அமெரிக்க குடியேறிகள் பிரச்சனை: 52 இந்தியர்களின் நிலை என்ன?

படத்தின் காப்புரிமை Getty Images

சட்டவிரோதக்குடியேறிகள் என்ற பெயரில் அமெரிக்காவில் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானவர்களில் 52 இந்தியர்களும் அடக்கம் என்பது தெரியவந்துள்ளது.

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய குடும்பங்களிலிருந்து குழந்தைகளை தனியே பிரித்து, அவர்களின் பெற்றோர்/ காப்பாளரை கைது செய்து வரும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு வலுப்பெற்று வரும் சூழ்நிலையில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இந்தியர்கள் ஓரிகான் மாகாணத்தின் ஷெரிடான் பகுதியிலுள்ள சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும், அங்கு வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களுடன் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் சர்ச்சைக்குரிய கொள்கைப்படி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். ஆனால், அவர்களின் குழந்தைகள் ஆதரவற்ற சிறார்களாக வகைப்படுத்தப்பட்டு, அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைத் துறையின் பராமரிப்பில் இருக்கும் வெகுஜன தடுப்பு மையங்கள் அல்லது பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

"பெற்றோரிடமிருந்து குழந்தைகளை பிரிப்பது கொடூரமானது, ஒழுக்கக்கேடானது. இதயத்தை பிளக்கும் செயல்" என்று அமெரிக்க முன்னாள் அதிபரின் மனைவி லாரா புஷ் வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாளில் கண்டனம் வெளியிட்டிருந்தார்.

கொள்கையை திரும்பப் பெற்ற டிரம்ப்

இந்நிலையில், குடியேறிகளை கைது செய்யும்போது குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரிக்காமல் இருதரப்பையும் ஓரிடத்தில் சேர்த்தே அடைத்து வைக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நிர்வாக உத்தரவொன்றை தொடர் அழுத்தத்தின் காரணமாக பிறப்பித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை ADMINISTRATION FOR CHILDREN AND FAMILIES AT HHS

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில், தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களே பெரும்பான்மையினராக உள்ளனர். இந்தியா, வங்கதேசம், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை தென் அமெரிக்கர்களைவிட குறைவாகவே உள்ளது.

கடந்த வருடம் மட்டும், 7,000 இந்தியர்கள் அமெரிக்காவில் அரசியல் அடைக்கலம் கோரி விண்ணப்பித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சபையின் அறிக்கையொன்று கூறுகிறது.

உள்ளூர் ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் மற்றும் உள்ளூர் குடிமக்கள் அரசின் நடவடிக்கையின் காரணமாக கோபத்துடன் உள்ளதாக ஓரிகான் மாகாண ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மே 5-ஆம் தேதி முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை பெற்றோரிடம் பிரிக்கப்பட்டு சுமார் 2,342 குழந்தைகள் தனி இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், அதில் எத்தனை பேர் இந்தியக் குழந்தைகள் என்பது இதுவரை தெரியவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

பதில் தெரிவிக்காத இந்திய அரசு

இதுகுறித்த தகவலை பெறுவதற்காக இந்திய அரசின் வெளியுறத்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டபோது, எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.

தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியர்களில் பெரும்பாலானோர் இந்தி மற்றும் பஞ்சாபி மொழியை பேசுபவர்கள் என்று உள்ளூர் அரசியல்வாதிகள் கூறியதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குடும்பங்களை தனித்தனியாக பிரிக்கும் இந்த கொள்கையை எதிர்க்கும் முன்னணி நபர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான பிரமிளா ஜெய்பால் அடங்குவார்.

படத்தின் காப்புரிமை Getty Images

தற்போது கைது செய்யப்பட்டுள்ள இந்தியர்களில் பெரும்பான்மையானோர் அரசியல் தஞ்சம் கோருபவர்கள் ஆவர். அருகேயுள்ள சிறையொன்றில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்களை சந்தித்த பிரமிளா, அவர்களில் பெரும்பான்மையானோர் பெண்கள் என்றும், தங்களது குடும்பத்தினரிடமிருந்து பிரிந்துள்ளதால் அவர்கள் கலக்கத்துடன் உள்ளதாகவும் கூறுகிறார்.

ஓரிகான் மாகாணத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நான்கு உறுப்பினர்களும் ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர்கள். அவர்களனைவரும் கடந்த சனிக்கிழமையன்று காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள இந்தியர்களை சந்தித்தபின் தாங்கள் மிகவும் சோகமாகவும், கோபத்துடனும் உள்ளதாக தெரிவித்தனர்.

அப்போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்கள், தாங்கள் ஒரே அறையில் மூன்று பேர் அடைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு நாளைக்கு 22 அல்லது 23 மணிநேரம் அடைத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், தங்கள் வழக்கறிஞருடன் பேசுவது சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளதாக கூறியதுடன், தங்களது மனைவிகள் மற்றும் குழந்தைகள் குறித்த கவலையையும் அவர்கள் தங்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வெளிப்படுத்தினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :