உலகப் பார்வை: வெனிசுவேலாவில் நெரிசலில் சிக்கி குறைந்தது 17 பேர் பலி

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

வெனிசுவேலாவில் நெரிசலில் சிக்கி குறைந்தது 17 பேர் பலி

படத்தின் காப்புரிமை EPA

வெனிசுவேலா தலைநகர் கராகசிலுள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 17 பேர் பலியானதை அந்நாட்டின் உள்துறை அமைச்சர் நெஸ்டர் ரெவரோல் உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்நாட்டிலுள்ள பள்ளிகளின் வருடாந்திர விடுமுறையை கொண்டாடும் விதமாக நடந்த கொண்டாட்டத்தின்போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலம்பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்ளும் ஸ்பெயின்

படத்தின் காப்புரிமை EPA

இத்தாலியினால் திரும்பி அனுப்பப்பட்டு, பின்பு லிபிய கடற்பகுதியில் அக்குவாரிஸ் கப்பலினால் மீட்கப்பட்ட 630 புலம்பெயர்ந்தோரில் சிலரை ஏற்றுக்கொள்வதற்கு பிரான்ஸ் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாக ஸ்பெயின் அறிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் பிரான்ஸ் அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்படவிருப்பதாக ஸ்பெயினின் துணை பிரதமரான கார்மென் தெரிவித்துள்ளார்.

உடன்படிக்கைக்கு பிறகு நிகரகுவாவில் தொடரும் வன்முறைகள்

படத்தின் காப்புரிமை AFP

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாக நாட்டில் நிலவி வரும் அமைதியின்மையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு நிகரகுவா அரசாங்கமும், எதிர்க்கட்சியும் சண்டை நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புக்கொண்டதை தொடர்ந்து வெடித்த வன்முறைகள் தொடர்ந்து வருகிறது.

வன்முறையின் உச்சகட்டமாக கலகக்காரர்கள் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த குறைந்தது ஆறு பேர் பலியாயினர்.

பதவியை தக்கவைத்தார் கிரேக்க பிரதமர்

படத்தின் காப்புரிமை EPA
Image caption அலெக்சிஸ் சிப்ராஸ்

கிரேக்கத்தின் அண்டை நாடான மாசிடோனியாவின் பெயரை 'வடக்கு மாசிடோனியக் குடியரசு' என்று மாற்றிக் கொள்வதற்கு கிரேக்கப் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராசும் ஜோரன் ஜாயேவும் ஒப்புக் கொண்டதற்கு கிரேக்கத்தில் எதிர்ப்புக் கிளம்பியது.

மாசிடோனியா என்ற பெயரில் கிரேக்க நாட்டில் ஒரு மாகாணம் இருப்பதால் மாசிடோனியா நாட்டின் பெயர் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் இருபதாண்டுகளுக்கும் மேலாக சர்ச்சை நிலவி வந்தது. கிரேக்கத்தின் மாசிடோனிய மாகாணத்தில் இருந்து பிரித்துக் காட்டும் வகையில் தற்போதைய பெயர் மாற்றம் ஒப்புக் கொள்ளப்பட்டது. எனினும் கிரேக்கத்தில் இதனால் திருப்தி ஏற்படவில்லை. இதையடுத்து எதிர்க் கட்சியான நியூ டெமாக்ரசி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை முன் மொழிந்தது.

இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், தீர்மானத்துக்கு ஆதரவாக 127 வாக்குகளும் எதிராக 153 வாக்குகளும் பதிவாயின. தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதால் பிரதமர் சிப்ராஸ் பதவி பிழைத்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :