ஐரோப்பிய ஒன்றிய அழுத்தத்துக்கு அடி பணிந்தது ஹார்லி டேவிட்சன்: டிரம்ப் விமர்சனம்

ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் இறக்குமதி வரியில் இருந்து தப்பிக்க, அமெரிக்காவில் இருக்கும் தமது உற்பத்தி அலகுகளை வேறு நாடுகளுக்குக் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் நிறுவனம். இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

ஐரோப்பிய ஒன்றிய கட்டணங்கள் "கணிசமான" சுமை என ஹார்லி-டேவிட்சன் கூறுகிறது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஐரோப்பிய ஒன்றிய கட்டணங்கள் "கணிசமான" சுமை என ஹார்லி-டேவிட்சன் கூறுகிறது

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தங்களுக்கு பணிந்து விட்டது தனக்கு ஆச்சரியம் அளிப்பதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள டிரம்ப், அந்நிறுவனத்திற்காக தாம் கடுமையாக போராடியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய சந்தைக்கான பைக் உற்பத்தி தொழிற்சாலைகள் படிப்படியாக வேறு நாடுகளுக்கு மாற்றப்படும் என ஹார்லி டேவிட்சன் நிறுவனம் கூறியுள்ளது.

அலுமினியம் மற்றும் எஃகு இறக்குமதிக்கான வரியை அமெரிக்கா அதிகரித்தற்கு பதிலடியாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான வரிகளை ஐரோப்பிய ஒன்றியம் அதிகரித்தது.

திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், "நியாயமற்ற மற்றும் பாரபட்சமான வர்த்தக கொள்கைகளின் மூலம் அமெரிக்க தொழிலாளர்களை ஐரோப்பிய ஒன்றியம், தண்டிக்க முயல்வதாக" கூறினார்.

" அதிபர் டிரம்ப் தொடர்ந்து, தடையற்ற, நியாயமான மற்றும் பரஸ்பர வர்த்தகம் செய்யவேண்டும் என்று அழுத்தம் அளிப்பார் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் எங்களுடன் இணைந்து பணியாற்றும்,", என நம்புதாகவும் என சாண்டர்ஸ் கூறினார்.

விஸ்கான்சினில் இருந்து செயல்படும் ஹார்லி-டேவிட்சன் மோட்டார் பைக் நிறுவனம், ஐரோப்பிய ஒன்றிய வரிகளால் அதிகரிக்கும் செலவுகள் "கணிசமான" சுமையாக இருக்கும் என்றும், அது தனது தயாரிப்புகளை சர்வதேச அளவில் விற்பனை செய்யும் விரிவாக்க முயற்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என்றும் கூறுகிறது.

ஹார்லி டேவிட்சன் மோட்டார் பைக் நிறுவனம், தனது கட்டமைப்பு ஆலைகளை ஆஸ்திரேலியா, பிரேசில், இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் வைத்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

ஐரோப்பிய ஒன்றிய கட்டணங்களின் செலவுகள் மட்டுப்படும்

உலகின் பிற நாடுகளில் உள்ள தனது ஆலைகளில் முதலீட்டை அதிகரிக்கவிருப்பதாக ஹார்லி டேவிட்சன் மோட்டார் பைக் நிறுவனம் தெரிவித்திருந்தாலும், எந்த ஆலையில் அதை மேற்கொள்ளப்போகிறது என்ற தகவலை தெரிவிக்கவில்லை. மேலும், தனது உற்பத்தி ஒன்பது முதல் 18 மாதங்களில் அதிகரிக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பைக்குகளின் வரி 6 சதவிகிதத்தில் இருந்து 31 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருப்பதால், அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஒவ்வொரு பைக்கிற்கும் சராசரியாக 2,200 டாலர் (1,660 பவுண்டு) வரி அதிகரிக்கும் என்றும் ஹார்லி டேவிட்சன் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

ஐரோப்பாவில் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 40 ஆயிரம் மோட்டர் பைக்குகளை விற்பனை செய்திருக்கும் ஹார்லி டேவிட்சன் மோட்டார் பைக் நிறுவனம், இந்த வரிகளை வாடிக்கையாளரின் மீது சுமத்தாமல் தானே ஏற்றுக்கொள்ளவிருப்பதாக கூறுகிறது. இல்லாவிட்டால் அதன் விற்பனை சரியும் அபாயம் உள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கொள்கை முடிவால் உலகில் உருவாகியிருக்கும் வர்த்தகப் போரின் காரணமாக தொழில் துறையில் ஏற்பட்டிருக்கும் சிக்கலை வெளிப்படுத்தும் முதல் உதாரணமாக பார்க்கப்படுகிறது ஹார்லி டேவிட்சன் மோட்டார் பைக் நிறுவனத்தின் முடிவு.

அமெரிக்காவின் எஃகு மற்றும் அலுமினிய தொழிற்சாலைகளைப் பாதுகாப்பதற்கு, இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக டிரம்ப் கூறுகிறார்.

ஐரோப்பா, கனடா, மெக்ஸிகோ, இந்தியா மற்றும் இதர நாடுகளில் இருந்து அமெரிக்க உற்பத்தியாளர்களுக்கு உலோகங்களை ஏற்றுமதி செய்பவர்கள், தங்கள் பொருட்களின் விலைகளை உயர்த்தி பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.

படகு உற்பத்தி செய்யும் நிறுவனம் முதல் ஆணி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வரை என எல்லா நிலையிலான அமெரிக்க நிறுவனங்களும், அதிகரித்து வரும் வர்த்தக சிக்கல்களின் விளைவுகள் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :