பிரெக்ஸிட்டை புரிந்து கொள்ள 5 எளிய கேள்வி பதில்

சர்வதேச அளவில் மீண்டும் பிரெக்ஸிட் பிரதான செய்தி ஆகி இருக்கிறது. பிரெக்ஸிட் தொடர்பாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மேவுடன் கருத்து வேறுபாடு கொண்டு வெளியுறவுத் துறை செயலாளர் போரிஸ் ஜான்சன் தன் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரீசா மேவுக்கு எழுதிய கடிதமும், அதற்கு தெரீசா மேவின் பதில் கடிதமும் பிரிட்டன் அரசியலில் அதிர்வுகளை கிளப்பி உள்ளது.

இப்போது பிரிட்டனில் நடக்கும் விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டுமென்றால், பிரெக்ஸிட்டை புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கு பிரெக்ஸிட் குறித்து அடிப்படையான சில தகவல்களை தெரிந்து கொள்ளவோம்.

பிரெக்ஸிட் என்றால் என்ன?

ஆங்கிலத்தில் Brexit. (Britian Exit) அதாவது பிரிட்டன் வெளியேறுதல் என்று பொருள். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான விஷயமாதலால், இப்பதம் பயன்படுத்தப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் என்றால் என்ன?

பொருளாதார மற்றும் அரசியல் ஒத்துழைப்புக்காக இரண்டாம் உலகப் போருக்கு பின் ஏற்படுத்தப்பட்டதுதான் ஐரோப்பிய ஒன்றியம். இந்த ஒன்றியத்தில் ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, க்ரோஷியா, சிப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், ஃபின்லாந்து, ஃப்ரான்ஸ், க்ரீஸ், ஜெர்மனி, ஹங்கேரி, ஐயர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன் உள்ளிட்ட 28 நாடுகள் இருந்தன. ஐரோப்பிய ஒன்றியத்திற்கென்று, `ஈரோ' என்ற தனி பணம் உள்ளது. இதனை 19 நாடுகள் பயன்படுத்துகின்றன. இதற்கென்று நாடாளுமன்றமும் உள்ளது.

ஏன் ஐரோப்பியா ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுகிறது?

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறே வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததற்கு முதன்மையான காரணம் குடியேற்றம்தான். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்த பலநாடுகள் குடியேற்ற விஷயத்தில் தாராளவாதபோக்குடன் நடந்து கொண்டது. பல நாடுகளிலிருந்து வருவோர் பிரிட்டனில் குடியேறுவது காரணமாக, தங்கள் நாட்டின் கலாசாரம், பொருளாதாரம் மோசமடைவதாக பிரிட்டன் மக்கள் கருத தொடங்கினர். இந்த எண்ணமானது இது தொடர்பாக ஒரு வாக்கெடுப்புக்கு வித்திட்டது. 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடந்த அந்த வாக்கெடுப்பில் 71.8 % பேர் கலந்து கொண்டனர். 51.9 % மக்கள் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

எப்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகிறது பிரிட்டன்?

ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான வாக்கெடுப்பில் பெரும்பாலானவர்கள் அந்த ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்வதற்கு இசைவாக வாக்களித்தனர். தனிப்பட்ட இரு நபர்களின் உறவுகள் சுமூகமாக பிரிந்து செல்வதிலேயே ஏராளமான சிக்கல்கள் இருக்கும் இப்போதைய சூழலில் வணிகம், ராஜாங்கம் என நெருக்கமான தொடர்பு உள்ள ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நினைத்த உடனே எல்லாம் வெளியேறிவிட முடியாது. அதனால், சுமூகமாக பல உடன்படிக்கைகளை மேற்கொண்டுவிட்டு, ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுகிறது. அதற்கான காலக்கெடு 2019. அதாவது, மார்ச் 29, 2019 அன்று இரவு பிரிட்டன் நேரப்படி 11 மணிக்கு ஒன்றியத்திலிருந்து வெளியேறுகிறது பிரிட்டன்.

போரிஸ் ஜான்சன் யார். அவர் ஏன் இப்போது ராஜிநாமா செய்தார்?

போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் வெளியுறவுத் துறை செயலாளர். பிரெக்ஸிட்டிற்கு ஆதரவாக தீவிரமாக பிரசாரம் செய்தவர். ஐரோப்பிய ஒன்றியத்திலிந்து வெளியேறுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் பிரதானமாக இருந்தவர். அவர் பிரெக்ஸிட் தொடர்பாக காத்திரமான முடிவுகளை பிரிட்டன் பிரதமர் தெரீசா மே எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி, பிரெக்ஸிட் கனவை மே தெரீசா சிதைப்பதாக கூறி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :