறது.

இந்தப் பகுதியில் 6 லட்சம் பேர் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையால் எட்டப்படும் தீர்வு ஒன்றை இருதரப்பும் காண வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் அகதிகள் ஆணையத்தின் தலைவர் பிலிப்போ கிரான்டி கூறியுள்ளார்,

படத்தின் காப்புரிமை Getty Images

"நீடிக்கும் மோசமான பாதிப்புகளால் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் தங்களின் உயிர் உள்பட எல்லாவற்றையும் இழக்க நேரிடலாம் என்று நாங்கள் அஞ்சுகிறோம்" என்று ஏமனுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் மனிதநேய ஒருங்கிணைப்பாளர் லிசி கிரான்டே எச்சரித்திருக்கிறார்.

தாக்குதல் பற்றிய அறிவிப்பு

அமைதி மற்றும் அரசியல் வழிமுறைகள் அனைத்தும் தோல்வியடைந்த பின்னர், ஏமனின் படைப்பிரிவுகளும், சௌதியின் தலைமையிலான படைப்பிரிவுகளும் தாக்குதலை தொடங்கியுள்ளதாக ஏமன் அரசு செவ்வாய்கிழமை அறிவித்தது.

ஹூதி நிலைகளின் மீது கூட்டணி நாடுகளின் போர் விமானங்களும், போர் கப்பல்களும் குண்டு தாக்குதலை தொடங்கியுள்ளன.

சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசை ஆதரிக்கின்ற ஏமன் கூட்டணி படைப்பிரிவுகள் தரை தாக்குதலை தலைமையேற்று நடத்தி வருகின்றன.

இந்த துறைமுகத்திற்கு அருகில் அதிக, ஒருமுகப்படுத்தப்பட்ட தாக்குதல் நடைபெறுவதாக சௌதி அரேபியாவின் அல் அரேபியா வலையமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

"வெளிநாட்டு திட்டங்களுக்கு பணிபுரிவதற்காக ஏமனை கைப்பற்றியுள்ள தீவிரவாதிகளிடம் இருந்து அந்நாட்டை மறுபடியும் மீட்பதற்கு, ஹூடேடா துறைமுகத்தை கைப்பற்றுவது எமது போரில் திருப்புமுனையாக அமையும்" என்று அரசு தெரிவித்திருக்கிறது,

"எல்லா முன்னிலைகளிலும் கூட்டணி படைகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடப்போவதாக கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

கடும் மனிதநேய நெருக்கடி

2015ம் ஆண்டு மார்ச் முதல் நடைபெற்று வருகின்ற இந்த போரில் சுமார் 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் மூன்றில் இரண்டு பங்கினர் குடிமக்களாகும் என்று ஐக்கிய நாடுகள் அவை தெரிவிக்கிறது.

ஏமன் போர் அழிவுகளுக்கு மேற்குலகின் பங்களிப்பு (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
யேமன் போர் அழிவுகளுக்கு மேற்குலகின் பங்களிப்பு

வான் தாக்குதல்களின் விளைவாகதான் பெருமளவான உயிரிழப்புகள் நடைபெற்றுள்ளன. ஐ.நா.வின் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை நோய் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் இறந்தோரின் எண்ணிக்கையை சேர்க்கவில்லை.

இந்த மோதலும், கூட்டணிப் படைகளின் ஒரு பகுதி முற்றுகையும் 220 லட்சம் மக்களுக்கு மனிதநேய உதவிக்கான அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், உலகிலேயே பெரிய உணவு தேவைக்கான அவசர நிலை ஏற்பட்டுள்ளதோடு, 2,290 பேர் உயிரிழந்துள்ளதாக நம்பப்படும் திடீர் காலரா தொற்றும் ஏற்பட வழிவகுத்தது.

உலகை உலுக்கிய ஏமன் சிறுவன் (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உலகை உலுக்கிய ஏமன் சிறுவன் (காணொளி)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :