அமெரிக்க எல்லையில் குடியேறிகளின் மீது வழக்கு பதியப்படுவது நிறுத்தம்

அமெரிக்க

பட மூலாதாரம், Getty Images

குழந்தைகளுடன் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழையும் குடியேறிகள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அந்நாட்டின் எல்லை பாதுகாப்பு தலைவர் தெரிவித்துள்ளார்.

குடியேறிகளின் குடும்பங்களை பிரிப்பதை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அதிபர் டிரம்ப் அளித்த உத்தரவினையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு ஆணையர் கெவின் மெக் அலீனன் கூறினார். சர்வதேச நாடுகளின் கண்டனம் மற்றும் அழுத்தம் காரணமாக இது தொடர்பான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.

ஆனால், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக காவலில் எடுக்கப்பட வேண்டும் என்று டிரம்ப் பரிந்துரைத்திருந்தார்.

பட மூலாதாரம், Getty Images

குழந்தைகளை, பெற்றோரிடம் இருந்தும் பிரிக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பதால், பெற்றோர் மீது மட்டும் வழக்கு தொடர முடியாது. வயதானவர்களுக்கான தடுப்பு காவல் மையங்களில் குழந்தைகளை வைப்பது என்பது சட்டத்திற்கு எதிரானது என்று கெவின் மெக் அலீனன் குறிப்பிட்டார்.

குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரிக்காமல், பெற்றோர் மீது எப்படி வழக்கு தொடர வேண்டும் என்பது பற்றி நீதித்துறை ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று அவர் கூறியதாக அசோஸியேடட் ப்ரஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் அதிபர் ஒபாமாவின் நிர்வாகத்தின் கீழ் இருந்த அணுகுமுறையை மாற்றியமைக்க இது வழிவகுக்கிறது.

குழந்தைகளுடன் வரும் குடியேறிகளை தடுப்பு காவலில் எடுக்காமல், அவர்களிடம் நீதிமன்ற சம்மன் வழங்கப்பட்டு உள்ளே அனுப்பப்படுவர்.

அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லையில் இருந்து ஆவணங்கள் இல்லாமல் வரும் குடும்பங்களை தங்க வைக்க அமெரிக்காவில் இடம் இல்லை என்பதே உண்மை என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகையாளர் செயலாளர் சாரா சேண்டர்ஸ் தெரிவித்தார்.

"நாங்கள் கொள்கையை மாற்றவில்லை. போதிய வளங்கள் எங்களிடம் இல்லை" என்று அவர் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :