பேநசீர் புட்டோ கொலை: தேடப்படும் முக்கிய நபர் வெளியே வந்தார்

  • செகுந்தர் கர்மானி மற்றும் சலீம் மெஹ்சுத்
  • பிபிசி, இஸ்லாமாபாத்
பெனசிர்
படக்குறிப்பு,

இக்ரமுல்லா

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவை படுகொலை செய்த குழுவைச் சேர்ந்தவராக கூறப்பட்ட ஒருவர், தாலிபான் காணொளியின் தோன்றி புட்டோ கொலையில் தனது பங்கு எதுவும் இல்லை என கூறியுள்ளார்.

பேநசீர் மீது தாக்குதல் நடத்தும் முதல் குண்டுதாரியின் முயற்சி தோல்வியும்பட்சத்தில் தாம் தற்கொலை குண்டாக மாறி திட்டத்தை நிறைவேற்றுவதற்கான மாற்று ஏற்பாடாகச் சென்றவர் இக்ரமுல்லா.

முதல் குண்டுதாரி திட்டமிட்டபடி தனது தற்கொலை குண்டை வெடிக்க வைத்து, புட்டோ மற்றும் மற்ற 20 பேரைக் கொன்றதால், இக்ரமுல்லா அங்கிருந்து சென்றுவிட்டார் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

புட்டோவின் கொலையில் தான் ஈடுபடவில்லை என்றும், புட்டோவை கொல்லும் திட்டம் பற்றி தனக்குத் தெரியாது என்றும் இக்ரமுல்லா திரும்ப திரும்ப கூறுகிறார்.

பாகிஸ்தானில் தேடப்படும் பயங்கரவாத சந்தேக நபர்களின் பட்டியலில் இவர் பெயர் உள்ளது. புட்டோ கொலை வழக்கில், இரண்டாவது தற்கொலை குண்டுதாரியாக நீதிமன்றத்தில் இவர் பெயர் உள்ளது.

பட மூலாதாரம், JOHN MOORE

படக்குறிப்பு,

பேனசீர் பூட்டோ

இக்ரூமுல்லா பொய் சொல்வதாகவும், மற்ற சந்தேக நபர்கள் இரண்டாவது தற்கொலை குண்டுதாரியாக இவரை நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர் என்கிறார் முன்னாள் உள்துறை அமைச்சரும், பேநசீரின் நெருங்கிய நண்பருமான ரெஹ்மான் மாலிக்.

பேநசீர் கொலையில் தனது பங்கினை வெளிப்படையாகவும், பெருமையாகவும் சமீப காலம் வரை இக்ரமுல்லா கூறிவந்தார் என்கிறார் பாகிஸ்தானின் தீவிரவாத குழுக்களை பற்றி நன்கு அறிந்த ஒருவர். ஆனால், கடந்த வருடம் போட்டி இஸ்லாமியவாத குழுக்களால் அவர் தாக்கப்பட்டார். பாகிஸ்தான் பாதுகாப்பு படையிடம் இருந்து இவரது குடும்பத்திற்கு அச்சுறுத்தல் வந்தது.

புட்டோ கொலையில் தனது பங்கினை மறுத்து, காணொளி வெளியிடுமாறு இவரது குழுவை சேர்ந்த தலைவர்கள் ஆலோசனை வழங்கியதாக நம்பப்படுகிறது. ''பாகிஸ்தான் தாலிபான் இயக்கத்தைச் சேர்ந்த அனைவருக்கும், பழங்குடியினர் பகுதியில் வசிக்கும் சிறுவர்களுக்கும் கூட புட்டோ கொலையில் இவரது பங்கு பற்றி தெரியும்'' என பிபிசிக்கு கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

1988 மற்றும் 1993-ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமராக பேநசீர் புட்டோ தேர்ந்தெடுக்கப்பட்டார். சில காலம் வெளிநாட்டில் தங்கியிருந்த பிறகு, 2007 தேர்தல் பிரசாரத்திற்காக பாகிஸ்தான் வந்தார்.

அக்டோபர் 2007-ல் நடந்த படுகொலை முயற்சியில் புட்டோ தப்பித்தார். ஆனால், இத்தாக்குதலில் 150 பேர் இறந்தனர்.

இரண்டு மாதம் கழித்து ராவல்பிண்டி பேரணியில் புட்டோ கொல்லப்பட்டார். இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட ஐந்து பேர் கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டனர்.

அப்போது பாகிஸ்தான் தாலிபான் அமைப்பின் தலைவராக இருந்த பைத்துல்லாஹ் மெஹ்சுட், இக்கொலைக்குத் தாலிபானே காரணம் என கூறப்பட்டதை மறுத்தார்.

இக்ரமுல்லா உட்பட புட்டோ கொலையில் ஈடுபட்ட அனைவரும் எங்களது ஆள்கள்தான் என தாலிபான் தலைவர் பைத்துல்லாஹ் ஒரு மதகுருவிடம் போனில் பேசியதை இடைமறித்து கேட்டதாக பாகிஸ்தான் உளவு அமைப்பு கூறுகிறது. அப்போது இக்ரமுல்லாவுக்கு 16 வயது.

இந்த வருடத் தொடக்கத்தில் பாகிஸ்தான் தாலிபான் அமைப்பால் வெளியிடப்பட்ட புத்தகத்தில், புட்டோ கொலையில் ஈடுபட்டது தாங்கள்தான் எனவும், இக்ரமுல்லா இரண்டாவது தாக்குதல் நபர் எனவும் கூறியிருந்தது. ஆனால், இக்கொலையில் தங்களுக்கு தொடர்பு இல்லை என முன்பு கூறியிருந்தது.

இந்நிலையில், இக்ரமுல்லா வெளியிட்டுள்ள காணொளியில் இப்புத்தகம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

பட மூலாதாரம், AFP/GETTY

பேநசீர் புட்டோ வழக்கில், முக்கிய தகவல்களை அறிந்த உயிர் வாழும் ஒரே நபர் இக்ரமுல்லாதான் என பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் கூறுகிறார். இதில் தொடர்புடைய பெரும்பாலோர் கொல்லப்பட்ட நிலையில், பயத்தின் காரணமாகவே இக்ரமுல்லா மறுப்பு தெரித்துள்ளார் எனவும் மாலிக் கூறுகிறார்.

அத்துடன், பாகிஸ்தான் தாலிபான் அமைப்புக்குச் சவால் விடுக்கும் விதமாகவும் இக்ரமுல்லா இதைச் செய்திருக்கலாம் எனவும், இக்ரமுல்லாவை கைது செய்ய வேண்டும் எனவும் மாலிக் கூறுகிறார்.

புட்டோ கொலைக்கு பாகிஸ்தானின் முன்னாள் ஆட்சியாளர் முஷரப்பும், உளவு அமைப்புமே காரணம் என இக்ரமுல்லாவின் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

புட்டோ கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட முஷரப், நீதிமன்றத்தில் ஆஜராகவே இல்லை.

இக்கொலையில், தாலிபான் ஈடுபட்டது என்றும், ஆனால், இது தொடர்பான முழு உண்மைகளும் மறைக்கப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :