அமெரிக்காவின் வருங்காலம் மீது தாக்கம் செலுத்தப்போகும் டிரம்பின் புதிய தலைமை நீதிபதி

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி பிரெட் கவனாவின் பெயரை முன்மொழிந்துள்ளார் அதிபர் டொனால்டு டிரம்ப்.

Brett Kavanaugh

பட மூலாதாரம், Reuters

இந்த முடிவு அமெரிக்காவில் கருக்கலைப்பு, துப்பாக்கி பயன்பாடு உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் நீண்டகாலத் தாக்கம் செலுத்தக்கூடியது.

கவனாவை பதவியில் அமர்த்தியுள்ளதன் மூலம், தனது பதவிக்காலம் முடிந்தபின்னும், வருங்காலத் தலைமுறைகளிடமும் தனது தாக்கத்தைச் செலுத்துவதற்கான வாய்ப்பு டிரம்ப்புக்கு உருவாகியுள்ளது.

கவனாவை, "சந்தேகத்துக்கு இடமாற்ற நம்பகத்தன்மை உடையவர், யாராலும் முந்த முடியாத தகுதிகளை உடையவர் மற்றும் சட்டத்துக்கு உட்பட்ட நீதிக்கு கட்டுப்பட்டவர்," என்று டிரம்ப் கூறியுள்ளார்.

புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள கவனா, 81 வயதாகும் தற்போதைய தலைமை நீதிபதி ஆண்டனி கென்னெடிக்கு அடுத்து பதவியேற்கவுள்ளார். தாம் பதவி ஓய்வு பெற உள்ளதாக கென்னெடி சமீபத்தில் கூறியிருந்தார்.

திங்கள் இரவு டிரம்ப் அறிவிப்பை வெளியிட்டபின், புதிய நீதிபதியை தேர்வு செய்யும் முயற்சிகளின்போது, அமெரிக்க நீதித்துறையின் இந்த முக்கியப் பொறுப்புக்கு டிரம்ப் கொடுக்கும் முக்கியத்துவத்தை தான் உணர்ந்ததாக 53 வயதாகும் கவனா கூறியுள்ளார்.

யார் இந்த பிரெட் கவனா?

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் நிர்வாகத்தின்போது ஆலோசகராக இருந்த கவனா, 2006 முதல் செல்வாக்கு மிகுந்த கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார்.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

கருக்கலைப்பு எதிர்ப்பு உள்ளிட்ட பழமைவாத கருத்துகளை உடையவர் பிரெட் கனவா

அதற்கு முன்பு 1990களில் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் நிர்வாகத்தின்போது எழுந்த சர்ச்சைகளை விசாரித்த விசாரணை அதிகாரி கென்னத் ஸ்டாரிடம் இவர் பணியாற்றினார்.

தற்போதைய தலைமை நீதிபதி கென்னெடியின் அலுவலக எழுத்தராகவும் ஒரு காலத்தில் இவர் பணியாற்றியுள்ளார், யேல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற கவனா.

குடியேற்ற ஆவணங்கள் இல்லாத ஒரு பதின்வயது பெண் ஒருவருக்கு கருக்கலைப்பு செய்ய நீதிமன்றம் ஒன்று சமீபத்தில் அனுமதி அளித்ததற்கு இவர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.

பதவியில் இருக்கும்போது அதிபர்களுக்கு குற்ற வழக்குகளின் விசாரணை மற்றும் குடிமை வழக்குகள் ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று 2009இல் மினசோட்டா சட்ட மறு ஆய்வுக் கட்டுரையில் இவர் எழுதினார்.

2016இல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருப்பது தொடர்பான ராபர்ட் மியூலரின் விசாரணை தொடர்பாக பிற்காலத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க நேரிடலாம் என்பதைக் கருத்தில்கொண்டே வெள்ளை மாளிகை இவரை தேர்வு செய்துள்ளதாக கருதப்படுகிறது.

தாக்கம் என்ன?

அமெரிக்க மத்திய அரசு மற்றும் மாகாண அரசுகளுக்கு இடையே உள்ள பிரச்சனைக்குரிய சட்டங்கள் மற்றும் விவகாரங்களில் இறுதி முடிவை உச்ச நீதிமன்றமே எடுக்கும்.

பட மூலாதாரம், Getty Images

கருக்கலைப்பு, மரண தண்டனை, வாக்குரிமை, குடியேற்றக்கொள்கை, தேர்தல் பிரசார நிதிகள், காவல் துறையில் நிலவும் இன பாகுபாடு உள்ளிட்டவற்றில் உச்ச நீதிமன்றமே தீர்ப்பளிக்கும்.

உச்ச நீதிமன்றத்தில் உள்ள ஒன்பது நீதிபதிகளும் வாழ்நாள் முழுமைக்கும் பதவியில் இருப்பார்கள் என்பதால், கவனா இனிவரும் சில தசாப்தங்களுக்கு பதவி வகிப்பார்.

ஏற்கனவே பழைமைவாத நீதிபதிகள் ஐந்துக்கு நான்கு என்று பெரும்பான்மையாக உள்ள உச்ச நீதிமன்றத்தின், அமர்வுகளை இன்னும் வலதுசாரித் தன்மை உடையதாக கவனா மாற்றுவார்.

நீதிபதி கென்னெடி, சில கருத்து வேறுபாடுகளுக்கு உள்ளான, உச்ச நீதிமன்றத்தின் சில தாராளவாத முடிவுகளுக்கு இசைந்தார். கவனா அவ்வாறு இருப்பது சற்று கடினம்.

கடந்த ஆண்டு டிரம்ப் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட 50 வயதாகும் நீதிபதி நீல் கோர்ஸக் உச்ச நீதிமன்றத்தின் பழமைவாத நீதிபதிகளில் ஒருவராக உள்ளார்.

அடுத்தது என்ன?

உச்ச நீதிமன்ற நீதிபதி பொறுப்புக்கு முன்மொழியப்பட்டவருக்கு செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். டிரம்பின் குடியரசு கட்சி 51-49 என்ற அளவில் மெல்லிய பெரும்பான்மை கொண்டுள்ளது.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

தனது மனைவி மற்றும் மகள்களுடன் வெள்ளை மாளிகையில் கவனா

நீதிபதியாக முன்மொழியப்பட்டவர் நியமனம் செய்யபட 51 வாக்குகள் தேவை. குடியரசு கட்சியின் ஜான் மெக்கைன் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதால் குடியரசு கட்சியால் 50 வாக்குகள் மட்டுமே பெற முடியும்.

வாக்கடுப்புக்கு முன்பு செனட் நீதித்துறை விவகாரங்களுக்கான குழுவின் கேள்விகளை கவனா எதிர்கொள்வார்.

நாடுமுழுதும் கருக்கலைப்பை சட்டபூர்வமானதாக்கி 1973இல் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து ஜனநாயக கட்சியினர் அவரிடம் கேள்வி எழுப்ப உள்ளனர்.

அந்த முடிவை மாற்ற வேண்டும் என்று பழமைவாத கிறிஸ்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கருக்கலைப்புக்கு எதிராகவே டிரம்ப் கடந்த காலத்தில் கருத்து கூறியுள்ளார்.

நவம்பரில் வரவுள்ள இடைக்கால தேர்தல்களுக்கு முன்பே கவனாவின் நியமனம் உறுதி செய்யப்பட வேண்டும் என்று குடியரசு கட்சியினர் விரும்புகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :