அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

அமெரிக்கா

பட மூலாதாரம், FACEBOOK / SHARATH

அமெரிக்காவின் மிசூரி மாகாணத்தில் உள்ள கான்சாஸ் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் சரத் கோப்பு என்ற இந்திய மாணவர் பலியாகியுள்ளார்.

தெலங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான சரத் கோப்பு, மிசூரி பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.

இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ள கான்சாஸ் நகர போலீஸார், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சரத் அங்கு பலியானார் என கூறியுள்ளனர்.

சரத்தைத் துப்பாக்கியால் சுட்ட நபர் அடையாளம் காணப்படவில்லை என்றாலும், சந்தேக நபரின் காணொளியை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

மிசூரி பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டே, சம்பவம் நடந்த உணவகத்தில் சரத் வேலை செய்துகொண்டிருந்தார்.

காணொளிக் குறிப்பு,

சந்தேக நபர் குறித்து போலீஸார் வெளியிட்டுள்ள காணொளி

சரத்தின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ள போலீஸார், துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபரைப் பற்றிய தகவல் கொடுத்தால் 10,000 டாலர் வெகுமதி அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

ஐதராபாத்தில் உள்ள வாசவி பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவு செய்த சரத், உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றவர்.

சரத்தின் தந்தை ராம் மோகன், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

இதே போல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா என்ற மென்பொருள் பொறியாளர் கான்சாஸ் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பிற செய்திகள்

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :