மலேசியா: 41 வயது ஆணுக்கு 3வது மனைவியான 11 வயது சிறுமி

மலேசியா

பட மூலாதாரம், EPA

மலேசியாவில், 41 வயது ஆணுக்கும் 11 வயது சிறுமிக்கும் நடந்த திருமணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை 18 ஆக மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த ஒரு நபருக்கு, முன்றாவது மனைவியாக தாய்லாந்தை சேர்ந்த இச்சிறுமி திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார். தங்கள் மகளுக்கு 16 வயது ஆகும் வரை, தங்கள் வீட்டிலேயே இருக்க அவர் ஒப்புக்கொண்டதால், திருமணத்திற்கு ஒப்புதல் தெரிவித்ததாக சிறுமியின் பெற்றோர் கூறுகின்றனர்.

தாய்லாந்தில் நடந்த இத்திருமணம் குறித்து, தங்களிடம் எந்த தகவலும் இல்லை என கூறியுள்ள மலேசிய அரசு, விசாரணையும் நடத்தி வருகிறது.

இச்சம்பவம் "அதிர்ச்சிகரமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது" என ஐ.நா.வின் குழந்தைகள் அமைப்பு கூறியுள்ளது.

திருமணம் முடிந்த பிறகு, 41 வயதான நபர் சிறுமியின் கையை பிடித்துக்கொண்டிருப்பதை காட்டும் புகைப்படம் வெளியானது.

இந்த நபருக்கு ஏற்பனவே இரண்டு மனைவிகளும், 5 முதல் 18 வயதுடைய ஆறு குழந்தைகளும் உள்ளனர் என உள்ளூர் ஊடகம் கூறியுள்ளது.

இச்சிறுமியின் பெற்றோர் வடகிழக்கு மலேசிய மாநிலமான கெலந்தனில் உள்ள ரப்பர் தோட்டத்தில் பணியாற்றுகின்றனர்.

சிறுமியை திருமணம் செய்த நபர் வளமான வர்த்தகர் என்றும், சிறுமியின் பெற்றோர் வறுமையில் வாழ்ந்து வந்தனர் என்றும் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

மலேசியாவில் என்ன சட்டம்?

பட மூலாதாரம், Getty Images

மலேசியாவில் சட்டப்படி திருமண வயது 18. ஆனால், 16 வயதுக்கும் குறைவான முஸ்லிம் திருமணங்களை இஸ்லாமிய ஷியா நீதிமன்றங்களால் அனுமதிக்க முடியும்.

உள்ளூர் மத நிர்வாகிகளிடம், இத்திருமணம் குறித்து எந்த தகவலும் இல்லை என மலேசிய அரசு கூறியுள்ளது.

மத நீதிமன்ற அனுமதி இல்லை என்றால், இத்திருமணம் சட்ட விரோதமானதாகக் கருதப்படும். மணமகனுக்கு ஆறு மாத சிறை தண்டனை கிடைக்கும் என பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் கூறியுள்ளது.

''11 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வது, குழந்தையை வேட்டையாடுவது போலாகும்'' என செயற்பாட்டாளர் சையத் அஸ்மி அல்பாஷி ஏஎஃபி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

15க்கும் குறைவான வயதுடைய 16,000 மலேசிய சிறுமிகளுக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளதாகச் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு மலேசியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக ஒரு சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் குழந்தை திருமணத்தை அது குற்றமாக குறிப்பிடவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: