தாய்லாந்து குகை: 12 சிறுவர்களும் கால்பந்து பயிற்சியாளரும் வெற்றிகரமாக மீட்பு

தாய்லாந்து குகை: மீட்புப் பணி வெற்றிகரமாக நிறைவு

பட மூலாதாரம், Getty Images

கடந்த 17 நாட்களாக தாய்லாந்திலுள்ள குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்கள், அவர்களது பயிற்சியாளர் மற்றும் இந்த மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த முக்குளிப்பு வீரர்கள், மருத்துவர்கள் என அனைவரும் குகையிலிருந்து பாதுகாப்பாக வெளியேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் சியாங் ராய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளரை இன்னும் சற்று நேரத்தில் அவர்களது குடும்பத்தினர் சந்திக்கவுள்ளனர்.

பட மூலாதாரம், Thai NavySEAL

முக்குளிப்பு வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சிறுவர்களை மீட்பதற்காக குகைக்குள் சென்ற மீட்பு குழுவில் இடம்பெற்றிருந்த நான்கு கப்பற்படை வீரர்கள் மற்றும் ஒரு மருத்துவர் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவர்கள் இன்னும் சில நிமிடங்களில் குகையை விட்டு வெளியே வந்துவிடுவார்கள் என்றும் மீட்பு பணியின் தலைவர் தெரிவித்திருந்தார்.

மீட்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் அனுமதிக்கப்பட்டுள்ள சியாங் ராய் மருத்துவமனையின் முன்பு கூடியுள்ள மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஜூன் 23 முதல் குகைக்குள் சிக்கித் தவித்தார்கள்

"இங்கிலாந்து கால்பந்து அணிக்கு தாய்லாந்து ஆதரவு தெரிவிக்கும்"

நாளை புதன்கிழமை நடைபெறும் 2018 உலக கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில், இங்கிலாந்துக்கு தாய்லாந்து ஆதரவு தெரிவிக்கும் என்று 64 வயது மனோப் சுக்சார்டு தெரிவித்திருக்கிறார்.

தாய்லாந்து குகையில் சிக்குண்டிருந்த 12 சிறார்களும், அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும் மீட்கப்பட்ட பின்னர், அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்ற மருத்துவமனைக்கு வெளியே பிபிசி செய்தியாளர் ஹோவார்டு ஜான்சனை சந்தித்த மனோப் இவ்வாறு கூறியிருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images

தாங் லுயாங் குகையில் சிக்குண்டிருந்த இந்த 12 சிறார்களையும், அவர்களின் பயிற்சியாளரையும் கண்டுபிடிக்க குகை ஆய்வில் சிறந்த வோலாதன், ரிச்சர்ட் ஸ்டான்டன் மற்றும் ராபர்ட் ஹார்பர் ஆகிய 3 பிரிட்டன் நிபுணர்கள் உதவியது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் டிரம்பும் மீட்புப் பணியாளர்களுக்கு தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார்.

"இது எதிர்பாரா ஆச்சரியமா, அறிவியலா அல்லது என்னவென்று எங்களுக்கு தெரியவில்லை. 13 ஒயில்ட் போர்ஸும் (சிக்குண்ட கால்பந்து அணியின் பெயர்) தற்போது வெளியே வந்துவிட்டனர்." என தாய்லாந்து கடற்படை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு தனது மரியாதையை தெரிவித்திருந்தார் பிரிட்டன் பிரதமர் தெரீசா மே

பட மூலாதாரம், Twitter/Theresa May

இன்று மீட்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அவசர ஊர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.

குகையில் சிக்குண்டுடிருந்த அனைவரும் (13 பேரும்) மீட்பு

தாய்லாந்திலுள்ள தாம் லுயாங் குகையில் சிக்குண்டிருந்த 12 சிறார்களும், அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதை தாய்லாந்து கடற்படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதி செய்தது.

ஒன்பதாவது சிறுவன் குகையிலிருந்து மீட்கப்பட்ட தகவலை தாய்லாந்து கடற்படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள எஞ்சிய ஐந்து பேரை மீட்கும் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 10.08க்கு தொடங்கி நடைபெற்றது. அப்போது, குகையில் சிக்கி இருக்கும் எஞ்சியுள்ள சிறுவர்களும், பயிற்சியாளரும் இன்றே மீட்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக மீட்பு பணிகளின் தலைவர் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, நான்கு சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமையும், மேலும் நான்கு சிறுவர்கள் திங்கள்கிழமையும் மீட்கப்பட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :