பிரான்ஸ் பெண்ணை அமெரிக்க சிறையில் தள்ளிய ஜாகிங்: ஆர்வக் கோளாறில் எல்லை தாண்டினார்

பிரான்ஸ் நாட்டு இளம்பெண் ஒருவர் கனடா எல்லையில் ஜாகிங் செய்துக் கொண்டிருந்தபோது தவறுதலாக எல்லைத் தாண்டி அமெரிக்காவிற்குள் சென்றுவிட்டார். எல்லைத் தாண்டி நுழையும் வெளிநாட்டவர்களை தடுத்து வைக்கப்படும் மையம் ஒன்றில் இரு வாரங்களாக சிறை வைக்கப்பட்டிருக்கிறார் அந்தப் பெண்.

எல்லையில் எந்தவிதமான அறிவிப்புப் பலகையும் தென்படவில்லை என்கிறார் செடெலா ரோமன்

பட மூலாதாரம், AFP/FAMILY HANDOUT

படக்குறிப்பு,

எல்லையில் எந்தவிதமான அறிவிப்புப் பலகையும் தென்படவில்லை என்கிறார் செடெலா ரோமன்

19 வயது செடெலா ரோமன் தனது தாயை சந்திப்பதற்காக பிரிட்டிஷ் கொலம்பியா சென்றிருந்தார். மே மாதம் 21ஆம் தேதி மாலை நேரத்தில் கடற்கரையில் ஜாகிங் செய்துக் கொண்டிருந்தார் ரோமன். அந்த கடற்கரை கனடா மற்றும் அமெரிக்காவை பிரிக்கும் எல்லைப் பகுதியில் உள்ளது.

ஜாகிங் சென்ற பாதையில் சிறிது தூரம் வரை குப்பைகள் நிறைந்திருந்ததாக கனடா ஊடகங்களிடம் கூறினார் செடெலா ரோமன். திரும்பி வரும் போது கடல் அலைகளை புகைப்படம் எடுத்துக் கொண்டே வந்ததாகவும் அவர் கூறினார்.

அப்போது கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு அமெரிக்க எல்லை பாதுகாப்பு படை போலீசார் அங்கு வந்தார்கள். ரோமனிடம் விசாரணை நடத்தினார்கள். பிறகு, வாஷிங்டனின் ப்ளென் பகுதியில் அனுமதியின்றி நுழைந்த குற்றச்சாட்டில் அவரை கைது செய்தார்கள்.

ரேடியோ-கனடாவிடம் பேசிய செடெலா, ''சட்டத்துக்கு புறம்பாக எல்லை கடந்து வந்திருப்பதாக அவர்கள் கூறினார்கள். நான் அறியாமல் செய்த தவறு என்று அவர்களிடம் எடுத்துக் கூறினேன்'' என்று தெரிவித்தார்.

பிரச்சனையின் வீரியம்

எச்சரிக்கை விடுத்த பின்னர் தன்னை விட்டுவிடுவார்கள் என்று செடெலா ரோமன் முதலில் நினைத்திருக்கிறார். அதைத்தவிர வேறென்ன பெரிதாக நடந்துவிடும்? மீறிப்போனால் அபராதம் போடுவார்கள் என்று கருதினார் ரோமன்.

"சிறையில் அடைக்கப்படுவேன் என்று நினைக்கவேயில்லை" என்று கூறுகிறார் அவர்.

அங்கிருந்து செடெலாவை அழைத்துச் சென்ற அமெரிக்க போலீஸ் அதிகாரிகள், தெற்குப்பகுதியில் 220 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டகோமாவின் நார்த்வெஸ்ட் சிறையில் அடைத்தார்கள். வெளிநாட்டவர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த தடுப்புக்காவல் சிறை, வாஷிங்டன் மாகாணத்தில் அமைந்திருக்கிறது.

அப்போதுதான் நிலைமையின் தீவிரம் ரோமனுக்கு புரிந்தது. தனது அடையாளத்தை நிரூபிப்பதற்கான அடையாள அட்டை எதுவும் அவரிடம் இல்லை, அவர் அணிந்திருந்த ஆடையைத் தவிர வேறு எதுவுமே அவரிடம் இல்லை.

கனடாவின் சி.பி.சி செய்தி ஊடகத்திடம் பேசிய சேடெலா, "நான் அணிந்திருந்த அணிகலன்கள் உட்பட அனைத்தையும் கழற்றிவிடுமாறு சொன்னார்கள். தீவிரமாக என்னிடம் சோதனை நடத்தினார்கள். அதுவரை இயல்பாக பேசிக் கொண்டிருந்த எனக்கு விஷயம் விபரீதமாவது புரிந்த பிறகு, அழத் தொடங்கிவிட்டேன்."

பிறகு ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றார்கள், அங்கு சுமார் 100 பேர் இருந்தார்கள்.

பிரான்ஸ் செய்தி முகமை ஏ.எஃப்.பியிடம் பேசிய செடெலா, "என்னை எப்போதும் அறையிலேயே அடைத்து வைத்திருப்பார்கள். அங்கு முற்றத்தில் முள் கம்பிகள் இருக்கும், அங்கு நாய்களும் இருந்தன."

"அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்கள், ஒருவருக்கொருவர் உதவி செய்துக் கொள்வோம். ஆஃப்ரிக்கா மற்றும் பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அங்கிருந்த அனைவரும் எல்லையை கடக்க முயற்சிக்கும்போது கைது செய்யப்பட்டவர்கள்தான். அவர்களை சந்தித்து பேசியது எனக்கு வாழ்க்கையில் ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது."

விடுதலையான கதை

அம்மா கிறிஸ்டியன் ஃபர்னெவை தொடர்பு கொள்ள செடெலாவுக்கு அனுமதி கிடைத்தது. அம்மாவிடம் பேசி நிலைமையை விளக்கிய பின், அவரது தாயார் செடெலாவின் பாஸ்போர்ட் மற்றும் பணி அனுமதி போன்ற சட்டப்பூர்வ ஆவணங்களை எடுத்துக் கொண்டு வாஷிங்டனின் தடுப்புகாவல் சிறைக்கு வந்தார்.

செடேலா ரோமன் தவறுதலாக எல்லைக்குள் நுழைந்துவிட்டது தெரிந்தாலும், அவரது சட்டப்பூர்வ ஆவணங்கள் கிடைத்த பிறகும் அமெரிக்க அதிகாரிகள் அவரை விடுதலை செய்வதில் முட்டுக்கட்டைகள் இருந்தன.

கடைசியாக 15 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு செடெலா கனடாவுக்கு திரும்பினார்.

உத்தியோகபூர்வ ஆவணங்கள் கிடைத்த பிறகு அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க அதிகாரிகள் ஜூன் ஆறாம் தேதியன்று அவரை கனடாவுக்கு திரும்ப அனுப்பினர்.

இரு நாடுகளின் எல்லையில் உள்ள குடிவரவு அதிகாரிகள், இந்த விஷயம் தொடர்பாக பேச மறுத்துவிட்டார்கள்.

அமெரிக்காவிலுள்ள சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு விவகாரங்களுக்கான செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ''எந்தவொரு நபரும் சட்டப்பூர்வ வழிகளை தவிர, வேறு வழியில் நாட்டிற்குள் நுழைந்தால், அது சட்டமீறல் என்று கருதப்படுகிறது, அது எந்த வகையை சேர்ந்ததாக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது. அறியாமல் தவறுதலாக எல்லை கடந்து செல்பவர்களுக்கும் பொருந்தக்கூடியது சட்டம்" என்று அவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :