சே குவேரா டீ-ஷர்ட் அணிந்தவர் அமெரிக்க ராணுவத்திலிருந்து நீக்கம்

அமெரிக்காவின் வெஸ்ட் பாய்ண்ட் ராணுவ பயிற்சி மையத்தில் கியூப புரட்சியாளர் சே குவேராவின் உருவப்படம் பொறித்த டீ-ஷர்ட் அணிந்திருந்த ராணுவ வீரர், அமெரிக்க ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை keystone

ஸ்பென்சர் ரபோன் எனும் அந்த 26 வயது ராணுவ வீரர் முறையற்ற செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, திங்களன்று இந்த நடவடிக்கைக்கு உள்ளானார்.

நியூ யார்க் மாகாணத்தில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் தனது பயிற்சியை முடித்ததும் கம்யூனிசத்துக்கு ஆதரவான புகைப்படங்களைப் பகிர்ந்திருந்ததால், ராணுவம் அவர் மீது விசாரணையைத் தொடங்கியது.

படத்தின் காப்புரிமை SPENSER RAPONE/TWITTER

அவர் மீண்டும் ராணுவத்தில் இணையவோ, முன்னாள் ராணுவத்தினருக்கான சலுகைகளைப் பெறவோ வாய்ப்பில்லாமல் போகலாம்.

தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் தான் செய்த செயலுக்கு வருத்தப்படாத ஸ்பென்சர் ரபோன், ஃபோர்ட் டிரம் ராணுவ குடியிருப்பின் முகப்பின் முன் நின்று, கையின் நடுவிரலை உயர்த்தும் ஆபாசமான சைகையை படமெடுத்து 'ஒன் ஃபைனல் சல்யூட்' (one final salute) என்று தலைப்பிட்டுப் பகிர்ந்துள்ளார்.

மே 2016இல் வெஸ்ட் பாய்ண்ட் மையத்தில் ராணுவ பயிற்சியை முடித்தபின், 'கம்யூனிசம் வெற்றிபெறும்' (communism will win) என்று தனது தொப்பியில் எழுதி அதன் படத்தை அவர் வெளியிட்டிருந்தது சர்ச்சையை உண்டாக்கியது.

இன்னொரு படத்தில் கியூபப் புரட்சியாளரான சே குவேராவின் படம் பொறித்த டீ-ஷர்ட்டை ஸ்பென்சர் அணிந்திருந்தார்.

படத்தின் காப்புரிமை TWITTER/ @PUNKPROLETARIAN

செவ்வாயன்று விசாரணை முடிந்துள்ளதாகக் கூறியுள்ள அமெரிக்க ராணுவம், அந்தரங்க உரிமை சட்டங்களின் கட்டுப்பாட்டால் மேலதிக தகவல்களை தெரிவிக்க முடியாது என்று கூறியுள்ளது.

ஸ்பென்சர் ரபோன் தம்மை ஒரு 'புரட்சிகர சோசியலிசவாதி' எனக் கருதுவதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அடுத்த மாதம் சிகாகோ நகரில் நடக்கவுள்ள 'சோசியலிசம் 2018' மாநாட்டில் அவர் உரையாற்றவுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :