உலகப் பார்வை: ஈபிள் டவருக்கு குண்டு துளைக்காத கண்ணாடி பாதுகாப்பு

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

ஈபிள் டவருக்கு பாதுகாப்பு வேலி

படத்தின் காப்புரிமை Reuters

தீவிரவாத அச்சுறுதல்களில் இருந்து பாரிஸின் ஈபிள் டவரை பாதுகாப்பதற்காக, அதனைச் சுற்றி புதிய பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன

10.6 அடி உயரத்திலான இரும்பு வேலி மற்றும் குண்டு துளைக்காத கண்ணாடிகள் ஈபிள் டவருக்கு பாதுகாப்பாக அமைக்கப்படுகின்றன.

படத்தின் காப்புரிமை Reuters

ஜூன் 2016-ம் ஆண்டு ஈபிள் டவரை சுற்றி தற்காலிக வேலி அமைக்கப்பட்ட நிலையில், தற்போது நிரந்தர பாதுகாப்பு வேலிகள் அமைய உள்ளன.

கடந்த 2015 முதல் பிரான்ஸில் நடத்த தீவிரவாத தாக்குதல்களில் 240க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரம்பின் முன்னாள் பிரசார மேலாளருக்குச் சிறை

படத்தின் காப்புரிமை AFP/GETTY

அமெரிக்க அதிபர் டிரம்பின் முன்னாள் பிரசார மேலாளர் பால் மான்ஃபோர்டிற்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனை நீக்கிய வாஷிங்டன் நீதிமன்றம், அவரைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் விசாரணையில், தனது ஜாமீன் காலத்தின்போது, முக்கிய சாட்சிகளை தொந்தரவு செய்ய முயற்சி செய்ததாக பால் மான்ஃபோர்ட் மீது விசாரணை அதிகாரி ராபர்ட் மல்லர் குற்றஞ்சாட்டிருந்தார்.

பண மோசடி செய்யச் சதித்திட்டம் தீட்டியது உள்பட, பால் மான்ஃபோர்டிற்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகள் பதியப்பட்டிருந்தன.

21 மில்லியன் டாலர் அபராதம் கட்ட ஒப்புக்கொண்டுள்ள ரொனால்டோ

படத்தின் காப்புரிமை Reuters

போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரமான ரொனால்டோ தன் மீது சுமத்தப்பட்ட வரி மோசடி வழக்கில், ஸ்பெயின் நாட்டு அதிகாரிகளிடம் ஒரு ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

அபராதமாக 21 மில்லியன் டாலர் பணத்தை கட்டுவதற்கும், இடைநிறுத்தப்பட்ட சிறை தண்டனையையும் ரொனால்டோ ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

தன் மீது சுமத்தப்பட்ட வரி மோசடி புகார்களை முன்னதாக ரொனால்டோ மறுத்திருந்தார்.

2030 கால்பந்து போட்டிகளை நடத்த தயாராகுங்கள்

படத்தின் காப்புரிமை Getty Images

2030-ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கான முயற்சியில் இறங்குமாறு மோராக்கோவின் மன்னர் கூறியுள்ளார்.

2026 உலக கோப்பை போட்டிகளை நடத்துவதற்கான முயற்சிகளில் மோராக்கோ ஈடுபட்டது. ஆனால், அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகியவை 2026 உலகக்கோப்பையை கூட்டாக நடத்த தேர்ந்தேடுக்கப்பட்டன.

தனது முயற்சியில் மொராக்கோ தோல்வியை சந்தித்த நிலையில், அந்நாட்டின் மன்னர் முகமதுவிடம் இருந்து இந்த அறிவுறுத்தல் வந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :