தாய்லாந்து: குகைக்குள் சிக்கிய அனைவரும் மீட்பு

கடந்த 17 நாட்களாக தாய்லாந்திலுள்ள குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்கள், அவர்களது பயிற்சியாளர் மற்றும் இந்த மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த முக்குளிப்பு வீரர்கள், மருத்துவர்கள் என அனைவரும் குகையிலிருந்து பாதுகாப்பாக வெளியேறினர்.

தாய்லாந்து குகை

பட மூலாதாரம், Getty Images

8:30 PM - இந்த மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அனைத்து வீரர்களும் குகையிலிருந்து பாதுகாப்பாக வெளியே வந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Thai NavySEAL

8:15 PM-சிறுவர்களை மீட்பதற்காக குகைக்குள் சென்ற நான்கு கப்பற்படை வீரர்கள் மற்றும் ஒரு மருத்துவர் ஆகியோர் பத்திரமாக வெளியே வந்துவிட்டதாக மீட்பு பணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

8:05 PM - முக்குளிப்பு வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சிறுவர்களை மீட்பதற்காக குகைக்குள் சென்ற மீட்பு குழுவில் இடம்பெற்றிருந்த நான்கு கப்பற்படை வீரர்கள் மற்றும் ஒரு மருத்துவர் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவர்கள் இன்னும் சில நிமிடங்களில் குகையை விட்டு வெளியே வந்துவிடுவார்கள் என்றும் மீட்பு பணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

7:10 PM: மீட்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் அனுமதிக்கப்பட்டுள்ள சியாங் ராய் மருத்துவமனையின் முன்பு கூடியுள்ள மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

6:40 PM: "இங்கிலாந்து கால்பந்து அணிக்கு தாய்லாந்து ஆதரவு தெரிவிக்கும்"

நாளை புதன்கிழமை நடைபெறும் 2018 உலக கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில், இங்கிலாந்துக்கு தாய்லாந்து ஆதரவு தெரிவிக்கும் என்று 64 வயது மனோப் சுக்சார்டு தெரிவித்திருக்கிறார்.

தாய்லாந்து குகையில் சிக்குண்டிருந்த 12 சிறார்களும், அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும் மீட்கப்பட்ட பின்னர், அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்ற மருத்துவமனைக்கு வெளியே பிபிசி செய்தியாளர் ஹோவார்டு ஜான்சனை சந்தித்த மனோப் இவ்வாறு கூறியிருக்கிறார்.

தாங் லுயாங் குகையில் சிக்குண்டிருந்த இந்த 12 சிறார்களையும், அவர்களின் பயிற்சியாளரையும் கண்டுபிடிக்க குகை ஆய்வில் சிறந்த வோலாதன், ரிச்சர்ட் ஸ்டான்டன் மற்றும் ராபர்ட் ஹார்பர் ஆகிய 3 பிரிட்டன் நிபுணர்கள் உதவியது குறிப்பிடத்தக்கது.

6:30 PM: அமெரிக்க அதிபர் டிரம்பும் மீட்புப் பணியாளர்களுக்கு தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

6: 15 PM: "இது எதிர்பாரா ஆச்சரியமா, அறிவியலா அல்லது என்னவென்று எங்களுக்கு தெரியவில்லை. 13 ஒயில்ட் போர்ஸும் (சிக்குண்ட கால்பந்து அணியின் பெயர்) தற்போது வெளியே வந்துவிட்டனர்." என தாய்லாந்து கடற்படை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

6:00 PM: மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு தனது மரியாதையை தெரிவித்துள்ளார் பிரிட்டன் பிரதமர் தெரீசா மே

பட மூலாதாரம், Twitter/Theresa May

5:40 PM: பிபிசியின் ஹோவாட் ஜான்சன், சியாங் ராயில், சிறுவர்கள் கொண்டு செல்லப்படும் மருத்துவமனையின் வெளியே உள்ளார்.

இன்று மீட்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அவசர ஊர்தி மூலம் கொண்டு செல்கின்றனர்.

5:30 PM: இந்த மீட்புப் பணி, நான்கு முக்குளிப்பவர்கள் மற்றும் சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நாளில் இருந்து உடனிருந்த மருத்துவர் வெளியே வந்துவுடன் நிறைவடையும்.

5:20PM: குகையில் சிக்குண்டுடிருந்த அனைவரும் (13 பேரும்) மீட்பு

தாய்லாந்திலுள்ள தாம் லுயாங் குகையில் சிக்குண்டிருந்த 12 சிறார்களும், அவர்களின் கால்பந்து பயிற்சியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதனை தாய்லாந்து கடற்படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

5:15PM: குகையில் சிக்குண்டுடிருந்த மேலும் 3 பேர் மீட்பு

தாய்லாந்து குகையில் சிக்குண்டதில் இன்று மேலும் 3 பேர் மீட்கப்பட்டுள்ளதாக, இந்த மீட்புதவி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள குழு பிபிசியிடம் உறுதி செய்துள்ளது,

4:10 PM: பதினோராவது நபர் மீட்கப்பட்டதாக தகவல்

பதினோராவது சிறுவன் குகையில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

3:30 PM: ஒன்பதாவது சிறுவன் குகையிலிருந்து மீட்கப்பட்ட தகவலை தாய்லாந்து கடற்படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள எஞ்சிய ஐந்து பேரை மீட்கும் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 10.08க்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, குகையில் சிக்கி இருக்கும் எஞ்சியுள்ள சிறுவர்களும், பயிற்சியாளரும் இன்றே மீட்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக மீட்பு பணிகளின் தலைவர் தெரிவித்தார்.

முன்னதாக, நான்கு சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமையும், மேலும் நான்கு சிறுவர்கள் திங்கள்கிழமையும் மீட்கப்பட்டனர்.

இதுவரை நடந்தது என்ன?

தாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள ஆழமான தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23-ம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும் அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

வெள்ளம் சூழ்ந்த, ஆழமான, சிக்கலான பாதைகளை உடைய அந்தக் குகையில் சிக்கிக்கொண்ட கால்பந்து அணியைக் கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது.

இந்த விவகாரம் சர்வதேசக் கவனத்தைப் பெற்றது. பிரிட்டிஷ் குகை மீட்பு வல்லுநர்கள் உள்பட, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த முக்குளிப்பு வீரர்களும், குகை மீட்பு வீரர்களும் தாய்லாந்தில் குவிந்தனர்.

9 நாள் போராட்டத்துக்குப் பிறகு, ஜூலை 2-ம் தேதி பிரிட்டிஷ் குகை மீட்பு வீரர்கள் சிறுவர்களையும், அவர்களின் பயிற்சியாளரையும் குகை வாயிலில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் ஒரு பாறை இடுக்கில் உயிருடன் கண்டுபிடித்தனர்.

தாய்லாந்து கடற்படையின் தேர்ச்சி பெற்ற முக்குளிக்கும் வீரர் சமன் குனன் குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு ஆக்சிஜன் உருளையை கொடுத்து விட்டுத் திரும்பி வரும் வழியில் அவருக்கு ஆக்சிஜன் தீர்ந்துபோனதால் ஜூலை 6-ம் தேதி உயிரிழந்தார்.

இது மீட்புக் குழுவை அதிர்ச்சி அடைய வைத்ததோடு, இது எவ்வளவு ஆபத்தான பணி என்பதையும் காட்டியது. அத்துடன், முன்னரே திட்டமிட்டபடி சில மாதங்கள் காத்திருப்பதில் ஒரு சிக்கலும் ஏற்பட்டது. தாய்லாந்தில் சில நாட்களில் கடும் மழை எதிர்பார்க்கப்பட்டதால், இந்தக் குகை மேலும் வெள்ளமயமாகும் அபாயம் என்று மீட்புக் குழு அஞ்சியது. இதனால், ஆபத்தான வழி என்றாலும், சிறுவர்களை போதிய பாதுகாப்பு உடையோடு முக்குளிக்க வைத்து, மீட்பது என்று முடிவெடுத்தனர்.

பட மூலாதாரம், Getty Images

இந்நிலையில் ஒவ்வொரு சிறுவரோடும் இரண்டு முக்குளிக்கும் வீரர்கள் உடன் வரும்வகையில் மீட்பு திட்டமிடப்பட்டது. மீட்பு வீரர்களுக்கு வழிகாட்டுவதற்காக ஏற்கெனவே மீட்புப் பாதை நெடுக ஒரு கயிறு போடப்பட்டுள்ளது. அதன் வழியாக இரண்டு மீட்பு வீரர்களும் ஒரு சிறுவரும் நீந்திக் கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.

சிறுவனின் காற்றுக் குடுவையை ஒரு மீ்ட்பு வீரர் சுமந்து வருவார். ஒரு வீரரோடு, மீட்கப்படும் ஒரு சிறுவன் கயிற்றால் இணைக்கப்பட்டிருப்பான். மீட்கப்படும் சிறுவர்களின் முழு முகத்தையும் மூடும் வகையில் மூச்சுக் கவசம் பொருத்தப்படும். இது போதிய பயிற்சி இல்லாத சிறுவர்கள் முக்குளித்து நீந்த உதவியாக இருக்கும்.

மேற்கண்ட திட்டத்தின்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நான்கு சிறுவர்களும், திங்கட்கிழமை நான்கு சிறுவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :