உலகப் பார்வை: ஐநா மனித உரிமைகள் அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

ஐநா மனித உரிமைகள் அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல்

படத்தின் காப்புரிமை Getty Images

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பை "அரசியல் சார்புள்ள சாக்கடை" என்று குற்றம்சாட்டி அந்த அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது.

"பாசாங்குத்தனம் மற்றும் தன்னாட்சி அமைப்பு" போல செயல்படும் ஐநாவின் மனித உரிமைகள் அமைப்பு "மனித உரிமைகள் தொடர்பாக கேலிக்கூத்து செய்கிறது" என்று ஐநாவுக்கான அமெரிக்க தூதரான நிக்கி ஹாலே கூறியுள்ளார்.

குடியேறிகள் பிரச்சனை: டிரம்ப் பிடிவாதம்

படத்தின் காப்புரிமை Getty Images

குடியேறிகள் தொடர்பான பிரச்சனையில் அதிகரித்து வரும் கண்டனங்களை மீறி அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக நுழையும் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளை தனித்தனியாக பிரிக்கும் தனது அரசின் கொள்கையை ஆதரித்து டிரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார்.

வணிக மாநாடு ஒன்றில் பேசிய அவர், சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழையும் குடும்பங்களில் பெற்றோர் கைது செய்யப்பட்டால் குழந்தைகள் அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு தனியான இடத்தில் வைக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவுக்கு வரும் குடியேறிகள், அமெரிக்காவுக்கு அழுகல் போல பாதிப்பு உண்டாக்குவர் என முன்னர் டிரம்ப் தெரிவித்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

கனடா: சட்டப்பூர்வமானது கஞ்சா பயன்பாடு

படத்தின் காப்புரிமை AFP

நாடு முழுவதும் கஞ்சாவை போதைப் பொருளாக பயன்படுத்துவதற்கான சட்டம் கனடாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பல நிலைகளை கடந்து வந்திருந்த இந்த சட்டம் கடைசியாக செவ்வாய்க்கிழமையன்று அந்நாட்டின் செனட் சபையில் நடந்த ஓட்டெடுப்பில் 52-29 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றது. கஞ்சாவை வளர்ப்பது, விநியோகிப்பது மற்றும் விற்பனை செய்வது வரையிலான விடயங்கள் சார்ந்த கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குபடுத்துதல்களை இந்த சட்டம் அளிக்கிறது.

2018 உலகக்கோப்பை கால்பந்து: அடுத்த சுற்றுக்கு ரஷ்யா முன்னேற்றம்?

படத்தின் காப்புரிமை Getty Images

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் 2018 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் எகிப்து அணியை 3-1 என்று தோற்கடித்த ரஷ்யா அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

காயம் காரணமாக முதல் போட்டியில் அணியில் இடம்பெறாத எகிப்து அணியின் நட்சத்திர வீரர் முகமது சாலா இந்த போட்டியில் விளையாடிய போதும் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

தனது முதல் போட்டியில் செளதி அரேபியாவை 5-0 என்று ரஷ்யா வென்றது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :