மக்கள் புரிதலுடன் சேலம்-சென்னை 8 வழிச்சாலை: தென் கொரியத் தமிழர்கள் கோரிக்கை

  • 5 ஜூலை 2018
சேலம் பசுமை வழிச்சாலை

மக்களின் புரிதலுடன், சேலம் சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென தமிழக முதல்வருக்கு தென் கொரிய தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொழில்சார் திட்டங்கள் குறித்து முடிவெடுக்கும்போது, வளர்ச்சியை மட்டுமே பார்க்காமல், அறிவியல் மற்றும் சூழலியல் விடயங்களை கருத்தில் கொள்வதை உறுதி செய்ய வேண்டுமென அவர்கள் கூறியுள்ளனர்.

தமிழ்நாட்டில் தற்போது நடைபெறுகின்ற மக்கள் போராட்டங்கள் தொடர்பாகவும், முக்கியமாக தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றியும் தமிழ்நாடு முதல்வருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் தென் கொரியாவில் வாழும் தமிழ் மக்கள் சார்பாக கொரிய தமிழ்த் தளம் என்ற அமைப்பு தமது பார்வையும் வேண்டுகோள்களையும் அனுப்பியுள்ள மின்னஞ்சலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் நீண்ட காலமாக சுற்றுப்புறச்சூழலை பாதித்து மக்களுக்கு மக்களுக்கு கொடிய நோய்களை உருவாக்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு மின்னஞ்சல் வழி அனுப்பப்பட்ட கடிதங்கள் மூலம் தென் கொரிய மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு 100-வது நாள் போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவமும், மக்களின் உயிரிழப்பும், மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பும் தென் கொரியாவில் வாழும் தமிழ் மக்களை வருத்தமடைய செய்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளிவந்துள்ள ஊடகச் செய்திகள், கள ஆய்வுகள், வெளிப்படையற்ற அரசின் (காவல்துறையின்) அறிக்கைகள், காவல்துறையின் தொடர் நடவடிக்கைகள் ஆகியவற்றை சீர்தூக்கிப் பார்க்கையில், போராட்டக்காரர்களில் சிலர் காவல்துறையினரால் அருகாமையிலிருந்து குறிவைத்துச் சுடப்பட்டிருப்பார்கள் என்ற உணர்வு எழுவதை தவிர்க்க முடியவில்லை என்று இந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விதம், இந்தியாவிலும், பிற நாடுகளிலும் நெருக்கடி நேரத்தில் அரசியல் தலைமையிடம் இருந்து காவல் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு ஆயுத முனையில் மக்கள் போராட்டம் ஒடுக்கப்படுகிற வழிமுறைதான் தமிழ்நாட்டிலும் கடைபிடிக்கப்படுகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது என்றும் இந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராடும் மக்களோடு கலந்திருந்த சமூக விரோதிகளின் நடவடிக்கையால்தான் சுட்டோம் என்று அரசு மற்றும் காவல்துறையின் நிலைப்பாடுகள், போராடும் மக்களில் சிலரை சமூக விரோதிகள், தீவிரவாதிகள் மற்றும் தேசவிரோதிகள் என்று முத்திரைக்குத்தி தங்களுடைய செயல்பாட்டை நியாயப்படுத்த முயல்கின்ற காட்சி அரங்கேறுவதை சுட்டிக்காட்டுகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மக்கள் போராட்டங்களை பிரிவினைவாதமாக கருதிய ஆட்சித்தலைவர்கள், தங்களுடைய நாடுகளில் மக்கள் படுகொலைகள் நடப்பதற்கும், நாடு பிளவுபடுவதற்கும் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்பதையும் இந்தக் கடிதம் நினைவுபடுத்துகிறது.

முதல்வர் சொல்வது போல் மக்கள் தாமாக நிலம் தரவில்லை: ஆவேசமாக மறுக்கும் பெண்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
எட்டு வழிச்சாலை: ''முதல்வர் எடப்பாடி இப்படி பொய் சொல்லலாமா?''

மக்கள் போராட்டங்களை மக்களாட்சி நெறிமுறையின் வளர்ச்சி என்று கருதி பொறுமையாக செயல்பட்ட தலைவர்கள் பொருளாதார வளர்ச்சி உள்பட பல நல்ல விடயங்கள் நடப்பதற்கு காரணமாக இருந்துள்ளனதை தமிழக முதல்வர் அறிந்திருப்பார் என்றும் நம்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

போராடும் எளிய மக்களை வன்முறையாளர்கள், சமூக விரோதிகள், பிரிவினைவாதிகள் என்று அரசே முத்திரை குத்துவது, எளிய மக்களை மக்களாட்சி நீரோட்டத்திலிருந்து பிரிப்பதுபோல ஆகிவிடும் என்ற உணர்வைப் பெறுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

அரசு செயல்படுத்தும் திட்டங்களின் செயல்பாடுகளில் சந்தேகம் எழுந்தால், மக்கள் தொடர்பாளர்களை வைத்து, மக்களுடன் கலந்து பேசி, அவர்களுடைய புரிதலுடனே (சேலம் சென்னை 8 வழிச்சாலை உள்பட) அவற்றை செயல்படுத்த வேண்டுமென அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

வரலாற்றில் முந்தைய தமிழ்நாட்டுத் தலைமைகள் மக்கள் நலன்சார் திட்டங்கள், தமிழ் மொழி உரிமை, வளர்ச்சி மற்றும் இந்தியாவில் கூட்டாட்சி போன்ற விடயங்களில் வலுவாக செயல்பட்டதைபோல தமிழக முதல்வரின் பங்களிப்பும் உறுதியானதாக இருக்க வேண்டுமென அவர்கள் கூறியுள்ளனர்.

"அரசியல் மற்றும் நடைமுறை நெருக்கடிகளில் நீங்கள் மக்களின் நலன் சார்ந்து செயல்பட முடியாமல் செய்யுமானால், அதற்கான உண்மையான காரணங்களை உரிய வகையில் பதிவு செய்ய வேண்டுமெனவும், அவ்வாறு செயல்படுவது வருங்கால தலைமுறை பல விடயங்களை சீர்செய்ய உதவியாக இருக்குமெனவும், தமிழக முதல்வரை நேர்மறையாகவே பார்க்க விழைவதாகவும்," இந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக எதிர்க்கட்சி தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், மக்களின் போராட்டங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி, மக்களின் கோரிக்கைகள் வென்றெடுக்கப்பட துணை நிற்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு காலம் காலமாக கடைபிடித்துவரும் சமூக நீதிசார் கல்விக்கொள்கை, மொழிக்கொள்கை மற்றும் இந்திய கூட்டாட்சி அமைப்பு வளம்பெற தமிழ்நாடு, ஆற்றிவரும் பங்கு ஆகியவை குறித்த பரப்புரையை சிற்றூர் முதல் மாநகரங்கள் வரை மேற்கொள்ள வேண்டுமென அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

8 வழிச்சாலைக்கு எதிராக தென் கொரியாவில் தமிழர்கள் போராட்டம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தென் கொரியா

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :