இராக்: தீவிரவாதக் குற்றம் நிரூபிக்கப்பட்ட 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் நிரூபிக்கப்பட்ட 12 பேருக்கு இராக் அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் அடையாளங்களை இராக் அரசு வெளியிடவில்லை.

தீவிரவாதிகள் என்று நிரூபணமானவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை நிறைவேற்ற இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி வியாழன்று உத்தரவிட்டிருந்தார்.

புதன்கிழமையன்று இஸ்லாமிய அரசு என்று தங்களைக் கூறிக்கொள்ளும் அமைப்பைச் சேர்ந்தவர்களால் கடத்தப்பட்ட எட்டு பணயக் கைதிகளின் உடல்கள் தலைநகர் பாக்தாத்துக்கு வடக்கே சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டது.

இஸ்லாமிய அரசைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட நபர்கள் மீது நடத்தப்பட்ட விசாரணை மற்றும் அவர்களுக்கு ஒட்டுமொத்தமாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

பிரதமரின் உத்தரவின்படி, தீவிரவாதிகள் என்று நிரூபிக்கப்பட்ட 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. எனினும் 13 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக இராக் நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்கள் உள்பட, தீவிரவாதக் குற்றச்சாட்டுக்கு ஆளான பல நூறு பேர் இராக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களில் பெண்களும் அடக்கம்.

தீவிரவாத வழக்குகளில் விசாரணைக்கு உட்படுத்தப்படுபவர்களில் 700 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்த பெண்கள். கடந்த ஜனவரியில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இஸ்லாமிய அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் முற்றுப்பெற்றுள்ளதாக இராக் பிரதமர் அபாதி கடந்த டிசம்பரில் அறிவித்துள்ள போதிலும், ஜிகாதி குழுக்களின் கொரில்லா தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

இஸ்லாமிய அரசு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் இராக்கில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.,அவர்களில் பலர் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளனர்.

இராக்கில் வழக்கு விசாரணை முடிய நீண்ட காலமாகும் என்பதால் தற்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளவர்கள் சமீபத்தில் தண்டனைக்கு உள்ளானவர்களாகஇருக்க வாய்ப்பில்லை என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமைகள் அமைப்பின் இராக் ஆய்வாளர் பெல்கிஸ் வைல் கூறியுள்ளார்.

சீனா, இரான் மற்றும் சௌதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இராக்கில்தான் கடந்த ஆண்டு அதிகம் பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :