இரான் டிவி-யில் கால்பந்து வர்ணனை: நீண்ட தலைமுடி வைத்த வீரருக்கு அனுமதி மறுப்பு

  • 24 ஜூன் 2018

ஒழுங்காக முடி வளர்க்க முடியாமல் வருத்தங்கள் ஏற்படலாம். ஆனால், கவனத்தோடு வளர்க்கப்பட்ட அழகிய முடி ஒருவருக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதை நாம் பொதுவாக எதிர்பார்க்க மாட்டோம்.

படத்தின் காப்புரிமை David Ramos

இரானிய தொலைக்காட்சி ஒன்றில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக வர்ணனை செய்வதற்கு ஒப்புக்கொண்ட பார்சிலோனா கால்பந்து அணியின் பிரபல வீரரான சார்லஸ் புயோல், தனது அடையாளமாக விளங்கும் நீண்ட தலைமுடி தனக்கு பிரச்சினையை உண்டாக்கும் என்று நினைத்திருக்க மாட்டார்.

கடந்த புதன்கிழமை இரான் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடந்த உலகக்கோப்பை போட்டியை இரானிலுள்ள தொலைக்காட்சி ஒன்றில் அதன் தொகுப்பாளர் ஆடல் பெர்டோசிபூருடன் இணைந்து புயோல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், திட்டமிட்டபடி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இரானுக்கு சென்றார் சார்லஸ். ஆனால், அங்குள்ள ஐஆர்டிவி 3 டெஹ்ரான் தொலைக்காட்சி தமது ஒளிபரப்பு அரங்கத்துக்குள் நுழைவதற்கு அவரை அனுமதிக்க மறுத்துவிட்டது.

தொலைக்காட்சி நிறுவனத்தின் செயல்பட்டால் கோபத்துக்குள்ளான மற்றொரு தொகுப்பாளரான பெர்டோசிபூர், தனது சக வர்ணனையாளர் இல்லாமலே நிகழ்ச்சியை தொடங்கியவுடன், "இன்றிரவு சார்லஸ் புயோல் நம்மோடு இணைந்து போட்டியை வர்ணனை செய்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் தற்போது ஹோட்டலில் தங்கியுள்ளார். என்னால் இயன்ற அனைத்தையும் செய்து பார்த்தேன். ஆனால், எதுவும் நடைபெறவில்லை. என்னை மன்னிக்கவும்" என்று அவர் கூறியதாக ஐஎஸ்என்ஏ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

தொடக்கத்தில் சார்லஸ் புயோல் நிகழ்ச்சியில் பங்கேற்காததற்கு அதிக தொகை கேட்டது காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் வியாழக்கிழமை வேறு மாதிரி காரணம் வெளியானது.

படத்தின் காப்புரிமை EPA

"சார்லஸின் தோற்றமே (நீண்ட தலைமுடி) அவர் அனுமதிக்கப்படாததுக்கு காரணம்" என்று இரானிய அரசு தொலைக்காட்சியான ஐஆர்ஐபி தெரிவித்ததாக சார்லஸ் கூறியதாக என்டேக்ஹாப் என்ற செய்தித்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தலைமுடியை பாணி இப்படித்தான் இருக்கவேண்டும் என்று இரானில் அதிகாரப்பூர்வமாக கொள்கை ஏதுமில்லை. ஆனால், மதகுருமார்களும், பழமைவாத நிறுவனமும் "பாரம்பரியமற்றது", "இஸ்லாமியத் தன்மை இல்லாதது" என்று கருதும் எல்லாவற்றுக்கும் இந்த அரசுத் தொலைக் காட்சி எதிராகவே இருக்கும்.

இரானிய கால்பந்து கழகத்தின் நடத்தை விதிகளின் தொகுப்பான "சார்ட்டர் ஆஃப் எத்திக்ஸ்" படி "வெளிநாட்டு கலாச்சாரத்தை பரப்பும் வகையிலான" சிகை அலங்காரத்தை விளையாட்டு வீரர்கள் கொண்டிருக்கக்கூடாது. மேலும், இதை மீறும் வகையிலான சிகை அலங்காரத்தை கொண்டிருந்த இரானிய கால்பந்து வீரர்களை அந்த அமைப்பு பல முறை எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வினோதமான செய்தி சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியதுடன், சம்பந்தப்பட்ட இரானிய தொலைக்காட்சியும் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது.

"உலகளவில் நம்மை மதிப்பிழக்க வைத்துவிட்டீர்கள் ஐஆர்டிவி 3" என்று சீர்திருத்த பத்திரிகையாளரான சபா அசர்பெய்க் கருத்துத் தெரிவித்துள்ளார்.

"அதிகளவிலான பணத்தை செலவழித்து, அழைத்து வந்து, அவரை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க செய்யவிடாமல் செய்வதற்கு முன்னரே புயோலை நீங்கள் பார்த்தது கிடையாதா?" என்று ட்விட்டர் பயனர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

"புயோல் அவர்களே, இரான் ஓர் இஸ்லாமிய நாடு! கரடுமுரடான உங்கள் தலைமுடி இஸ்லாத்தை ஆபத்துக்குள்ளாக்குவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்" என்று மற்றொரு ட்விட்டர் பயனர் கேலியுடன் கருத்து பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பயனரோ, நீண்ட தலைமுடியுடன் கூடிய பெண்ணொருவரின் புகைப்படத்தை தன்னுடைய பதிவில் இணைத்துவிட்டு, "இரானிய அரசு தொலைக்காட்சி இப்படித்தான் புயோலை பார்க்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

இரானிய தொலைக்காட்சியில் நீண்ட தலைமுடி விவாதத்தை கிளப்புவது இது முதல்முறையல்ல. இரண்டாண்டுகளுக்கு முன்னர், இரானின் தேசிய கடற்கரை கைப்பந்து அணியின் கோல் கீப்பரான பெமன் ஹோசெனி, நீண்ட தலைமுடியை கொண்டிருந்ததன் காரணமாக தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அனுமதிக்கப்படவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரை தொப்பி அணியுமாறு கூறியதை அவர் ஏற்கவில்லை.

ஐஆர்டிவி 3 தொலைக்காட்சியின் முதுபெரும் இயக்குனரான அலி அஸ்கார் போர்மோஹமடி, அந்த பதவிலிருந்து நீக்கப்பட்டு இரானின் தீவிர மத கடும்போக்காளர்களுக்கு நெருக்கமான ஒருவர் அதன் இயக்குனராக நியமிக்கப்பட்டு சில வாரங்களே ஆன நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

மேலதிகத் தகவல்: அவரது தலைமுடி காரணமாக புயோல் வர்ணனை செய்ய அனுமதிக்கப்படவில்லை என்பது பிபிசி பரப்பிய "புரளி" என்று இரான் அரசுத் தொலைக் காட்சியான ஐ.ஆர்.ஐ.பி.யின் துணைத் தலைவர் மொடெசா மிர்பக்கேரி சனிக்கிழமை தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :