உலகப் பார்வை: குடியேற்ற கொள்கை: டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக வலுக்கும் போராட்டம்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

குடியேற்ற கொள்கை: டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக வலுக்கும் போராட்டம்

படத்தின் காப்புரிமை Getty Images

டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான குடியேற்ற கொள்கைகளை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர்.

அமெரிக்க எல்லையில் பிரிக்கப்பட்ட குடியேறிகளின் குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பெற்றோர்/ காப்பாளரிடமிருந்து குழந்தைகளை பிரிக்கும் முடிவிலிருந்து பின்வாங்குவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையிலும், இன்னும் 2,000 குழந்தைகள் பெற்றோர்களைப் பிரிந்தே உள்ளன.

குடியேறிகளை ஏற்றுக்கொள்ள முடியாது - இத்தாலி

படத்தின் காப்புரிமை Getty Images

அரசு சார்பற்ற நிறுவனங்களால் இயக்கப்படும் படகுகளால் காப்பாற்றப்பட்ட குடியேறிகள் இத்தாலியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மட்டாயோ சல்வினி கூறுகிறார்.

குடியேறிகள் கடத்தப்படுவதை அரசு சார்பற்ற நிறுவனங்கள் ஊக்குவிப்பதாக சல்வினி அடிக்கடி குற்றஞ்சாட்டி வருகிறார். இந்நிலையில், குடியேறிகள் விவகாரத்தில் இத்தாலியின் சுமையை குறைக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் உடன்படிக்கையை அவர் பாராட்டியுள்ளார்.

ஆயிரக்கணக்கான குடியேறிகள், குறிப்பாக ஆஃபிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் இத்தாலியை சென்றடைந்துள்ளனர்.

எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க சௌதிக்கு டிரம்ப் வலியுறுத்தல்

படத்தின் காப்புரிமை AFP

உயர்ந்து வரும் வாகன எரிபொருள் விலையை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் சௌதி அரேபியா தனது எண்ணெய் உற்பத்தியை தீவிரமாக அதிகரிக்க வேண்டுமென்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

சௌதி அரேபியா தனது எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு இரண்டு மில்லியன் பீப்பாய்கள் வரை அதிகரிக்க வேண்டுமென்று சௌதி அரசர் சல்மானை டொனால்டு டிரம்ப் ட்விட்டரில் வலியுறுத்தியுள்ளார்.

உலகளவில் பிரதான எண்ணெய் உற்பத்தியாளராக விளங்கும் இரான் மீது பொருளாதார தடைகளை மறுபடியும் விதிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்ததை தொடர்ந்து, கடந்த வாரம் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :