பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்: வழக்கு முதல் தண்டனை வரை

  • 6 ஜூலை 2018
நவாஸ் ஷெரீஃப் படத்தின் காப்புரிமை Sean Gallup
Image caption நவாஸ் ஷெரீஃப்

பிரிட்டன் தலைநகர் லண்டனில், அவென்ஃபீல்ட் குடியிருப்பு வளாகத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்பின் மூன்று பிள்ளைகள், மற்றும் மருமகன் கேப்டன் (ஓய்வுபெற்ற) சஃப்தர் ஆகியோருக்கு சொந்தமான நான்கு (16, 16-A, 17 மற்றும் 17-A), வீடுகள் தொடர்புடைய ஊழல் விவரம்:

காலவரிசை:

2017 ஜூலை 28: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அரசு பதவியில் தொடரக்கூடாது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்தது. தனது சொத்து மற்றும் வருவாய் ஆதாரங்களைப் பற்றி வெளிப்படையாகத் தெரிவிக்க தவறிவிட்டதால் நவாஸ் ஷெரீஃப் பதவிக்கு தகுதியற்றவர் என்று தீர்ப்பளித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவரது குடும்பத்தினர் மீது குற்றவியல் விசாரணையை நடத்தவும் உத்தரவிட்டது.

2017 செப்டம்பர் 8: உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படி, தேசிய பொறுப்புடைமை முகமை (National Accountability Bureau) முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவரது மகன்கள் ஹசன் நவாஸ் மற்றும் ஹுசைன் நவாஸ், மகள் மரியம் நவாஸ் மற்றும் மருமகன் முகமது சஃப்தர் ஆகியோர் மீது ஊழல் வழக்கு தொடுத்தது.

2017 அக்டோபர் 19: நவாஸ் ஷெரீஃப், மரியம் மற்றும் சஃப்தர் ஆகியோர் வழக்கில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி அவர்கள் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றம் நிராகரித்தது.

படத்தின் காப்புரிமை ARIF ALI
Image caption நவாஸ் ஷெரிஃப்பின் மனைவி மற்றும் மகள்

2017 டிசம்பர் 4: நவாஸ் ஷெரீஃபின் மகன்கள் ஹசன் மற்றும் ஹுசைன் ஆகிய இருவரும் தலைமறைவாகி விட்டதாக தேசிய பொறுப்புடைமை முகமை அறிவித்தது.

2018 மே 23: அவென்ஃபீல்ட் குடியிருப்பு வளாக வீடுகள் தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் விளக்கங்கள் பதிவு செய்து முடிக்கப்பட்டன.

2018 மே 24: இந்த வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் மகளின் விளக்கங்கள் பதிவு செய்வது முடிவடைந்தது. லண்டன் அவென்ஃபீல்ட் குடியிருப்பு வளாகத்தில் தனக்கு வீடு எதுவும் இல்லை; நெல்சன் & நெஸ்கல் நிறுவனத்துடன் தனக்கு தொடர்பு எதுவும் இல்லை என்று மறுத்த மரியம், பிரதமரின் மகள் என்பதால் தான் வழக்கில் சேர்க்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.

2018 ஜூன் 11: முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது தேசிய பொறுப்புடைமை முகமை தாக்கல் செய்திருந்த ஊழல் வழக்கில் இருந்து, ஷெரீஃப்பின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் குவாஜா ஹரிஸ் நவாஸ் விலகினார்.

2018 ஜூன் 20: லண்டன் குடியிருப்பு வளாகத்தில் நாவாஸ் ஷெரீஃபுக்கு சொத்து எதுவும், எப்போதுமே இருந்ததில்லை என்று வழக்கறிஞர் குவாஜா ஹரிஸ் மீண்டும் தெரிவித்தார்.

2018 ஜூன் 28: நவாஸ் ஷெரீஃபின் வழக்கறிஞர் தனது வாதங்களை முடித்துக் கொண்டார்.

2018 ஜூலை 3: வழக்கு விசாரணையை முடித்துக்கொண்ட ஊழல் தடுப்பு நீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்த வழக்கை ஒன்பதரை மாதங்களாக விசாரித்து வந்த இஸ்லாமாபாத் ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி மஹ்மூத் பஷீர், கடந்த ஜுலை மூன்றாம் தேதியன்று விசாரணையை முடித்துக் கொண்டு, தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்