உலகப் பார்வை: அமெரிக்காவை விட்டு செல்லும் ஹார்லி டேவிட்சன்; கோபமடைந்த டிரம்ப்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

அமெரிக்காவை விட்டு செல்லும் ஹார்லி டேவிட்சன்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் மோட்டார் பைக் நிறுவனம், தனது சில உற்பத்தி தொழிற்சாலைகளை அமெரிக்காவில் இருந்து வேறு நாடுகளுக்கு மாற்றும் முடிவினை அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை ஐரோப்பிய ஆணையம் உயர்த்தியதன் காரணமாக, ஐரோப்பிய சந்தைக்கான உற்பத்தி தொழிற்சாலை படிப்படியாக வேறு நாட்டுக்கு மாற்றப்படும் என ஹார்லி டேவிட்சன் நிறுவனம் கூறியுள்ளது. ஹார்லி டேவிட்சன் நிறுவனம் முதலில் பணிந்து விட்டதாகவும், அந்நிறுவனத்திற்காக தாம் கடுமையாக போராடியதாகவும் டிரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

2012க்கு பிறகு இரானில் நடந்த மிகப்பெரிய போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

இரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கிராண்ட் பஜார் வர்த்தகர்கள், இரான் நாணயத்தின் மதிப்பு குறைந்ததை கண்டித்தும், விலை உயர்வைக் கண்டித்தும் மிகப்பெரியளவில் போராட்டம் நடத்தினர்.

இதனால், கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளுக்கு வந்து போராடினர்.

2012-ல் இரானில் நடந்த போராட்டத்திற்கு பிறகு, இதுவே மிகப்பெரிய போராட்டமாக பார்க்கப்படுகிறது. இரானின், அணுசக்தி நடவடிக்கைகளால் சர்வதேச நாடுகள் 2012 இரான் மீது தடைகளை விதித்தது. இதனால் நாட்டின் பொருளாதாரம் முடங்கியதால் அப்போது மக்கள் வீதிகளுக்கு வந்தனர்.

வெனிசுவேலாவின் துணை அதிபருக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

டெலிசி ரோட்ரிக்ஸ்

வெனிசுவேலாவில் கடந்த மே மாதம் நடந்த அதிபர் தேர்தல், ''சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடக்கவில்லை'' என கூறியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், வெனிசுவேலாவின் துணை அதிபர் மற்றும் அதிகாரிகள் மீது தடை விதித்துள்ளது.

வெனிசுவேலாவின் துணை அதிபர் டெலிசி ரோட்ரிக்ஸ் மற்றும் அந்நாட்டின் 11 அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இங்குள்ள அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும்.

வெனிசுவேலாவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, மீண்டும் அந்நாட்டின் அதிபராக தேர்ந்தேடுக்கப்பட்டார். இத்தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

வேலைநிறுத்தத்தால் முடங்கிய அர்ஜெண்டினா

பட மூலாதாரம், EPA

அர்ஜெண்டினாவில் நடந்து வரும் பொது வேலைநிறுத்தத்தால், அந்நாடே முடங்கியுள்ளது. தலைநகரான ப்யூனோஸ் ஏர்ரிஸில் ரயில், பேருந்து போன்ற பொது போக்குவரத்து சேவைகள் இயங்கவில்லை. இதனால், மில்லியன் கணக்கான மக்கள், வேலைக்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து, 50 பில்லியன் டாலர் கடனாக பெற அதிபர் மோரிசியோ மெக்ரி ஒப்புக்கொண்டதற்கு எதிர்ப்பு தெரித்து தொழிற்சங்கங்கள் இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. இக்கடன், அர்ஜெண்டினாவின் ஏழை மக்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் என தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :