சௌதி அரேபியா: முடிவுக்கு வந்தது பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடை

  • 24 ஜூன் 2018
படத்தின் காப்புரிமை AFP

சௌதி அரேபியாவில் பெண்கள் வாகனத்தை இயக்குவதற்கு பல தசாப்த காலங்களாக நீடித்து வந்த தடை தற்போது அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது.

இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்ற மாதம் முதல் முறையாக ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டன.

உலகிலேயே பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்ட ஒரே நாடாக விளங்கிய சௌதி அரேபியாவில், பெண்கள் வெளியே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டால் தனியார் ஓட்டுனர்களை நியமிப்பதே ஒரே வழியாக இருந்தது.

கடும் சட்டவிதிகளுக்கு மத்தியிலும் பெண்கள் வாகனம் இயக்கும் உரிமைக்காக தொடர்ந்து பிரசாரம் செய்த செயற்பாட்டாளர்களின் முயற்சிக்கு பிறகே இந்த நடவடிக்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

பெண்கள் வாகனம் இயக்குவதற்கு அனுமதி அளிக்கக்கோரி போராடியதற்காக குறைந்தபட்சம் எட்டு பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தீவிரவாதத்துக்குகெதிரான நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பல ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் மனித உரிமைகள் குழுவான ஆம்னெஸ்டி தெரிவித்துள்ளது.

பெண்கள், வங்கி கணக்கு திறப்பது, தங்கள் பெயரில் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வாங்குவது போன்றவற்றுக்கு ஆண் பாதுகாவலரின் அனுமதி பெற வேண்டும் என்ற சட்டத்தில் பரந்துபட்ட சீர்திருத்தங்களை அந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்வதற்கும் அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

சௌதி அரேபியாவின் ரியாத் நகரில் காரை ஓட்டியதற்காக பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கடந்த 1990ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

விரைவில் ஆயிரக்கணக்கான சௌதி அரேபிய பெண்கள் விரைவில் சாலையில் கார்களை இயக்கக்கூடும்.

"ஒவ்வொரு சௌதி அரேபிய பெண்ணுக்கும் இது வரலாற்று சிறப்புமிக்க தருணம்" என்று ஏஎஃப்பி செய்தி முகமையிடம் பேசிய சௌதி அரேபியாவை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான சபிக்கா அல்-டோசாரி கூறினார்.

உள்ளூர் நேரப்படி இரவு ஒன்பது மணியளவில் தடை நீக்கப்பட்ட சில நிமிடங்களில் தான் வாகனத்தை இயக்கியதாக அவர் தெரிவித்தார்.

"ஓட்டுநர்களுக்காக மணிநேர கணக்கில் காத்திருந்த காலம் முடிந்துவிட்டது" என்றும் "எங்களுக்கு இனி ஆண் ஒருவர் தேவையில்லை" என்றும் கூறுகிறார் 21 வயது மாணவியான ஹடௌன் பின் டக்கில்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :