''கவலைப்படாதீர்கள், நாங்கள் தைரியமாக உள்ளோம்'' -தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் கடிதம்

தாய்லாந்து குகை படத்தின் காப்புரிமை FACEBOOK/EKATOL

தாய்லாந்தில் குகையினுள் இரண்டு வாரங்களாகச் சிக்கியுள்ள 12 சிறுவர்கள், ''கவலைப்படாதீர்கள்.. நாங்கள் தைரியமாக உள்ளோம்'' எனக் கூறி தங்களது பெற்றோர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

வறுத்த சிக்கன் உள்பட, தங்களுக்கு தேவையான உணவுகள் குறித்தும் அக்கடிதத்தில் எழுதியுள்ளனர்.

''ஆசிரியரே, எங்களுக்கு நிறைய வீட்டுப்பாடங்களைத் தராதீர்கள்'' என ஒரு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. சிறுவர்களில் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டு, இச்சிறுவர்கள் அணியின் கால்பந்து பயிற்சியாளரும் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

''அன்பிற்குரிய சிறுவர்களின் பெற்றோர்களே. தற்போது அனைவரும் நலமாக உள்ளனர். மீட்பு குழுவினர் எங்களை நன்றாக பார்த்துக்கொள்கின்றனர்'' என 25 வயதான பயிற்சியாளர் கூறியுள்ளார்.

''என்னால் முடிந்தவரைச் சிறுவர்களை கவனித்துக்கொள்வேன் என வாக்குறுதி அளிக்கிறேன். எங்களுக்கு உதவியளிக்க வரும் அனைவருக்கும் நன்றி'' எனவும் அவர் கூறியுள்ளார்.

நீர் தேங்கியிருக்கும் குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளருக்கு முக்குளிக்க தெரியாது என்பதால் ஓர் இரவில் அவர்களை மீட்டுவிட முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குகைக்குள் அவர்கள் சென்ற பிறகு பெய்த மழையால், அக்குகையில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அவர்கள் அங்கு சிக்கிக்கொண்டுள்ளனர்.

முன்னதாக, சிறுவர்களுக்கு பிராண வாயு சிலிண்டர்களை வழங்க சென்ற முக்குளிப்பவர் ஒருவர் திரும்பும் வழியில் உயிரிழந்தார்.

குகையில் சிக்கிக் கொண்டுள்ள சிறுவர்களுக்கு, நடக்க போதுமான வலிமை இருப்பதாகவும், ஆனால் நீச்சல் அடித்து அவர்களால் பாதுகாப்பாக வெளிவர முடியாது என்று செய்தியாளர்களிடம் பேசிய சியாங் ராய் ஆளுநர் தெரிவித்தார்.

சிறுவர்களின் உடல்நலம் சாதாரணமாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், அவர்களுக்கு முக்குளிப்பது எப்படி என்பதோடு மூச்சு பயிற்சி மற்றும் நுட்பங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

மழை பொழிய தொடங்கினால் ஓர் இரவில் அவர்களை மீட்க முயற்சி எடுக்கப்படுமா என்று கேட்டதற்கு, "தற்போது இந்த நேரத்தில் சிறுவர்களால் முக்குளிக்க முடியாது" என்று தெரிவித்தார்.

சிறுவர்கள் இருக்கும் இடத்தில் அவர்கள் சுவாசிக்கும் காற்று நன்றாக இருப்பதாக ஆளுநர் நரோங்சக் கூறினார்.

சிறுவர்களின் பெற்றோர்கள் அவர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளதாகவும், ஆனால் அது அவர்களிடம் போய் சென்றதா என்பது தெரியவில்லை என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

குகையில் அவர்கள் சிக்கியிருக்கும் இடத்தை நேரடியாக சென்றடையலாம் என்ற நம்பிக்கையில், மீட்பு பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட துளைகளையிட்டனர். அதில் 18 துளைகள் உதவிகரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. மிக ஆழமானது என்று பார்த்தால் 400 மீட்டர் வரை துளையிடப்பட்டுள்ளது.

ஆனால், இதன் மூலம் சிறுவர்களை மீட்க முடியுமா என்று தெரியவில்லை என்று குறிப்பிட்ட ஆளுநர், அவர்கள் மேற்பரப்புக்கு சுமார் 600 மீட்டர் கீழே இருப்பதாக நம்பப்படுகிறது என்றார்.

அங்குள்ள நிலை என்ன?

சிறுவர்கள் காணாமல் போன 10 நாட்களுக்கு பிறகு, மீட்புப்பணியில் ஈடுபடும் பிரிட்டன் முக்குளிப்பவர்களால் குகையில் கண்டுபிடிக்கப்பட்டனர். குகையின் நுழைவில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் அவர்கள் ஒரு பாறையின் இடுக்கில் உள்ள சிறு அறையில் உள்ளனர்.

சிறுவர்களுக்கு தேவையான உணவு, பிராண வாயு மற்றும் மருத்துவ உதவிகளை தாய்லாந்து மற்றும் சர்வதேச முக்குளிப்பவர்களின் குழுக்கள் வழங்கி வருகின்றனர்.

ஆனால் அக்குகையினுள் இருக்கும் பிராண வாயுவின் அளவு குறித்து கவலை எழுந்த வண்ணம் உள்ளது. சாதாரணமாக 21 சதவீதமாக இருக்க வேண்டிய பிராண வாயு, 15 சதவீதமாக குறைந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

"சிறுவர்களை மீட்பதற்கான சிறந்த திட்டத்துக்கு முயற்சித்து வருகிறோம், குறைந்த அபாயம் இருக்கும் நேரத்தில், அவர்களை வெளியே கொண்டுவர முயற்சிப்போம்" என்று ஆளுநர் நரோங்சக் கூறினார்.

கடந்த சில நாட்களாக மழை பொழிவது நின்றுள்ளதால் மீட்பு பணிகள் செய்ய முடிவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மீட்பு பணியாளர்கள் சிறுவர்களை சென்றடைய குகையின் பல பகுதிகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வெள்ளிக்கிழமையன்று தண்ணீர் வெளியேற்றப்படுவது 12 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டதையடுத்து, குகைக்குள் 10 சென்டி மீட்டர் அளவிற்கு நீரின் அளவு உயர்ந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஞாயிற்றுக்கிழமையன்று கன மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுவதால், குகையில் அதிக வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மழைக்காலம் முடியும் வரை குகைக்குள் சிறுவர்களை காத்திருக்க வைக்கலாம் என்று அதிகாரிகள் முதலில் முடிவு செய்திருந்தனர். ஆனால், அப்படி செய்தால் அவர்கள் 4 மாதங்கள் வரை அங்கு சிக்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்