‘சர்வம் ராணுவமயம்’: நசுக்கப்படும் ஊடக சுதந்திரம்

'சர்வம் ராணுவமயம்': நசுக்கப்படும் ஊடக சுதந்திரம் படத்தின் காப்புரிமை Getty Images

தமிழகத்தில் ஊடக சுதந்திரம் நசுக்கப்படுவதாக குரல்கள் எழுந்தள்ளன. இது குறித்த காத்திரமான உரையாடல்களும் தொடங்கி உள்ளன. இது குறித்து பிபிசியில் ’தி இந்து’ குழுமத்தின் பதிப்பாளர் என்.ராம் எழுதிய கட்டுரையில், "தமிழ்நாட்டில் ஊடக சுதந்திரம் குறித்த அரசின் போக்கு ஒரு மிகப் பெரிய வீழ்ச்சியை தொட்டிருக்கிறது. ஒரு பலவீனமான அரசு, தன் பலவீனத்தை இம்மாதிரியான அதீதமான செயல்பாடுகளின் மூலம் மறைத்துக்கொள்கிறது." என்று குறிப்பிட்டு இருந்தார்.

இது தமிழகத்தின் நிலை மட்டுமல்ல, பல்வேறு தேசங்களில் இவ்வாறுதான் நிலை இருக்கிறது.

உலகளவில் ஊடகவியலாளர்களை சிறையில் அதிகளவில் அடைத்த நாடுகளில் துருக்கி, சீனா மற்றும் எகிப்து முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன. சர்வதேச அளவில் 1990 ஆம் ஆண்டிலிருந்து இப்போதுவரை 2500 செய்தியாளர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்கிறது ஒரு தரவு.

இந்த கட்டுரையில் இப்போது பாகிஸ்தானில் நிலவும் சூழ்நிலையை ஆய்வு செய்வோம்.

சர்வம் ராணுவமயம்

பாகிஸ்தான் ஊடகங்களின் விமர்சனத்திற்கு ராணுவம் மிக மோசமாக எதிர்வினையாற்றுகிறது.

ஜூலை 25 பொது தேர்தல் நடப்பதை அடுத்து அங்குள்ள ஊடகங்களுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தாராளமனோபாவம் கொண்ட நாளிதழான டான் மற்றும் செய்தி தொலைக்காட்சி ஜியோ ராணுவத்திற்கு எதிராக கருத்துகளை வெளியிட்டதாக கூறி அந்த செய்தி நிறுவனங்கள் மீது அண்மைய மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, ராணுவத்தை விமர்சித்து எழுதும் செய்தியாளர்களும் தாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பாகிஸ்தானில் ஊடக சுதந்திரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

அங்கு எப்போதாவதுதான் ராணுவத்தை விமர்சித்து எழுதப்படும். இப்போது அவ்வாறு எழுதப்படுவதற்கு எதிராக மோசமாக எதிர்வினையாற்றி வருகிறது ராணுவம்.

ஊடக சுதந்திரத்தின் நிலை

எல்லைகளற்ற செய்தியாளர்கள் வெளியிட்ட உலக ஊடக சுதந்திர குறியீட்டில், 2018 ஆம் ஆண்டு கணக்குப்படி, 180 நாடுகளில் பாகிஸ்தான் 139வது இடத்தில் உள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

பாகிஸ்தானில் ராணுவம் ஊடகங்களை மிரட்டுவதாக கூறுகிறது ’வாட்ச்டாக் ஃப்ரீடம் ஹவுஸ்’ அமைப்பு.

ஆனால், கடந்த ஜூன் மாதம் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் ஜெனரல் ஆசிஃப் கஃபார், ராணுவம் என்றுமே ஊடகங்களுக்கோ அல்லது செய்தியாளர்களுக்கோ அதிகாரத்துடன் ஆணையிட்டதில்லை. ராணுவத்தை அரசியலுக்குள் இழுக்காதீர்கள் என்றார்.

ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்திகள்

ராணுவம் சொல்வதை கேட்காதபட்சத்தில் பாகிஸ்தான் ஊடகங்கள் மோசமான விளைவுகளை அடிக்கடி சந்திக்கின்றன.

குறிப்பாக ஆர்ப்பாட்டங்கள் குறித்து செய்தி வெளியிடும்போது கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தப்படுகிறது.

பாகிஸ்தான் பழங்குடிகளுக்கு எதிராக அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடபடுவதற்கு எதிராக இந்தாண்டு தொடக்கத்தில் பாஸ்துன் பாதுகாப்பு இயக்கம் போராடியது. ஆனால், அந்த போராட்டம் குறித்த செய்திகள் கடுமையான தணிக்கைக்கு பின்பே வெளியிடப்பட்டன.

மக்கள் உரிமை சார்ந்த இயக்கங்கள் குறித்த செய்திகளை வெளியிடுவதை தடுக்கும் விதமாக பெரும் அழுத்தங்கள் தங்கள் மீது திணிக்கப்படுவதாக, இணைய அறிக்கை ஒன்றை பாகிஸ்தானின் நூறு முக்கிய செய்தியாளர்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்டனர்.

டெய்லி டைம்ஸ் நாளிதழின் ஆசிரியர் ரஸா ரூமி ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியிட்ட ஒரு கட்டுரையில் இந்த தணிக்கை விவகாரத்தை ஒப்புக் கொண்டுள்ளார். "பெஷாவரில் நடந்த பாஸ்துன் பாதுகாப்பு இயக்கத்தின் பேரணியை அனைத்து தொலைக்காட்சிகளும் இருட்டடிப்பு செய்தன, அச்சு ஊடகங்களில் சிலர் மட்டுமே தைரியத்துடன் வெளியிட்டனர். அதன் பின்பும், அதிகாரவர்க்கத்தினரை கோபப்படுத்திவிடுமோ என்ற தயக்கத்துடனே பாஸ்துன் பாதுகாப்பு இயக்கம் குறித்த செய்திகளை வெளியிடுகிறோம்" என்று ரூமி எழுதினார்.

முஸாரஃப் சைதியும் இது குறித்து கூறுகிறார். தி நியூஸ் தளம் பாஸ்துன் பாதுகாப்பு இயக்கம் குறித்த என் பத்தியை பிரசுரிக்க மறுத்துவிட்டது. கடந்த பத்தாண்டுகளில் என் பத்தி பிரசுரத்திற்கு மறுக்கப்படுவது இதுவே முதல்முறை.

பாஸ்துன் பாதுகாப்பு இயக்கத்துடன் தொடர்பில் இருக்கிறார் என்பதற்காக பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சியான பி.டிவி செய்தி வாசிப்பாளர் சனா இஜாஷ் கடந்த மே மாதம் தொலைக்காட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

ஒடுக்கப்படும் எதிர்குரல்கள்

ராணுவத்துக்கு எதிரான குரல்கள் ஒடுக்கப்படுவது உண்மையில் கவலையுற செய்கிறது.

பாகிஸ்தானில் பிரபலமான உருது தொலைக்காட்சியான ஜியோ கடந்த ஏப்ரல் பாகிஸ்தான் முழுவதும் பல பகுதிகளில் முடக்கப்பட்டது.

ராணுவத்தின் கட்டளையின் பெயரிலேயே இவ்வாறாக முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 2017 - ல் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்பின் ராணுவத்திற்கு எதிரான கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததுதான் இதற்கு காரணம்.

நவாஸின் கட்சிக்கு ஆதரவான தொலைக்காட்சி ஜியோ என்று பரவலாக கூறப்படுகிறது.

இதுபோல2014 ஆம் ஆண்டு ஜூன் மாதமும் இவ்வாறாக தொலைக்காட்சி முடக்கப்பட்டது. அந்த தொலைக்காட்சியின் பிரபலமான செய்தி வாசிப்பாளர் ஹமித் மிர் தாக்கப்பட்டார். இதற்கு காரணம் பாகிஸ்தான் உளவுத்துறை என்று அவரது குடும்பம் குற்றஞ்சாட்டிய சூழ்நிலையில் அப்போது ஜியோ தொலைக்காட்சி முடக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

விவாத நிகழ்ச்சிகளில் ஷரீப்புக்கு ஆதரவாக கருத்து தெரிப்பவர்களின் கருத்துகளை வெளியிடக் கூடாது என ஜியோ செய்தி, துன்யா மற்றும் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் மீடியா வாட்ச் தளம் கூறுகிறது.

அதுபோல, பாகிஸ்தானில் அதிகம் விற்பனையாகும் டான் ஆங்கில செய்திதாளும் மோசமான இடையூறுகளை சந்திக்கிறது. கடந்த மே மாதம் ஷரீப் நேர்காணலை வெளியிட்டப் பின்தான் இப்படியான இடையூறுகள்.

அந்த நேர்காணலில் ராணுவத்திற்கு எதிரான கருத்துகளை ஷரீப் கூறி இருந்தார். அதுமட்டுமல்லாமல், மும்பை தாக்குதல் குறித்த விசாரணையை பாகிஸ்தான் தாமதப்படுத்துவதாகவும் அவர் கூறி இருந்தார்.

டான் நிறுவனம் இந்த இடையூறுகள் குறித்த தகவல்களை தொடர்ந்து தமது நேயர்களுக்கு சொல்லிவந்தது. அனைத்து இடையூறுகளையும் கடந்து தாங்கள் செயல்படுவோம் என்றும் உறுதி அளித்து இருந்தது.

பத்திரிகையாளர்களுக்கு இருக்கும் ஆபத்துகள்

பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்று பாகிஸ்தான் என்று கூறுகிறது பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த ஜனவரி மாதம், ராணுவத்தை பற்றி வெளிப்படையாக விமர்சித்து வந்த பத்திரிகையாளர் தஹா சித்திக்கை கடத்த முயற்சி செய்யப்பட்டது. அதனையடுத்து அவர் பாகிஸ்தானை விட்டு வெளியேறினார்.

வரவிருக்கும் தேர்தலில் செல்வாக்கு செலுத்த ராணுவம் முயற்சிப்பதாக தன்னுடைய ஜங்க் செய்தி தளத்தில் ஜியோ செய்தி வாசிப்பாளர் சலீம் சஃபி கட்டுரை ஒன்றினை வெளியிட்டதையடுத்து, இஸ்லாமாபாதில் உள்ள அவரது வீட்டில் ஆயுதம் ஏந்திய நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர்.

இதேபோல, கடந்த ஜூன் மாதம், ராணுவத்தை விமர்சிக்கும் குல் புக்ஹாரி லாகூரில் கடத்தப்பட்டார். இதில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறி ராணுவம் மறுத்துவிட்டது.

ஊடகங்கள் கூறுவது என்ன?

ஊடகவியலாளர்கள் பணியில் குறுக்கிடுவது மற்றும் அவர்களை துன்புறுத்துவது என, இது பாகிஸ்தானிய ஊடகக்குழுக்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவே உள்ளது.

மிரட்டல்கள், கடத்தல், தாக்குதல் நடத்துவது என அரசியல்வாதிகளும், புலனாய்வு அமைப்புகளும், ராணுவமும் ஊடகங்களை துன்புறுத்துவதாக, பாகிஸ்தானின் காப்பந்து பிரதமர் நசிருல் முல்கிற்கு பத்திரிகையாளர் சுதந்திர அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

"பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று, ஆம். அது சரிதான். ராணுவ குடியிருப்பில் இருக்க வேண்டியவர்கள் அவர்களுக்கென நிர்ணயித்த எல்லையை தாண்டுவதால்தான் இது நடக்கிறது" என டெய்லி டைம்ஸ் பத்திரிகை கடந்த ஜூன் 26ஆம் தேதியன்று தலையங்கம் வெளியிட்டது.

அதேபோல, ஊடக தணிக்கைக்கு எதிரான பிரசாரம் ஒன்றை பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: