தவறுகள் உங்களுக்கு வழிகாட்டும்; தவறுகள் உங்களை முன்னேற்றும்- எப்படி?

தவறுகள் செய்வது உங்களுக்கு நல்லது

தவறுகள் செய்வதை யாரும் விரும்புவதில்லை. தவறுகள் செய்தால் ஏமாற்றமடைந்ததாகவும், முட்டாள்தனமான நடந்துகொண்டதாகவும் மக்கள் நினைப்பார்கள். செய்வதைச் சரியாக செய்வது முக்கியமானது தான் என்றாலும், தவறுகள் செய்வது ஒன்றும் மோசமான விஷயம் அல்ல.

'நீங்கள் உங்கள் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்கிறீர்கள் 'என்ற பழைய வாசகத்தை நாம் எல்லோரும் கேட்டிருப்போம். ஆனால், உங்கள் திறனை வளர்த்துக்கொள்வதில் சோதனைகளும், தவறுகளும் ஒரு குறிப்பிடத்தக்க விஷயமாக உள்ளன.

தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது வளர்ச்சியடைந்த மனப்போக்கைப் பெற உதவுகிறது என மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

123 சிறுவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அவர்கள் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வதாகத் தெரியவந்துள்ளது.

கண்டுபிடிப்பாளர்கள் செய்த சில தவறுகள், இன்னும் பெரிய கண்டுபிடிப்புகள் உருவாக வழிவகுத்தன. மைக்ரோவேவ் உள்ளிட்ட பல பொருட்கள் தவறுகளில் இருந்து உருவானவையே. நீங்கள் யார் என்பதையும் தவறுகள் காட்டுகின்றன. ஒரு தேர்வில் நீங்கள் தோல்வியடைந்தால், உண்மையான ஏமாற்றத்தை எப்படி சமாளிப்பது என்பதை கற்றுக்கொள்வீர்கள்.

'அனுபவம் என்ற பெயரில் அனைவரும் தங்களது தவறுகளைத்தான் கூறுவார்கள்' என அயர்லாந்து எழுத்தாளர் ஆஸ்கர் வைல்ட் கூறுகிறார். நம்மைப் பற்றியும், நமது வாழ்க்கை பற்றியும் கற்றுக்கொள்வதற்கான முக்கிய பகுதியாக தவறுகள் உள்ளன.

''எந்த தவறுகளையும் செய்யாத மனிதன், எந்த விஷயத்தையும் செய்யாதவனாக இருப்பான்'' என மறைந்த அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் கூறியுள்ளார். நாம் புதிய விஷயங்களைச் செய்வதை தோல்வி பயம் அடிக்கடி தடுக்கிறது. வாழ்க்கையின் ஒரு பகுதியாக தவறுகளை ஏற்றுக்கொள்வது பல நன்மைகளைத் தரும். வரம்பு இல்லாமல் எமது இலக்குகளை அடைய இது உதவுகிறது".

2008-ம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய, எழுத்தாளர் ஜே.கே. ரோலிங், தனது 20 வயதுக்குப் பிறகு தனது திருமணம் நின்றுபோனது பற்றியும், பிறகு தானும் தனது மகளும் வறுமையில் வாழ்ந்தது பற்றியும், அப்போது தாம் கற்றுக்கொண்டவை பற்றியும் தன்னை வெற்றிகரமான எழுத்தாளராக எது உருவாக்கியது என்பது பற்றியும் பேசினார்.

''எனக்கு நானே பாசாங்கு செய்துகொள்வதை நிறுத்திவிட்டேன். முக்கிய விஷயங்களை செய்வதற்கு மட்டுமே எனது அனைத்து சக்திகளையும் செலவிட்டேன். எனக்குள் இருந்த மிகப்பெரிய பயத்தை உணர்ந்தேன். எனது வாழ்கையில் எது முக்கியம் என்பதை தவறுகள் மூலம் தெரிந்துக்கொண்டேன்'' என்று பேசினார்.

ஷேக்ஸ்பியரின் காமெடி ஆஃப் எரர் முதல் ஜான் க்ளீஸின் ஃபால்ட்டி டவர்ஸ் வரை, பிரபலமான நகைச்சுவைகள் தவறுகளில் இருந்தும், தவறான புரிதல்களிலும் இருந்தும் உருவானவையே. ஏனெனில், தவறுகள் மிகவும் நகைச்சுவையானதாக இருக்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: