'கண்ணீர் சிந்தும் சிறுமி தாயிடம் இருந்து பிரிக்கப்படவில்லை'

ஆவணங்கள் இல்லாத குடியேறிகள், அமெரிக்கா-மெக்ஸிகோ எல்லையில் கைதுசெய்யப்படும்போது, பெற்றோர் மற்றும் குழந்தைகள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் தங்க வைக்கப்படுவது குறித்த டிரம்பின் கொள்கைக்கு சர்வதேச அளவில் பலத்த கண்டனங்கள் எழுப்பப்பட்டன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்த சிறுமியின் படம் டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளை விமர்சனத்துக்கு உள்ளாக்கியது

அமெரிக்கப் புலம்பெயர்ந்த குடியேறிகள் குடும்பங்கள் சந்தித்த பிரச்சனையை வெளிப்படுத்துவதாக இருந்த ஒரு சிறுமியின் புகைப்படம், அனைவருக்கும் நிலைமையின் தீவிரத்தை புரியவைத்தது. இந்த சிறுமியின் அமெரிக்க எல்லையில் தனது தாயிடமிருந்து பிரிக்கப்படவில்லை என சிறுமியின் தந்தை கூறுகிறார்.

ஒரு இளஞ்சிவப்பு ஜாக்கெட் அணிந்த தளிர் நடை பயிலும் ஹோண்டுரா நாட்டு குழந்தையின் புகைப்படத்தை தனது முகப்புப் பக்கத்தில் வெளியிட்ட டைம் பத்திரிகை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அந்த குழந்தையை பார்த்து: "அமெரிக்கா வரவேற்கிறது" என்று கூறுவதுபோல் சித்தரித்திருந்தது.

ஆனால் உண்மையில் அந்த குழந்தை, பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளில் ஒருவர் இல்லை.

இந்தப் புகைப்படம் டெக்சாஸின் மெக்கலனில் வசிக்கும் ஜான் மூரே என்ற புகைப்படக் கலைஞர் கெட்டி இமேஜஸ் என்ற செய்தி நிறுவனத்திற்காக எடுத்த புகைப்படம் அது.

புலிட்சர் பரிசு வென்ற ஜான் மூரே பிபிசிக்கு அளித்த பேட்டியில், அந்த தாய் தனது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பிறகு ரயோ கிராண்டேவை படகு ஒன்றில் கடந்து வந்தார் என்றும், அதன் பிறகு, அவர்கள் தடுத்து வைத்துப்பட்டதாகவும் தெரிவித்தார். அவர்கள் எல்லை ரோந்து படையினரால் கொண்டுச் செல்லப்பட்டதாக மூரே கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை facebook
Image caption டெனிஸ் வலேரா (இடது), சான்ரா சான்சேஸ் (வலது) மற்றும் சிறுமி யானெலா டினைஸ். இந்த தம்பதிக்கு ஹோந்துராஸில் மேலும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

ஏப்ரல் மாதம் அமெரிக்க அரசு அறிமுகப்படுத்திய குடியேறிகளின் குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து வைக்கும் கொள்கைக்கு எதிராக இந்த புகைப்படம் கடுமையான சீற்றத்தை ஏற்படுத்தியது.

டெக்சாஸை சேர்ந்த அகதிகள் மற்றும் கல்வி மற்றும் சட்ட சேவைகள் குடியேற்ற மையம் என்ற லாப நோக்கற்ற அமைப்பு, பேஸ்புக் மூலம் லட்சக்கணக்கான மக்களிடம் இருந்து 17 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான நிதி திரட்டுவதற்கு இந்த புகைப்படம் உதவியது.

"அமெரிக்க எல்லையில் குழந்தைகளை பிரிக்கும் அமெரிக்க அரசின் நடவடிக்கையின் சின்னமாக என் மகள் மாறிவிட்டார்" என்று டெனிஸ் வலேரா ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

"அதிபர் டிரம்ப்பின் இதயத்தையும் என் மகளின் புகைப்படம் தொட்டிருக்கலாம்."

"அந்த தருணத்தில் அவளுக்கு என்ன நடக்கிறது என்பதை உணர்பவர்களின் இதயத்தை உடைப்பதாக அந்த புகைப்படம் இருக்கிறது," என்று அவர் மேலும் கூறினார்.

அடைக்கலம் கோரி அமெரிக்கா சென்ற தனது மனைவியுடன் மகள் இருப்பதாக கூறும் வலேரா, இருவரும் எல்லை நகரான மெக்கலெனில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்.

ஹோண்டுரா நாட்டின் வெளியுறவு துணை அமைச்சர் நெல்லி ஜெரெஜ் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு வலேரா கூறிய செய்தியை உறுதிப்படுத்துகிறார்.

சான்செஸ் மற்றும் அவரது மகளை தடுத்து நிறுத்திய எல்லை ரோந்துப் பணியாளர் கார்லோஸ் ரூயிஸ், பரிசோதனை செய்வதற்காக குழந்தையை கீழே இறக்கிவிடுமாறு தாயிடம் கூறினார்.

"கீழே இறக்கிவிடப்பட்டதுமே குழந்தை அழுகத் தொடங்கினாள்" என்று கூறிய ரூயிஸ், "பிரச்சனை ஒன்றும் இல்லையே, எல்லாம் சரியாக இருக்கிறதா? குழந்தை சரியாக இருக்கிறாளா?" என்று நான் தனிப்பட்ட முறையில் அந்த பெண்ணிடம் கேட்டேன் என்று கூறினார்.

அதற்கு பதிலளித்த தாய், "ஆமாம், அவள் களைப்பாகவும் தாகமாகவும் இருக்கிறாள், இப்போது இரவு 11 மணி" என்று சொன்னார்.

அந்த சிறிய குழந்தை இரண்டு வயது யானெலா டெனிஸ் என்று டெய்லி மெயில் பத்திரிகை தெரிவித்தது.

தன்னிடமோ தங்களின் மற்ற மூன்று குழந்தைகளிடமோ எதுவுமே தெரிவிக்காமல், தனது மனைவி சான்செஸ், மகளை அழைத்துக் கொண்டு, ஹோண்டுரா நகரை விட்டு வெளியேறிவிட்டதாக வலேரா கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் தனது தாய் சான்ரா உடன் சிறுமி யானெலா

அமெரிக்காவில் வருவாய் ஈட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்ற எண்ணத்தில் மனைவி அமெரிக்காவுக்கு சென்றிருக்கலாம் என்று நம்புவதாக வலேரா கூறுகிறார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய வலேரா, "தாயிடம் இருந்து குழந்தையை பிரிக்காமல் அவர்கள் நாடு கடத்தப்பட்டாலும் பரவாயில்லை. அவர்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்துக் கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று சொல்கிறார்.

டெய்லி மெயில் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், எல்லையை கடக்க உதவிய கடத்தல்காரனுக்கு சான்செஸ் $ 6,000 தொகையை கொடுத்திருக்கலாம் என்று கருதுவதாக தெரிவித்திருக்கிறார்.

அந்த பத்திரிகை வெளியிட்ட செய்தியின்படி, வலேராவுக்கு 14, 11 மற்றும் 6 வயதில் மேலும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

"நடப்பதை குழந்தைகளும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு என்ன நடக்கும் என்று குழந்தைகள் கவலைப்படுகின்றனர். ஆனால் நான் அதை அதிகரிக்க முயற்சி செய்யவில்லை. தாயும், சகோதரியும் இப்போது பாதுகாப்பாக இருப்பது அவர்களுக்கு தெரியும்."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :