உலகப் பார்வை: எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க உள்ள ஒபெக் நாடுகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க உள்ள ஒபெக்

படத்தின் காப்புரிமை Getty Images

எண்ணெய்களுக்கான கூடுதல் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக, தங்கள் உற்பத்தியை அதிகரிக்க ஒபெக் நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக, எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி,எண்ணெய் விலையை ஒபெக் கூட்டமைப்பு உயர்த்தியிருந்தது. இந்நிலையில், தற்போது நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.

தென் கொரியாவுடனான ராணுவ பயிற்சிகளை ரத்து செய்தது அமெரிக்கா

படத்தின் காப்புரிமை Getty Images

தென் கொரியா உடனான கூட்டுக் கடற்படை பயிற்சியை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் இரு நாடுகள் இடையே நடக்கவிருந்த முக்கிய கூட்டு ராணுவ பயிற்சியை கடந்த வாரம் பென்டகன் ரத்து செய்த நிலையில், தற்போது கடற்படை பயிற்சியையும் ரத்து செய்துள்ளது. சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய தலைவர் கிம் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களை அமல்படுத்தும் நோக்கில் இம்முடிவை எடுத்துள்ளதாக பென்டகன் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

வெனிசுவேலாவில் சட்டத்திற்கு புறம்பான கொலைகள்

படத்தின் காப்புரிமை Getty Images

குற்றங்களுக்கு எதிரான சண்டை என்ற போர்வையில், வெனிசுவேலா பாதுகாப்புப் படைகள் நூற்றுக்கணக்கான சட்டத்திற்கு புறம்பான கொலைகளில் ஈடுபட்டதாக ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது.

வெனிசுவேலாவில் சட்டத்தின் ஆட்சி ''கிட்டத்தட்ட இல்லை'' என குற்றஞ்சாட்டியுள்ள ஐ.நா, இந்தக் குற்றங்களுக்காக யார் மீது வழக்கு பதியப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது.

அகதிகளைத் தங்க வைக்க தடுப்பு மையங்கள்

படத்தின் காப்புரிமை Getty Images

மெக்சிகோவில் இருந்து அமெரிக்கா வரும் ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேறிகளைத் தங்க வைப்பதற்காக, ராணுவ தளங்களில் தடுப்பு மையங்களை அமைக்க அமெரிக்க கடற்படை திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. கலிஃபோர்னியா, அலபாமா மற்றும் அரிசோனா மாகாணங்களில் உள்ள கைவிடப்பட்ட விமான தளங்களில் தங்கியுள்ள 25 ஆயிரம் அகதிகளுக்கான தற்காலிக தடுப்பு மையங்கள் என இதனை குறிப்பிட்டுள்ளனர். அகதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம் மீது கடுமையான விமர்சனங்கள் வந்துள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :